இந்திய செய்திகள் 2007 – ஒரு அலசல்

பொருளாதாரம்

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி (ஜி.டி.பி.) 9 சதவிகிதமாக இருப்பதாலும், அதிகரித்திருக்கும் அன்னிய செலாவணி கையிருப்புக்களாலும் இந்தியாவின் பொருளாதர வளர்ச்சியைப் பற்றி நாம் பெருமையாகப்ப் பேசிக்கொண்டாலும் தனி நபர் வருமானத்தில் பெரிதான முன்னேறம் இல்லை. தவிர இந்தியப் பொருளாதாரம் பெரிதளவில் விவசாயத்தையே சார்ந்திருக்கிறது. சுமார் 60 கோடி மக்கள் விவசாயத்தையே சார்ந்திருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி அவர்களின் வாழ்வில் எந்த விதமான முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பது நியாயமான குற்றச்சாட்டு!

ஒரு டாலர் மதிப்பு 46 ரூபாயாக இருந்து படிப்படியாக சரிந்து இப்போது 39.50 ரூபாயாக குறைந்திருக்கிறது, இந்த டாலர் மதிப்பு சரிவுக்கு முக்கியமான காரணங்களில் உலக அளவில் டாலர் பெருக்கம் என்று சொல்லப்படுகிறது. ஏற்றுமதித் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் (முக்கியமாக ஜவுளித்துறை) பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மற்ற பல நாடுகளிலும் இந்த சரிவு எதிர்பார்க்கப்பட்டு தங்களின் வணிக உக்திகளை மாற்ற்க் கொண்டிருக்கையில் இந்தியா மட்டும் ஏன் இதைபற்றி சிந்திக்கத் தவறி விட்டது எ விஷயம் அறிந்த பொருளாதார நிபுணர்களின் கேள்வி.

பங்கு மார்க்கெட்

சமீப காலமாக பங்கு மார்கெட்டில் சென்செக்ஸ் மதிப்பு அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு உயர்ந்துகொண்டே போக, அக்டோபரில் ஒரு நாள் பங்கு சந்தை சரிந்தது. காரணம் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் பங்கு சந்தையில் நுழைந்திருந்த (முகவரி தெரியாத) அன்னிய நாட்டு முதலீட்டார்கள் பலர் அரசாங்கம் விதித்த சில தாற்காக தடைகளினால் தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொண்டதேயாகும். பின்பு சென்செக்ஸ் பரமபத சோபான படம் போல அவ்வப்போது ஏறியும் இறங்கியும் வருகிறது. இதில் கவலை தரக்கூடிய விஷயம், பயங்கரவாதிகளின் பணமும் பங்கு சந்தையில் விளையாடி வருகிறது என்பதுதான். இதை உடனடியாகத் தடுத்து அன்னிய நாட்டு முதலீடுகளுக்கான சட்ட விதிகளை நாட்டின் பாதுகாப்பை மனதில் கொண்டு போர்க்கால அடிப்படையில் முறைப்படுத்த வேண்டியது அவசரம், அவசியம்.

கல்வி

பொறியியல், மற்றும் மருத்துவப் படிப்பிற்கு நுழைவுத் தேர்வு அவசியமில்லை என ஒரு வழியாகத் தீர்ப்பு வந்துவிட்டது. அடுத்த படியாக ஐ.ஐ.டி. போன்ற நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகிதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசியல் காரணங்களால் கொண்டுவரப்பட்ட சட்டம் , உச்சநீதிமன்றத்தின் தடை உத்தரவால் நிறைவேற்ற முடியாமல் போனது.

மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை ஐந்தரை ஆண்டுகளிலிருந்து ஆறரை ஆண்டுகள் ஆக்க வேண்டும் என்றும் கடைசி வருஷம் கிராம, மற்றும் தாலுகா, ஜில்லா மருத்துவமனைகளில் கட்டாயமாகப் பணியாற்ற வேண்டுமென்றும் கொண்டுவரப்பட்ட திட்டம், குறிப்பாகத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பைக் கிளப்பியது. மாணவர் போராட்டம் வலுப்பெற சாம்பசிவராவ் கமிஷனின் அறிக்கைக்காக மாணவர்கள் விரல்களைக் குறுக்கே வைத்துக் காத்திருக்கிறார்கள்.

விளையாட்டு

விளையாட்டு என்றாலே இந்தியர்களின் அகராதியில் முதலில் நிற்பது கிரிக்கெட் தான். இந்த வருஷம் மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை போட்டியில் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறியது பரிதாபம் (ஆறுதல் பாகிஸ்தானின் தோல்விதான்). சென்று வா, வென்று வா என வீரத் திலகமிட்டு அனுப்பிய இந்தியர்கள் உணர்ச்சிப் பிழம்பானார்கள். இந்தியாவில் கிரிகெட் விளையாட்டே வழக்கொழிந்து போய்விடுமோ என்ற நிலையில், கிரிக்கெட் வாரியம் செய்த அதிரடி மாற்றங்கள் புது ரத்தத்தைப் பாய்ச்சின.

20-20 ஓவர்கள் உலகக்கோப்பைப் பந்தயத்தில், தோனியின் தலைமையில் சென்ற இளைய தலைமுறை ஆஸ்திரேலேயா, பாகிஸ்தான் என்று போட்டியிட்ட நாடுகளை துவம்சம் செய்து இறுதியில் கோப்பையை வென்றபோது உலகக் கோப்பையில் வாங்கிய அடியின் வலி மறைந்தது. சரித்திரம் காணாத வகையில் வீரர்களுக்குக் கிடைத்த வரவேற்பும், குவிந்த பரிசுகளும் நம் மக்கள் கிரிக்கெட்டை எப்படி நேசிக்கிறார்கள் என்று காட்டின. யுவராஜ் சிங் ஒரே ஓவரில் அடித்த ஆறு சிக்சர்கள் உலகப்போட்டிகளில் ஒரு அரிய சாதனை. பாகிஸ்தானை டெஸ்ட் தொடரிலும், ஒரு நாள் போட்டியிலும் வென்று இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது.

டென்னிசில் சானியா மிர்சா தான் பங்கேற்ற பந்தயங்களில் சிறப்பாக விளையாடி முதல் முறையாக அமெரிக்க ஓப்பன் டென்னிசில் தர வரிசையில் 26வது இடத்திற்கு முன்னேறியது இந்திய டென்னிஸ் வரலாற்றில் ஒரு மைல் கல்.

மெக்சிகோவில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நம் விஸ்வநாதன் ஆனந்த் இரண்டாவது முறையாகப் பட்டத்தை வென்றது இந்திய ரசிகர்களுக்கு ஓர் ஆனந்த செய்தி.

சினிமா, சின்னத் திரை

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்த வருஷ சாதனை சிவாஜிதான். தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இவ்வளவு பொருட் செலவுடன், பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டு, ஒரே சமயத்தில் உலக முழுவதும் வெளியிடப்பட்டு, வசூலில் ஒரு சாதனையை ஏற்படுத்திய படம். உலகம் முழுவதும் ரஜினி ரசிகர்கள் வயது வேறுபாடின்றி வியாபித்திருப்பது இந்தப் படம் வெளிவந்தபோது தெரிந்தது. சும்மா பெயரைக் கேட்டாலே அதிருதில்ல என்று ரஜினிக்காகவே ஓடிய படம்.

சத்தமில்லாமல் வந்து ரசிகர்களைக் கவர்ந்த மிகச் சிறந்த படம் மொழி. கவிதைத்துவமாக அமைந்த இந்தப் பேசும் படம் பல வருஷங்களுக்குப் பேசப்படும். சத்யராஜின் புதுப் பரிமாணம், பெரியாரிலும், ஒன்பதுரூபாய் நோட்டிலும் முத்திரை பதித்தது.

மனதில் நின்ற மற்ற ஒரு படம் பள்ளிக்கூடம்.

சின்னத்திரையில் ஏற்கனவே இருக்கும் சானல்கள் போதாதென்று இன்னும் புதிய தலைவலிகள் கலைஞர் டி.வி., மெகா டி.வி. என. அரைத்த மாவையே அரைக்கும் இந்த சானல்கள் வழக்கம்போல சீரியல்களைக் கட்டிக்கொண்டு அழுகின்றன.

அசத்தப்போவது யாரு, கலக்கப்போவது யாரு, மஸ்தானா, மஸ்தானா, மானாட மயிலாட என்று வெவ்வேறு பெயரில் ஒரே வகையான நிகழ்ச்சிகள் அனைத்துச் சானல்களிலும் மக்களை தலையைப் பிய்த்துக்கொள்ள வைக்கின்றன. சென்ற வருட சீரியல்கள் இந்த வருடம் தொடர்கின்றன. அடுத்த வருஷங்களிலும் சாப விமோச்சனம் இல்லாமல் தொடரும்.

மறைவு

இந்த ஆண்டு முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நம்மை விட்டுப் பிரிந்தார். எழுத்தாளர்கள் லா.சா.ர., நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோரின் பிரிவு, எழுத்துலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது.

***

இந்தத் திரைப்படங்களின் பெயரைக் கேட்டவுடன் உங்களுக்கு சில தலைவர்கள்¢ன் பெயர் நினைவுக்கு வந்தால் ஜ.ப.ர. பொறுப்பில்லை. நினைவுக்கு வருகிறதா?

கூண்டுக்கிளி – மன்மோகன் சிங்
மேல்நாட்டு மருமகள் – சோனியா காந்தி
இம்சை அரசன் – மருத்துவர் ராம் தாஸ்
அன்புள்ள அப்பா – கலைஞர் கருணாநிதி
வளர்த்த கடா – தயாநிதி மாறன்
கலாட்டா கணபதி – சுப்ரமண்ய சாமி
மனைவி ஒரு மந்திரி – லாலுபிரசாத் யாதவ்
ஆசைமகன் – ஸ்டாலின்
மதுரை வீரன் – விஜயகாந்த்
போன மச்சான் திரும்பி வந்தான் – (கேரளா) கருணாகரன்
மகளே உன் சமர்த்து – கனிமொழி
எங்களுக்கும் காலம் வரும் – எல்.கே. அத்வானி
தில்லு முல்லு – தேவ கவுடா/குமாரசாமி
அல்லி தர்பார் – மாயாவதி
பட்ஜட் பத்மநாபன் – ப. சிதம்பரம்
ஆளப் பிறந்தவன் – ராகுல் காந்தி

About The Author