இந்த உணவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

நம் தெருவில் வழக்கமாகக் காய்கறி கொண்டு வந்து விற்பவர், தற்போது ஒரு ப்ளாஸ்டிக் பைக்குள் எலுமிச்சம்பழங்களை அடைத்து விற்கிறார்.உணவுப் பாதுகாப்பின் பொருட்டு இது சுகாதாரத்திற்கான தரமுன்னேற்றத்தின் அடையாளமா என நம்மை சிந்திக்க வைக்கிறது

நாம் ஓர் உயர்தர பேரங்காடிக்குச் செல்வோமானால் உணவுப் பொருட்கள் மிகவும் சுத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிப்பதைக் காணலாம்.உணவு தர ஆய்வாளர்கள் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்களில் இருந்து உணவு விடுதிகளில் பரிமாறப்படும்வரை ஒன்று விடாமல் அனைத்தையும் ஆய்வு செய்கிறார்கள்.

உணவின் தரத்திற்காகவும், தூய்மைக்காகவும் நாம் காட்டும் கூடுதல் அக்கறைக்கு ஏற்றவகையில் அதன் தர நிர்ணயத்தின் விலை அதிகமாகிறது. சில்லறை வணிகர்கள் இதன் மூலம் பின்தள்ளப்படுவதும் நிகழ்கிறது. இதுதான் உணவு வணிகத்தின் இன்றைய நடைமுறையாக இருக்கிறது.

நமக்கு சுகாதாரமான உணவிற்கான தேவை இருப்பினும் சிறு வணிகர்களுக்குப் பின் ஒளிந்துகொண்டு உணவின் தரத்திற்கும், பாதுகாப்புக்கும் கடுமையான சட்டங்கள் தேவையில்லை என்றும் சொல்ல முடியாது.

பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக இருக்கிறோம். அதனால் மிகப் பெரிய அளவில் ஊட்டச்சத்தின்றி வளரும் பெரும்பான்மையான மக்களுக்கு அதிக அளவில் உணவு உற்பத்தி செய்ய வேண்டியதுதான் முக்கியமானது என்றும் விவாதிக்க முடியாது. ஏனெனில் அதிக அளவில் உணவு உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமென்பதை ஒப்புக்கொண்டாலும், நாம் சுகாதாரமற்ற உணவை உட்கொள்ளுகிறோம் என்ற உண்மையை மறைக்க முடியாது. அதனால் பலவிதமான நோய்களுக்கு நாம் ஆளாகிறோம்.

அதிக அளவிலான உணவு உற்பத்தியின் அவசியத்தினால் உணவுப் பொருட்களின் பாதுகாப்பும் தரமும் பாதிக்கக்கூடாது. லாபத்திற்காக மனசாட்சியின்றி உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது மிகவும் அருவருக்கத்த பிரச்சினை. பாலில் யூரியாவைக் கலப்பது, மிளகாயில் சிவப்பு வண்ண ரசாயனப் பொருட்களை கலப்பது போன்றவற்றைக் கூறலாம்.

இந்த உதாரணங்கள் ஒரு பனிப்பாறையின் சிறு நுனிதான். இதைத் தடுக்கக் கடுமையான சட்டங்கள் விதிப்பது மட்டுமல்ல அதை செயற்படுத்துவதும் முக்கியமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு மெலாமின் என்ற கலப்படம் செய்யப்பட்ட பால் சீனாவில் பல குழந்தைகளைப் பலி வாங்கியது. இப்போது குதிரை மாமிசம், மாட்டிறைச்சியைப் போல ஐரோப்பிய நாடுகளில் விற்பனையாவது மிகவும் அதிர்ச்சி தரும் செய்தி.

இதை அடுத்து இரண்டாவதாக நமக்குக் கவலை தரும் செய்தி உணவுக் கூட்டுப்பொருட்கள். அதாவது, உணவு தயாரிப்பிற்கென அனுமதிக்கப்பட்ட உதவும் பொருட்கள். இவற்றின் பக்க விளைவுகள் என்னவென்று நமக்குத் தெரியாது. அறிவியல் இந்தப் பிரச்சினைகளைக் கண்டறியும்போது மிகவும் தாமதமாகி விடுகிறது. உதாரணமாக, சக்கரைன், அஸ்பர்டேம் போன்ற செயற்கை இனிப்பு தரும் பொருட்கள்.

மூன்றாவது சவால், நம் உணவுகளில் கலக்கும் நச்சுப்பொருட்கள். உணவுப்பொருட்களின் வளர்ச்சியின்போதும் தயாரிக்கும்போதும் அதில் கலந்துவிடும் ரசாயனப் பொருட்கள். பூச்சிக்கொல்லிகள் உணவில் கலந்து விடுவதனால் பலவித நோய்களை ஏற்படுகின்றன. ஆனால் ஊட்டச்சத்து பெற ஒரு சிறிய அளவிலாவது நச்சுகளை உடல் ஏற்றுக்கொள்வது தவிர்க்க முடியாததாக ஆகிறது. ஆனால் எப்படி அதை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு குறைந்த அளவிலான மட்டத்தில் வைப்பது? அதாவது பூச்சிக்கொல்லி மருந்துகளை ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பான எல்லைக்குள் இருக்க தரக்கட்டுப்பாடு எப்படி நிர்ணயிப்பது!

சில நச்சுப்பொருட்கள் உணவிலே இருக்கவே கூடாது என்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் சுற்றுப்புறச் சூழல் மையம் இந்திய சந்தைகளில் விற்கப்படும் தேனில் எதிர் நுண்ணுயிர்கள் கலந்திருப்பதைக் (ஆண்டி பையாடிக்ஸ்) கண்டுபிடித்தது. தொழில் ரீதியாக தேனீக்கள் வளர்க்கும் தயாரிப்பாளர்கள் எதிர் நுண்ணுயிர்களை தேனீக்களை வளர்ப்பதற்காகவும் அவற்றுக்கு நோய் வராமல் தடுப்பதற்காகவும் உபயோகித்திருக்கிறார்கள். தேனீக்கள் வளர்க்கும் தயாரிப்பாளர்களுக்கு இது அவசியமானது என்றாலும், நம் உண்வில் எதிர் நுண்ணுயிர்களைக் கலக்க வேண்டுமென்ற அவசியம் இல்லையே?

உணவுகள் பாதுகாப்பானதாக இருப்பதோடன்றி அவை ஊட்ட சக்தி உள்ளதாகவும் இருக்க வேண்டியதும் அவசியம். இன்றைய காலகட்டத்தில் பெரும் அபாயத்தைக் கொண்டிருப்பவை கலோரிகள் அற்ற, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் குப்பை உணவுகள்தான். இந்த உணவுகள் பலவித நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன என்பதற்கு சான்றுகள் உள்ளன.

சமூக அக்கறையுடன் ஊட்டச்சத்துள்ள உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதோடு, அவற்றின் வணிகமும் அந்நோக்கிலிருந்து விலகாது அமைய வேண்டும். அதற்கேற்ப மாற்றுகள் உருவாக்கப்படவேண்டும்.

(திருமதி சுனிதா நாராயண் அவர்களின் ஆங்கிலக் கட்டுரையின் தழுவல்)

நன்றி : பாடம் மாத இதழ்

About The Author