இன்றைய போசனத்துக்காகக் கடவுளே உமக்கு நன்றி!

ஒரு சிறு காட்டுவழிப் பாதையூடாக அந்த நாத்திகர் நடந்துகொண்டிருந்தார். தன்னைச் சுற்றியிருந்த இயற்கை அழகை அவர் வெகுவாக ரசித்தார்.

அடடா! இந்த நெடுதுயர்ந்த மரங்களின் கம்பீரமும், சலசலத்தபடி மேலிருந்து விழும் நீர்ச்சாரலும், ஒன்றையொன்று மிஞ்சும் அழகோடு ஓடித்திரியும் காட்டு மிருகங்களும், சிறகடித்தபடி பறந்து திரியும் வண்ணப் பட்சிகளும் என்று எத்தனை எத்தனை அழகு இங்கே! வியந்தபடியே அவர் மேலே நடந்தார்.

இடைவழியில் குறுக்கிட்ட ஒரு சிற்றோடையைக் கடந்தபோது, பின்னேயிருந்த புதரில் ஏதோ சலசலப்பு கேட்க சட்டெனத் திரும்பினார்.

ஆளளவு உயரத்தில் ஒரு கரடி. அது தன்னை நோக்கி வருவதை அவர் உணர்ந்தார்.

கால்கள் விரைந்தன. எமனே பின்னே நிற்பது போல ஓர் உணர்வு.

நடந்தவர் இப்பொழுது ஓட ஆரம்பித்தார். கொஞ்ச தூரம் ஓடிச் சென்றவர் ஒருகணம் நின்று பின்னால் திரும்பிப் பார்த்தார். கரடியும் விடுவதாயில்லை. தன் பெரிய உடம்பைத் தூக்கிக் கொண்டு அதுவும் ஓடிவந்துகொண்டிருந்தது.

மேலும் வேகமாக ஓட எத்தனித்தார். அந்த ஒற்றையடிப் பாதையில் எங்கேயும் ஒளிய முடியவில்லை. நேராக ஓடுவதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை.

ஒருகணம் ஓடுவதை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தார். கரடிக்கும் இவருக்கும் இடையில் இருந்த தூரம் குறைந்திருந்தது. இன்னும் சில நிமிடங்களில் தன்னைக் கரடி பிடித்துவிடலாம் என்ற பேரச்சம் அவருக்குள் தொற்ற ஆரம்பித்தது.

ஓடிக் கொண்டிருந்தவர் காலில் ஏதோ இடறியது. தலைகுப்புற விழுந்தார். சுதாரித்துக் கொண்ட எழ எத்தனித்தவர் மெல்லத் திரும்பிப் பார்த்தார். மிக நெருக்கத்தில் கரடி நிற்பதையும், தன்னைத் தாக்க ஒரு பாதத்தை அது உயர்த்துவதையும் கண்டு அதிர்ந்தார். 40 வருடங்களுக்கு மேலாகக் கடவுளையே தேடாத அந்த நாத்திகர்,

"ஐயோ கடவுளே! என்னைக் காப்பாற்று!" என்று உரத்துக் கூச்சலிட்டார்.

அவர் கூச்சலை அடுத்து அந்தக் காட்டில் மயான அமைதி!

சலசலவெனப் பாய்ந்தோடிய அருவி நீர் அப்படியே நின்றுவிட்டது. காற்றில் ஆடிய இலைகளெல்லாம் அசைவின்றி நின்றன. தாக்க வந்த கரடியும் ஸ்தம்பித்துப் போய் நின்றது.

அதையடுத்து மேல்வானில் ஒரு மின்னல் கீற்று! வானிலிருந்து ஓர் ஒலி.

"வருடக் கணக்காக என்னை மறுதலித்து வாழ்ந்து வநதவன் நீ! அதுமட்டுமல்ல, உன்னுடன் பழகியவர்களுக்கும், கடவுள் இல்லை என்று தீர்மானமாகச் சொல்லி வந்தவன் நீ! அந்த இல்லாத இறைவனை இன்று நீ கூப்பிடுகின்றாய். இன்றாவது, நீ கடவுளைத் தேட ஆரம்பித்து விட்டாய் என்று நான் நம்பலாமா" என்று கேட்டது அந்தக் குரல்!

கண்களைக் கூச வைக்கும் அந்தப் பேரொளிக்கு முகம்கொடுக்க முடியாமல் திணறிய நாத்திகர்,"திடீரென இன்று நான் கடவுளை நம்புகின்ற கிறிஸ்தவனாகி விட்டேன் என்று சொல்வது சுயநலம் கலந்த ஒரு முட்டாள்தனம். ஆனால், நீங்கள் ஒன்று செய்யலாம். இந்தக் கரடியை ஒரு நல்ல கிறிஸ்தவனாக்கி விடலாமே" என்றார்.

"மிக்க நல்லது" என்றது அந்தக் குரல். அடுத்த கணம் கண்களைக் கூசவைத்த அந்த ஒளி மின்னல் வேகத்தில் மறைந்தது. மரத்தின் இலைகள் காற்றில் படபடக்க ஆரம்பித்தன. அருவிநீரும் சலசலப்புடன் ஓட ஆரம்பித்தது.

நாததிகன் முன்னே நின்ற கரடி, தான் உயர்த்திய வலது பாதத்தைக் கீழே போட்டது. பின்பு அதே வேகத்தில் இரு முன்பாதங்களையும் உயர்த்தி, ஒன்றாகக் குவித்துத் தலை குனிந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கியது."எனக்குக் கிடைக்கப் போகும் இன்றைய போசனத்துக்காகக் கடவுளே உமக்கு நன்றி!" என்றது.

About The Author