இயற்கை உலகம் (16)

நில-நீர் வாழ் உயிரினம் (amphibian):

பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் கூறுவதெனில் நில-நீர் வாழ் உயிரினத்தை மீனுக்கும் ஊர்ந்து செல்லும் உயிரினங்களுக்கும் (reptiles) இடைப்பட்டதாகக் கருதலாம். சுமார் 4,400 நில-நீர் வாழ் உயிரினங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. தவளைகள், தேரைகள் (toads), நியூட்கள் (newts), அரணைகள் (salamanders) போன்ற பல உயிரினங்கள் இவ்வகையில் அடங்குபவை. பெரும்பாலான இவ்வகை உயிரினங்கள் தரையில் வாழ்பவையே; ஆயினும் தம் வாழ்நாளில் குறைந்த அளவுக்காவது இவை நீரிலும் வாழ்கின்றன.

தவளைகளும் அரணைகளும் தமது ஈரப்பசை கொண்ட தோல்கள் வாயிலாக நீர், நிலம் ஆகிய இரண்டு இடங்களிலும் சுவாசிக்க இயலும்; ஆனால் தேரைகள் பெருமளவு தமது நுரையீரல்களையே சார்ந்திருப்பதால் நீண்ட நேரம் நீரில் இருந்து சுவாசிக்க இயலாது. தேரைகளும் தவளைகளும் பல வழிகளில் ஒரே மாதிரி இருப்பினும், தேரைகளின் தோல் கரடு முரடாகவும் வறண்டும் இருப்பதோடு தவளைகளைப் போன்று தத்தித்தத்தி தாவிச் (hop) செல்லாமல் அசைந்து தள்ளாடிச் செல்லும் (waddle). சில தேரை முட்டைகள் கம்பியில் கோர்க்கப்பட்ட கழுத்திலணியும் நெக்லஸ்கள் (necklaces) போன்று இருக்கும்; தவளையின் முட்டைகள் குவியலாகக் காணப்படும்.

மிகப்பெரிய நில-நீர் வாழ் உயிரினமாகச் சீனாவின் இராட்சத அரணையைக் குறிப்பிடலாம்; இதன் நீளம் சுமார் 6 அடி வரை இருப்பதுண்டு.

தவளை முட்டைகள் குஞ்சு பொரிக்கப்படுதல் (hatching):

பெரும்பாலான நில-நீர் வாழ் உயிரினங்கள் (amphibian) தமது முட்டைகளைத் தண்ணீரிலேயே இடுகின்றன. அம்முட்டைகளைப் பிற உயிரினங்களிடமிருந்து காப்பாற்ற தடிமனான கூழ்மத்தால் (jelly) அவை மூடப்பட்டிருக்கும். இதற்கு உள்ளேதான் தலைப்பிரட்டை (tadpole) உருவாகிறது. குஞ்சு பொரித்து இது வெளியேறும்போது, நீளமான வாலைக் கொண்டு இதனால் நீந்த முடிவதோடு, செவுள்கள் (gills) வாயிலாகச் சுவாசிக்கவும் முடிகிறது. தலைப்பிரட்டை வளர்ச்சியுறும்போது முதலில் அதன் பின்னங் கால்களும் (hind legs) பின்னர் முன்னங்கால்களும் (fore legs) தோன்றி வளர்கின்றன. பிறகு நுரையீரல்கள் உருவாகிக் குட்டித் தவளையாக மாற்றமடைந்து நீருக்கு வெளியே தலையைத் தூக்கிச் சுவாசிக்க முடிகிறது. படிப்படியாக நீண்ட வால் சுருக்கமடைந்து வளர்ச்சியுற்ற தவளையாக மாறுகிறது.

மரத்தவளைகள் (tree frogs) தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் வாழ்பவை; மரத்தின் மையப் பகுதிகளில் உள்ள நீரில் இவை இருக்கும். இவற்றால் நீந்த முடியும் என்றாலும், பெரும்பாலான நேரத்தை நீருக்கு வெளியிலேயே கழிக்கும். மர இலைகளில் உள்ள புழு பூச்சிகளை உணவாக உட்கொள்பவை இவை; இவற்றின் பாதங்களில் ஒட்டுப்பசை (sticky) இருப்பதால் மரத்தில் எளிதாக ஏற முடிகிறது.

About The Author