இயற்கை உலகம் (19)

இவ்வுலகிலுள்ள மீன்களின் வகைகள்:

மீன் இனம் பல்லாயிரம் ஆண்டுகளாக இவ்வுலகில் வாழ்ந்து வரும் ஓர் இனமாகும். இதன் வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. நிலவுலகில் மனிதன் தோன்றுவதற்கு முன்பிருந்தே கடல்களில் மீன்கள் வாழ்ந்து வருவதாகக் கருதப்படுகிறது. இன்றைய உலகில் வேறெந்த முதுகெலும்பு கொண்ட உயிரின வகைகளை விடவும் மீன் வகைகளின் எண்ணிக்கை மிகுதியாகும். ஏறக்குறைய நாற்பதாயிரம் வகைப்பட்ட பல்வேறு மீனினங்கள் மலையருவி, சிறு குளம் குட்டை முதல் ஆழ்கடல் வரையான அனைத்துவகை நீர்நிலைகளிலும் வாழ்ந்து வருகின்றன.

மீன்களைப் பொதுவாக மூன்று வகையாகப் பிரிக்கலாம்: முதலாவது குருத்தெலும்பு உடைய (cartilaginous) மீன்கள்; சுறா மீன்கள் (sharks) தட்டை மீன்கள் (skates) போன்றவை இவ்வகை இனத்தைச் சார்ந்தவை. இரண்டாவது வகை, எலும்பு மீனின (bony fish) வகையாகும். இதன் உடல் முழுதும் எலும்புக் கூடால் ஆனது, மற்றும் எலும்புச் செதில்களால் (scales) மூடப்பட்டிருக்கும். மீன்களில் 90% இவ்வகையைச் சார்ந்தவையே; இவை மிகச் சாதாரணமாகக் காணப்படுபவை. இறுதியாக, நுரையீரல் மீன் எனப்படும் தனிச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்; இதற்கு செவுள்கள் (gills) மற்றும் நுரையீரல்கள் (lungs) ஆகிய இரண்டையும் கொண்ட சுவாசிப்புக் கருவி (breathing equipment) அமைந்துள்ளது.

நீருக்கடியில் (underwater) மீன் சுவாசித்தல்:

செவுள்கள் (gills) என்னும் சிறப்பு உறுப்புகள் இருப்பதால் மீன் இனத்தால் நீருக்கடியில் சுவாசிக்க முடிகிறது. செவுள்கள் என்பவை மீனின் தலைக்குப் பக்கத்தில் அமைந்துள்ள திசுக்களாலான (tissues) பகுதிகளாகும். இவற்றில் விரல் போன்று நீண்ட உறுப்புகளும் அவற்றில் நுண்ணிய இரத்த நாளங்களும் அமைந்துள்ளன. தண்ணீர் மீனின் வாயில் சென்று அதன் செவுள்கள் வழியே வெளியே வழிந்து செல்லும்; செவுள்களில் உள்ள இழைகள் (filaments) உயிர்வளியை (oxygen) நீரிலிருந்து உள்வாங்கி மீனின் இரத்தத்துடன் கலக்கச் செய்கின்றன. காற்றைச் சுவாசிக்கும் விலங்குகளில் உள்ள நுரையீரல்கள் (lungs) போன்று, மீன்கள் சுவாசிப்பதற்குச் செவுள்கள் செயல்படுகின்றன. தண்ணீர் தூய்மையின்றி சேறாக இருக்குமானால் , மீன் வேறொரு முறையில் உயிர்வளியைப் பெறவேண்டி இருக்கும். சில மீன்கள் நீரின் மேற்பகுதிக்கு வந்து காற்றிலுள்ள உயிர்வளியைப் பெற முயல்வதுண்டு; இருப்பினும் காற்றிலுள்ள உயிர்வளியைப் பெறக்கூடிய வகையில் மீனின் செவுள்கள் தகுதி வாய்ந்ததாக இருப்பதில்லை.

மீன்களால் நாற்றத்தை/மணத்தை முகரவும் இயலும்; ஆனால் அவற்றின் செவுள்கள் இதற்குப் பயன்படுவதில்லை. மீன்கள், தம் தலைப் பகுதியில் இரண்டு சிறிய மூக்குத் துளைகளைக் கொண்டிருப்பதால், அவற்றால் முகர்கின்றன. சில மீன் வகைகள் முகரும் உணர்ச்சியைப் பிற மீன் வகைகளை விட மிகுதியாகப் பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, சுறா மீன்களுக்கு (sharks) முகர்வுணர்ச்சி மிகுதியாக இருப்பதால், அவ்வுணர்வின் மூலம் தம் இரையை வேட்டையாடி உட்கொள்ள்கின்றன.

பிரான்ஹேஸ் (piranhas) என்னும் மீன் வகை மிகவும் அபாயமானதாகும். பசு, பன்றி போன்ற விலங்குகளின் தோலைச் சில நிமிடங்களிலேயே உரித்து அவற்றின் தசைகளை உணவாக உட்கொள்ளும் திறன் வாய்ந்தது இம்மீன் வகை.

About The Author