இயற்கை உலகம் (29)

பாலூட்டிகள் (mammals) பிற விலங்குகளுக்குமான வேறுபாடு:

பாலூட்டிகள் தாம் ஈன்றெடுத்த உயிரினங்களுக்கு பாலூட்டி வளர்க்கும் முதுகெலும்புள்ள (vertebrate) விலங்குகளாகும். எல்லாப் பாலூட்டிகளும் கதகதப்பான இரத்தம் (warm blooded) கொண்டவை. வளர்ச்சியின் குறிப்பிட்ட காலத்தில் இவை முடியுடன் இருக்கும்; சில நேரங்களில் பிறப்பின்போது இவைகட்கு முடியே இலாமலும் இருக்கலாம். உண்மையான பாலூட்டிகள் தம்மைப் போன்ற சிறிய பதிப்புகளை அல்லது இளம் உயிரினங்களை ஈன்றெடுப்பவையே.

ஆஸ்திரேலியாவிலுள்ள சில அசாதாரண பாலூட்டி வகைகள் முட்டை இட்டு இனப்பெருக்கம் செய்வது வியப்பான செய்தியாகும். முட்களுடன் விளங்கும் எறும்புத் தின்னி (anteaters) விலங்குகள் இவ்வகையைச் சார்ந்தவையே. மூஞ்சூறுகள் (shrews) மிகச் சிறிய பாலூட்டி விலங்காகும்; மிகப் பெரிய பாலூட்டி விலங்காக அறியப்படுவது ஆப்பிரிக்க யானை.

சீனக் கரடிகளின் (pandas) அழியும் ஆபத்து

சீனக்கரடிகள் எப்போதும் ஏராளமான எண்ணிக்கையில் உயிர் வாழ்ந்ததில்லை; ஆனால் வேளாண்மைத் தொழிலின் காரணமாக, சீனாவில் இக்கரடிகளின் இயற்கை வாழ்விடம் அழிந்து கொண்டு வருகிறது. உணவு பற்றாக்குறையாலும் இக்கரடிகளின் எண்ணிக்கை 1000க்கும் கீழேதான் உள்ளது.

சுற்றுச்சூழல் மனித இனத்தால் விரைந்து மாற்றப்படுகிறது; இம்மாற்றத்திற்கேற்ப விலங்குகள் தம்மை மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் கிடைக்காததால், பல விலங்கினங்கள் மறைந்து போகும் ஆபத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக, இந்தோனேசியாவில் மழைக்காடுகள் விரைந்து அழிக்கப்படுவதால் வாலில்லாக் குரங்கினம் (orangutan) உயிர் வாழ இடமின்றி ஏறக்குறைய மறைந்துபோகும் நிலையில் உள்ளது. புலி போன்ற சில விலங்கினங்கள் வேட்டையாடப்படுவதால் அவை அழிவை நோக்கிச் செல்கின்றன. ஆப்பிரிக்க யானைகள் அவற்றின் தந்தக்களுக்காக வேட்டையாடப்பட்டு அவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

About The Author