இயற்கை உலகம் (36)

தவளைகளின் நச்சுத் தன்மை

எல்லா தவளைகளும் நச்சுத்தன்மை கொண்டுள்ளன எனக் கூறுவதற்கில்லை; ஆனால் சில தவளைகள் பிற விலங்குகளை உண்டு வாழும் உயிரினங்களிலிருந்து (predators) தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நஞ்சைச் சுரப்பதுண்டு. தேரைகள் (toads), தாக்க வருவோரிடம் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள தம் தோலில் நஞ்சைக் கசிய விடும். பொதுவாக நாய்கள் மற்றும் பூனைகள் ஆகியவை இந்த நஞ்சுக்கு ஆட்படுவதுண்டு; இருப்பினும் அவை மிக மோசமாக இந்நஞ்சினால் பாதிக்கப்படுவதில்லை. நிலம் மற்றும் நீரில் வாழும் உயிரினங்களிலிருந்து தேரைகள் இவ்வகையில் தம்மைக் காப்பாற்றிக் கொள்கின்றன. வேறு சில தேரைகள் (cane toads) மிகப் பெரியவை மற்றும் அவற்றை உண்ணும் உயிரினங்களுக்கு மயக்கத்தை உண்டுபண்ணுபவை. சில வகைத் தவளைகள் மற்றும் தேரைகள் ஆகியவற்றின் தோல் பகுதி கொடிய நஞ்சினால் நிரம்பியிருக்கும்.

தென் அமெரிக்காவில் உள்ள அம்புத் தவளை மிகக் கொடிய நஞ்சைக் கொண்டுள்ளது எனவும் இந்நஞ்சு மிகுந்த வண்ணமயமாக ஒளிர்வதாகவும் அறியப்படுகிறது.


தவளைகள் குளிர்காலத்தில் காணப்படுவதில்லை

உருவம், நிறம் மற்றும் அளவு ஆகியவற்றில் தவளைகள் பல வேறுபாடுகளைக் கொண்டிருக்கும். அமெரிக்காவில் வாழும் சில சிறிய மரத் தவளைகள் (tree frogs) ஒரு அங்குல நீளமே உள்ளவை; சிறுத்தைத் தவளைகள் (leopard frogs) இரண்டு முதல் நான்கு அங்குல நீளம் கொண்டவை; வேறு சில வகைத் தவளைகள் (bull frogs) எட்டு அங்குலம் வரைத் தாவக் கூடியவை மற்றும் இவ்வகைத் தவளைகட்குப் பத்து அங்குல நீளமுள்ள கால்கள் உண்டு. இத்தவளைகள் குளிர் காலத்தில் என்ன செய்யும்? உலகின் வட பகுதியில் குளிகாலம் உண்டாகும்போது, தவளைகள் குளத்தினுள் சென்று தம்மைச் சேற்றில் புதைத்துக்கொண்டு குளிகாலம் முழுதும் அங்கேயே இருக்கும். கடுமையான குளிர் காலத்திலும் குளத்து நீர் உறைந்து போவதில்லை என்பதால் தவளைகளுக்கு உறைந்து போகும் ஆபத்து உண்டாவதில்லை.

தவளையின் கண்கள் அதன் தலைப் பகுதியில் அமைந்திருப்பதால் தண்ணீர்க்கு மேற்பரப்பில் உள்ளவற்றை அதனால் நன்கு காண இயலும் என்பதோடு தன் பகவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் முடிகிறது.

About The Author