இயற்கை உலகம் (41)

ஒட்டகச் சிவிங்கியின் (giraffe) கழுத்து மிகவும் நீண்டு இருத்தல்:

விலங்கினங்களில் மிகவும் உயரமானது என்று ஒட்டகச்சிவிங்கியைக் கூறலாம். அதன் விந்தையான வடிவமைப்பும் உடற்கட்டும் அது தனது உணவைப் பெறுவதற்கு வசதியாக அமைந்துள்ளது. ஒட்டகச்சிவிங்கி தாவரங்களை மட்டுமே உணவாக உட்கொள்ளும்; எனவே அதன் நீண்ட கழுத்து புல்வெளியற்ற வெப்பப் பகுதியில் வளரும் உயரமான மரங்களின் இலைகளை எளிதாகப் பறித்து உண்பதற்கு ஏற்ப விளங்குகிறது.

ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு 18 அங்குலம் வரை நீண்டிருக்கும்; மிகச் சிறிய தாவரங்களில் முள்ளுடன் இருக்கும் தழைகளையும் தனக்கு எவ்வித இடருமின்றி எளிதாகப் பறித்து உணவாக உட்கொள்ளும் திறமை இதற்கு உண்டு. இதன்  மேல் உதடு  நீண்டு விளங்குவதால் ஒரே நேரத்தில் பல இலைகளை  ஒன்றாகத் திருகி தனக்கு உணவாக இது உட்கொள்ளக்கூடியது.

ஒட்டகச்சிவிங்கி தரையிலுள்ள தண்ணீரை அருந்த வேண்டுமெனில், தனது கால்களை அகலமாகப் பரப்பி வைத்துக்கொண்டு தரையில் குனிந்து தனக்குத் தேவையான நீரை எளிதாகவும் லாவகமாகவும் அருந்தும்.

யானையும் கூட, அதனுடைய தும்பிக்கை மிக நீண்டு இருப்பதால், ஒரு அசாதாரணமான விலங்குதான். நீண்ட தும்பிக்கையானது அதன் மூக்கு மற்றும் மேல் உதட்டின் நீட்சியே ஆகும். இத்தும்பிக்கை யானைக்கு கை, புயம், மூக்கு மற்றும் உதடுகள் எனப் பல்வேறு உறுப்புகளாக விளங்குகிறது.

காண்டாமிருகங்கள் (rhinos) அழிவுக்கு ஆட்படுதல்:

சில விலங்குகள் இவ்வுலகிலிருந்து இயற்கையாகவே மெள்ள மெள்ள மறைந்துபோகும் நிலைமைக்கு உள்ளாகின்றன என்பது உண்மையே. காண்டாமிருகத்தைப் பொறுத்தவரை இது உண்மை எனக் கூற இயலாது. வேட்டையாடுதல் காரணமாகவே இவ்விலங்கின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனலாம். உண்மையில் வேட்டையாடுதல் காரணமாக இதன் எண்ணிக்கை 2,500க்கும் குறைவாகவே தற்போது உள்ளதாகக் கூறப்படுகிறது. பெரும்பாலான காண்டாமிருகங்கள் வன விலங்குப் பூங்காக்களில் மட்டுமே வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. காண்டாமிருகத்தின் கொம்பு 62 அங்குலம் வரையும் நீண்டு வளரக்கூடியது.

சிகப்பு ஓநாய் (red wolf) என்பது மற்றொரு அழிந்து வரும் விலங்கினமாகும். இதில் சுமார் 200 விலங்குகளே இப்போது பரமரித்து வரப்படுவதாகக் கூறப்படுகிறது.

About The Author