இருள் கரையும்போது…

அத்தைக்குக் கொஞ்சமும் இங்கிதமில்லை. நாசூக்கில்லை. ஞானக் குறைவா, ஞான மேன்மையா தெரியவில்லை. "ஏண்டி பெண்ணே, புருஷனோட படுத்துக்கறயா?"

கல்யாணமாகி ஒரு வருஷம் முடியவில்லை. அதற்குள் எல்லோருக்கும் அவசரம், கவலை. தாத்தாவாகணும், அத்தையாகணும், அக்காவாகணும், கொள்ளுத்தாத்தாவாகணும்… பாட்டியாகணும்…

"நல்ல கூத்துடி… வயசுக்கேத்த இங்கிதம் வேண்டாமோ. புருஷனோட அனுசரிச்சுப் போறியா… அவன் பிரியமா இருக்கானான்னு கேட்டிருக்கணும்…"

எல்லாம் ஒன்றுதான். இதில் இங்கிதமென்ன, நாசூக்கென்ன? அனைத்து மேன்மைகளுக்கு ஆண்களையும் அனைத்து சிறுமைகளுக்குப் பெண்களையும் காரணமாக்கி வகை பிரித்து கொடுமை பண்ணியது யார்? இதென்ன வஞ்சனை? தருமமோ, தாங்குமோ இது.

பூஜையறையில் ஏகப்பட்ட சாமிப்படங்கள். ஏகாதசி, துவாதசி, பௌர்ணமி, சத்யநாராயண பூஜை என்று ஏகப்பட்ட விவகாரங்கள் – விரதங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் நாமாவளி ‘வஜரே மானசம்… விட்டல விட்டல ஜெய் ஜெய் விட்டல…’ நாம சங்கீர்த்தனம். பிரசாதம், பக்தி கோஷம்… அம்பிகே என்று நீட்டி முழக்கிக்கொண்டு நெடுஞ்சாண் கிடையாக மாமனார் விழுந்து வணங்குவார். அப்புறம் வரிசையாக – பாட்டிக்கு சாமி வந்துவிடும்… "இந்த வீட்டில் ஒரு துர்தேவதை இருக்கு… பரிகாரம் பண்ணி விரட்டணும்" என்று முகம் சிவக்கக் கிறீச்சிட்டுக் கத்துவாள்… துர் தேவதை நானோ?

வீடா, பஜனை மடமா… லலிதா சகஸ்ரநாமம்… விஷ்ணு சூக்தம், ருத்ரம் சமகம் – அசல் வேத பாடசாலை மாதிரி இதென்ன கூத்து. பைத்தியக்காரக் கூட்டமா? வசமா மாட்டிக் கொண்டேனோ?

அவன் அன்பாய்த்தான் இருந்தான். ‘மைத்ரீ, என்ன வேணும்’ என்று ஆபீசுக்குப் போவதற்குமுன் கேட்கத் தவறியதில்லை. "நீதான் புஸ்தகப் புழுவாச்சே, என்ன புஸ்தகம் வேணும், வாங்கி வரேன்."

"மைத்ரீ ஏன் ஒரு மாதிரி இருக்கே. தலையை வலிக்கிறதா? டாக்டரிடம் போவோமா?"

"நீ ரெஸ்ட் எடுத்துக்கோ. எல்லா வேலையையும் அம்மா பாத்துப்பா."

அவன் உருகத்தான் செய்தான். சுற்றிச் சுற்றி வரத்தான் செய்தான். "காபி குடிக்கிறியா… ஸ்வீட் சாப்பிடறயா…?"

என்ன குறை? ஏதும் குறையில்லை. அவன் ஆடிப்போய் விடுவான். பெண்டாட்டி ஏதோ தீர்க்கமுடியாத நோய்வந்து அவஸ்தைப் படுவதைப்போல கிட்டத்தில் உட்கார்ந்து கொள்வான். ஆபீசுக்கு லீவு போட்டுவிடுவான். ஏதாவது ஸ்லோகத்தை முணுமுணுப்பான். ஏகப்பட்ட தெய்வங்களிடம் வேண்டுகோள் வைப்பான். நெற்றி நிறைய விபூதி பூசிவிடுவான். "பயப்படாதே… உனக்கு ஒண்ணுமில்லை. நம்ம தெய்வம் சக்தி வாய்ந்தது. எந்தப் பிரச்சினைன்னாலும் தீர்ந்துவிடும்."

உக்ரகாளியின் படத்துக்கு முன்னால் உட்கார்ந்து கொள்வான். ஏதோ உச்சரிப்பான். சோர்வின்றி, அயற்சியின்றி இதென்ன ஆவேசம்? முகம் உக்ரகாளியின் சிவப்பாய் மாறி… தொங்கும் நாக்கு ஒன்றுதான் பாக்கி. "மந்திரத்தை விடாம நூறு ஆவர்த்தனம் சொல்லிவிட்டேன். அம்பாளோடு பேசினேன். உன் குடும்பத்தையே காப்பாத்த வந்தவள் நான் என்று என்னோடு பேசினாள். பயப்படாத என்றாள்"

ஒரு சின்னத் தலைவலிக்கு இந்த அல்லாடல். பாசமா, பைத்தியக்காரத்தனமா? மாமனார் ‘திருப்பதிக்கு வரேன், உண்டியல் காணிக்கை செலுத்தறேன்’ என்று உருகுவது வேடிக்கைதான்.

‘மைத்ரீ, உன்னைச் சூழ எவ்வளவு அன்பின் விகசிப்பு’ என்று ஒரு சிறு குருவி எட்டிப் பார்த்தது.

சிரிக்க முடியுமோ?

இருளின் தேவியே. இந்த அடர்த்தியான காரிருளிலிருந்து விடுதலை சாத்தியமா சொல். உன்னை நமஸ்கரிக்கிறேன். சாத்தியமான வழிகளையெல்லாம் திறந்து காட்டு. இந்த மூச்சுத் திணறலிலிருந்து விடுதலை தா.

ஊரே அஞ்சி நடுங்கும் பனிக்குளிர். தெருவெங்கும் அடர்த்தியான கருப்பு மை. அறையில் மெலிதான மின்விசிறி சப்தம். ரிதம், ராகம், ஏதோ ஒரு இழையைப் பிடித்துக்கொண்டு மேலேறினால் சரசரவென வெளியே வரும். ‘யதுகுல காம்போதி’யின் உருவாய் இந்த நேரத்தில் யார் பாடுவது? ‘நிநு சூட வச்சு பகனி கரம்பு… மனசு ஹெச்சரிக்க க க… ஹே ராமச்சந்ரா…’

நிசி. தூரத்தில் கூகையின் கோபமான குரல். யார்மீது எதன் பொருட்டு இந்தச் சினம். அதற்கான உறவென்ன?

கிழக்கு நோக்கி உட்கார்ந்து மூக்கைப் பிடித்துக் கொண்டிருந்தான். வாய் எதையோ முணுமுணுத்துக் கொண்டிருந்தது. எந்தத்தேவதையை உபாசிக்கிறான்? எதற்காக உபாசிக்கிறான்? என்ன பயன்கருதி? சூரிய கிரணங்கள் வருவதற்குள் முடித்துவிடுவான். குளித்து முடித்து ஈர வேஷ்டியோடு உடம்பு நடுங்க நடுங்க ஏனிந்த வதை! வந்த புதிதில் திடுக்கிட்டுப் போனாள். என்ன இது? மந்திரவாதி குடும்பமோ? பழகிப் போன பின்னும்கூட நம்பமுடியவில்லை.

அக்னி மைத்ரீயை மட்டும் சுடுமோ, இதம் தருமோ? ஓ அக்னி தேவனே, உலகை ரட்சிப்பவனே. எல்லாம் புரிந்து கொண்டவனே, அழுக்குகளைச் சுட்டெரிப்பவனே? என்ன உத்தேசம்?

கேள்விகள் இருந்தன கோடிகளில் – யாரைக் கேட்பது? எல்லாமே ஒரே ரகம். இந்த உலகின் மேலான இன்பத்தை இந்தப் பிரார்த்தனையின் மூலம் நிறைவேற்றுவாய். என்னை ஒளியுலகிற்கு அழைத்துச் செல்வாய். ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் மந்தகாசமாக சிரிப்பதோடு, மெலிதாக மங்கள வாத்யங்கள் முழங்க, கம்பீர புருஷனாய் அடிக்கடி வந்து தோன்றும் உன்னை அடையாளம் காட்டு! கனவில் வந்ததால் பொய்யாகி விடுமோ?உன் வருகைக்குப் பின்னரான பிச்சிப்பூ வாசம் – அதன் இதம் தழுவிச், சூழ நிற்பதே நிஜம்!.

ஒருக்களித்துப் படுத்தாள். அவன் உபாசனை முடியவில்லை. உக்ரகாளியின் ரௌத்ர முகமாகவே அவனுடையதும் மாறிப் போயிருந்தது. கைகள் விரைப்பாக, வித்யாசமாக, இயல்பு துறந்து முறுக்கிக் கொண்டிருந்தன. சிங்கம் பிடரியைச் சிலுப்பிக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.

உடம்பு நெருப்பாய்த் தகித்தது. ‘அக்னி தேவனே! நீ வாழ்த்துதலுக்குரியவன். என் மகிழ்ச்சியை மீட்டுத் தருவாய். என்னைத் துன்பங்களுக்கப்பால் எடுத்துச் செல்வாய். அனைத்திற்கும் முதலானவனே, என் மேல் கருணை கொள்வாய். எனக்குரியதை வழங்கும் கடமையுடையார்க்கு அந்த மனநிலையைத் தருவாய்..’.

என்ன தூக்கமா மைத்ரீ…? என்று கேட்பது மாதிரி இவளைத் திரும்பிப் பார்த்துவிட்டு பழையபடி உக்ரகாளியிடம் பேச ஆரம்பித்தான். என்ன பேசுவான், என்ன பெறுவான்?

விடிந்திருந்தது.

காலைவெயில் சுளீரென்று முகத்திலடித்தபோதும் எழுந்திருக்க மனசில்லை. உறக்கமும் விழிப்புமற்ற நிலையிலும் அர்த்தமற்ற கனவுகள். ஆனாலும் ஏதோ ரம்மியமான விஷயங்களோடு சேர்ந்த கனவுகள்.

உஷைதேவியை எல்லோரும் பார்க்கின்றனர். சிறப்புமிக்க தேவமகள். பனிப்புகையில் மிதந்து வருகிறாள். சிலநேரம் ரதத்தில் வருகின்றாள். உலகமே கரகோஷம் செய்கிறது. முன்வரிசையில் நான். எனக்காகவே இந்த ரத யாத்திரை என்றறியாத ஏராளமானோர் குதூகலிப்பது அர்த்தமற்றது என்றறிவீர்களா?

கூடம் அமர்க்களப்பட்டது. எங்கும் சாம்பிராணிப் புகை. வழக்கம்போல் லலிதா சகஸ்ரநாமம் சௌந்தர்ய லகரி, அபிராமி அந்தாதி என இரைச்சல். அதிகாலையிலேயே குளித்துவிட்டு குளிரில் நடுங்கியபடி – சின்னக்குழந்தைகளும் விபூதி பூசி குங்குமம் இட்டுக்கொண்டு ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல வேஷம் கட்டிக்கொண்டு என்ன இது? வன்முறை தவிர வேறென்ன?

"எங்கே மைத்ரீ… தூங்கறாளா… ஏன் இப்படி அடிக்கடி உடம்பு படுத்தறது? வா, டாக்டரிடம் காட்டலாம்னா மாட்டேன்னு பிடிவாதம். என்னாச்சுன்னு தெரியலையே?"

"நீயாவது என்ன ஏதுன்னு விசாரிச்சியாடா… பிடிச்சுதுன்னு சொன்னதாலேதானே கல்யாணத்துக்குச் சம்மதிச்சது… இப்ப என்ன எதையோ பறி கொடுத்த மாதிரி வெறிக்க வெறிக்கப் பார்த்திண்டு…?"

"இன்னிக்கு வெளியே போயிட்டு வருவோம்" என்ன அதிசயம் என வியக்கும்முன் "கடற்கரைக்குப் போவமா? இன்னிக்கு நம் கல்யாண நாள். ஓடிப் போச்சே ஒரு வருஷம்…"

‘மனசு லேசாகக் குதூகலித்தது. மெல்லிய வருடலும் சாத்தியமோ இங்கே. மார்பகங்களின் செழுமையில் உன் முரட்டுப்பிடி நிகழுமோ இங்கே. உன் மூர்க்கத்தின் சுகம் நடைபெறுமோ, சம்பவிக்குமோ… என் மெத்தென்ற மர்மப் பிரதேசங்களில் நகக்கீறல் பதிந்து மேன்மைப்படுத்துமோ?’

அலையலையாய் மனசு விரிந்தது. சமுத்திர நீர்ப்பரப்பு குறுகி கோடாய் அருகில் நின்றது. இதென்ன பெரிய கூட்டம். மணல் தெரியாத கூட்டம். சற்று பரபரப்போடு நாலு தலைகளை விலக்கிவிட்டுப் பார்த்தபோது மேடையில் ஆஜானுபாகுவான சாமியார். அவருடைய நீளத்தாடி கடல்காற்றில் அப்படியும் இப்படியுமாய் ஆடிக் கொண்டிருந்தது.

"உலகம் அநித்யம்… மோட்சத்திற்கான வழிகள் – குண்டலினி யோகம்…" என கம்பீரமான குரலில் பேசிக் கொண்டிருந்தார். "அலையும் மனக்குதிரையைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார் உரக்க. இவன் கண்களில் அசாத்ய ஒளி. இதற்காகவே காத்திருந்ததுபோல் சரியான இடமாகப் பார்த்து உட்கார்ந்துகொண்டான். "நீயும் உட்கார்" என்றபோது மனசுக்குள் இருள் – சுற்றிலும்கூட இருள். காரிருள்.

‘காலம் பூமியைச் செலுத்துகிறது. காலத்தின் ஆட்சியிலிருந்து யார் தப்பிக்க முடியும். அது ஆயிரம் கண்களுடையது. அது என்ன சொல்கிறது என்பது குறித்துத்தான் வாழ்க்கை. எனக்கு என்ன விடை சொல்லும். என்னை எங்கே கொண்டுபோய் இறக்கிவிடும். நரகத்திலா, மேலான நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியிலா, தாமரைப் புஷ்பங்களின் இதத்தின் மேலா’!

எழுந்து குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டு வரும்போது பூஜை முடிந்திருந்தது. துளின்னா விரதம் பூஜை புனஸ்காரம் மடி ஆசாரம் – எதில் பொருந்திப்போக முடியும்?

"மைத்ரீ… ராத்ரி தலையை வலிக்கிறதுன்னியே… தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டோம். இன்னிக்கு சத்யநாராயண பூஜை. மனசுக்கு நிம்மதியா இருந்துது. அப்பா இதெல்லாம் சிரத்தையாக ஈடுபடுவார். குடும்ப க்ஷேமத்திற்காக"- அவன் ஆபீசுக்குக் கிளம்ப ஆயத்தமானான். "சாயங்காலம் வர லேட்டாகும். மந்தவெளியிலே ஒரு மகான் வந்திருக்காராம்… ஹரித்வாரிலிருந்து… தரிசனம் பண்ணிட்டு வரேன். சொன்னது பலிக்கிறதாம். அங்கேயே சாப்பிட்டு வந்திடறேன். நீ தூங்கு."

மனசை பெரிய பாறை அழுத்தினாற்போல் வலி. தாள முடியாத இம்சை. ரத்தம் பீறிட்டு வருமோ? உடம்பிலும் உள்ளிலுமாய் குறுக்கும் நெடுக்குமாய் அடர்த்தியான ரத்தக் கோடுகள். ‘மயிலிறகு வருடலாய் தடவிக் குளிர்விக்க வருவாயா தேவனே’

இரவுப் பொழுது எப்போதும் நீண்டு கொண்டேதான் இருந்தது. எவ்வளவு நீளம். வட துருவத்தைத் தொடும் நீளம். வானத்தைத் தொட்டு அதற்கப்பாலும் செல்லும் நீளம். செல்லலாமோ, போகலாமோ. பனியுடன் ஜில்லிப்பில் உறைந்து போகலாமோ – வானம் தாண்டிய மர்மங்களைக் கைக்கொள்வேன்.

"த்தோப்பாரு மைத்ரீ… சங்கரலிங்க சுவாமிகள் படம். இருநூறு வருஷங்களுக்கு முன்னால் இருந்த மகான். தண்ணீரில் நடப்பாராம். நெருப்பில் குளிப்பாராம். முந்நூறு வருஷம் வாழ்ந்தாராம். இப்பகூட எங்கோ இமயமலைப் பக்கம் யோக நிஷ்டையில் இருப்பதாகப் பேச்சு. அவருடைய படம் கிடைச்சது நம்ம பாக்யம்" வீடே விழுந்து விழுந்து சேவித்தது. அக்கம் பக்கம் எதிர்வீடு என ஒரே கும்பல். பஜனை, வெண் பொங்கல். பிரசாதம்.

‘கடனே’ என்று ஓர் ஓரமாக நின்று பார்க்கும் மைத்ரீ. "ஏன் ரங்கம். உன் நாட்டுப் பொண் இப்படி ஒட்டாம இருக்கா." தினம் நூறு கேள்விகள் யாருக்கும் விடையில்லை. தெரியவும் இல்லை.

‘எனக்குத் தெரியுமே’ என்று கிறீச்சிட்டுவிட்டு வேப்பமரத்துக் குருவி இறக்கைகளைப் படபடத்தவாறே ஒரு சுற்று சுற்றிவிட்டுப் பறந்தது.

எங்கும் புகை மூட்டம். அறைக்குள் மங்கலமான இருட்டு. படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள். மாலை பூஜையின்போது மாமியார் கொடுத்த துண்டு மல்லிகைச்சரம் – கூந்தலிலிருந்து வாசனை கம்மென்று உடம்பைச் சுற்றி மனசைச் சுற்றி – சுற்றிச்சுற்றி…

ஒரு மாத தாடியோடு அவன் தரையில் படுத்துக் கொண்டிருந்தான். ஏதோ விரதம் ஏதோ ஒரு கோயிலுக்கு பாத யாத்திரை. நெற்றியில் சந்தனக் கீற்று… பெரிய குங்குமப் பொட்டு, கழுத்து நிறைய மாலைகள். காவி வேஷ்டி…

காலையிலிருந்தே இம்சை தொடங்கிவிட்டது. மனசின் பாரம் குறைய வழியேது. "அஷ்டலட்சுமி கோயில் லட்சார்ச்சனையாம். இவன் கூப்பிட்டானாம். மாட்டேன்னுட்டியாமே. இந்த வீட்டிலே ஆம்பிளை பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது. எல்லோரும் பொறுப்பாகத்தான் இருந்தா – இருக்கா. அதனால்தான் இப்படி மாளிகை மாதிரிவீடு. ஏகப்பட்ட நிலம் நீச்சுகள். ஏழு தலைமுறைக்குச் சொத்து… ஊர் மரியாதை."

உடம்பு அசதியா இருந்துது.

வெளியே புயலா பேய்க்காற்றா. பெருமழையா வெள்ளமா – தெரியாது. ஜன்னலைத்தாண்டி என்ன நடந்தாலென்ன? என் உலகம் நாலு சுவர்களுக்குள்.

உடம்பின் சூடு உள்ளங்கால்களிலிருந்து தொடங்கி கிறுகிறுவென மெல்லப் பரவி சகல பாகங்களிலும் ஊடுருவி மண்டையில் ஏற – கொதிக்கிறது. இரு கூறாகப் பிளந்துவிடுமோ.

‘அக்னியே உன்னை நேசிக்கிறேன்! நீ தூய்மைப் படுத்துபவன். அழுக்குகளைச் சுட்டெரிப்பவன். இயற்கையின் அங்கமானவன். நானும்கூட அப்படித்தான் என்பதால், என்னின் அங்கமாகிறாய். என்னுடைய மர்மப் பகுதிகளையோ இதயத்தையோ சேதப்படுத்தாமல் இருப்பாயாக.’

அவன் குறட்டைவிட்டு அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். இவளின் மெல்லிய பாதங்களின் சூட்டில் கைகளின் கதகதப்பில் மெல்லப் புரண்டான். லேசாகத் தூக்கம் கலைந்து "மைத்ரீ… தூக்கம் வரலியா? நல்ல சொப்பனம் கண்டேன். தகதகனு தங்க ஒடம்பு – ஒரு கடவுள். சட்டுனு என்ன கடவுள்னு புரியலே. மெதுவா சிரிச்சுண்டே என்னை நோக்கி வந்துது. ஏதாவது பேசணும்னு நெனைச்சேன். அதற்குள் எழுப்பிவிட்டாய்…" கனவினைத் தொடர்ந்து பார்க்க விரும்பியவனைப்போல் கண்களை மூடிக்கொண்டான்.

– மைத்ரீ –

எல்லாவற்றையும் நிர்ணயிப்பவனும் எதையும் கட்டுப்படுத்தி ஆள்பவனுமாகிய அக்னியே. உன்னை திரும்பவும் திரும்பவும் அழைப்பதில் எனக்கு அலுப்பில்லை. மழையை வர்க்ஷிப்பாய். என்னைக் குளிர்விப்பாய்! என் உடம்பு ஜில்லிடட்டும்!

மெல்ல கதவைத் திறந்துகொண்டு வந்தபோது தெரு அரவமற்றுக் கிடந்தது. இருட்டில் உலவும் பழக்கப்பட்ட தெரு நாய்களும் உறங்கிப் போயிருந்தன. எவரின் அழைப்பில் இந்தப் பயணம்?

மைத்ரீ… யாரழைப்பது? நிழலாய்த் தெரிந்தது யார்? நிஜமா கனவா?

அவன் உசரமாக புஜ பராக்ரமத்தோடு இருந்தான். உலகத்தையே மயக்கிப் போடவல்ல ஒரு மெல்லிய சிரிப்பு. எத்தனை உயரம். அண்ணாந்து பார்த்தபோது, தலை வானத்தை இடித்துக் கொண்டிருந்தது. நீளமான கைகளால் வெற்று வெளியில் எதையோ பிடிப்பதைப்போல அளைந்தான். அவன் பேசவில்லையாயினும் அவன் செய்தி புரிந்தது. ஆயிரம் மைத்ரீக்களை அடித்துப்போடும் வல்லமை அதில் இருந்தது. வீழ்ந்தேனோ. அவனின் கண்கள் நியாயம் பேசின. எனக்கான அறம் பேசின, அதை ஏற்பது தர்மம். அனைத்தினும் மேலான தர்மம்.

"மைத்ரீ…"

மங்களகரமான வாத்யங்கள் முழங்கின. ஒளியுலகிற்கு அழைத்துச் செல்லும் பாதை மங்கலாகத் தெரிந்தது. மெல்லமெல்ல புகைவிலகி தெளிவாகவே தெரிந்தது. ரதத்தில் பூட்டியிருந்த ஏழு குதிரைகளும் பாதையோரம் நின்று கம்பீரமாகக் கனைத்துக் கொண்டிருந்தன.

அவனுடைய அந்த சின்ன அணைப்பிலேயே உடல் நொறுங்கிப்போய் விடும் போலிருந்தது. முதுகுக்கடியில் சருகுகள் சரசரத்து தீனமாக நசுங்க ஆரம்பித்தன.

சற்றே வேகமாக வீசிய காற்றில் உடம்புத் துணிகள் வழுக்கிக்கொண்டு கழன்று எங்கோ பறந்து போயின. ஓர் இனிய சங்கீதத்தின் உச்சபட்ச மேன்மையை மனசு வாக்கு உடம்பு என ஐந்து புலன்களும் கொண்டு நெகிழ்ந்தன. பாரிஜாதப் பூவின் மணம் குப்பென்று பரவியது.

மெல்லிய இதமான நீரூற்று உடம்புக்குள் புகுந்து ரசாயன வித்தைகள் செய்ய – எங்கே நிற்கிறேன். பளீரென ஒரு மின்னல். அவன் மந்தகாசமாகச் சிரிப்பது தெரிந்தது. எழுந்தான். ‘மைத்ரீ’ என சன்னமாய் காதுகளுக்குள் கிசுகிசுப்பது புரிந்தது.

அமைதி, எங்கும் பரிபூரண அமைதி. இதை விவரிக்கவும் முடியுமோ. பாபங்களற்ற – களங்கமற்ற – தளைகளற்ற நான் சொர்க்கத்தின் உச்சியில் நின்று பார்க்கிறேன் பூவுலகின் துச்சத்தை. என் உயரம் அபாரமானது, அழகானது. மைத்ரீ என உரக்க அழைத்தாலும் காதில் விழாது. அவ்வளவு உசரத்தில் –

ஆறாய்ப் பெருகும் வியர்வையைத் துடைத்துக்கொள்ள புடவையைத் தேடினாள். உள்ளே வந்து படுத்தபோது நீண்ட நாட்கள் வைரியாய் இருந்த உறக்கம் தழுவ –
        
– வெளியே பேய் மழை –

About The Author

3 Comments

  1. Vijayalakshmi

    Superb, and it is hard for others to intake the story because of its high philosophy. Those, who have experienced such problems may realise the meaning of the story easily.

Comments are closed.