இவன் ஒரு விதம் (1)

“என்னங்க… இங்கே வாங்களேன்… வந்து பாருங்க…!” சொல்லியவாறே ஜன்னல் வழியாக வெளியே மறைத்திருந்த மரக் கிளைகளின் அடர்ந்த இலை அடுக்குகளின் வழியே பார்த்துக் கொண்டிருந்த சாந்தியின் பின்னால் போய் நின்று, இவனும் உற்றுப் பார்த்தான்.

“அங்கே பார்த்தீங்களா? என்ன அநியாயம்?”

“மெதுவா…மெதுவா…எதுக்கு சத்தமாப் பேசுறே?…” என்றான் இவன்.

பொழுது அப்பொழுதுதான் விடிந்திருந்த வேளையில் தெருவும், மனிதர்களும், இன்னும் இயங்க ஆரம்பிக்காத நேரத்தில், அவளின் குரல் சற்று சத்தமாகத்தான் இருந்தது. மாடியிலிருந்து பார்க்க பச்சை இலைகளின் நடுவே துல்லியமாய்த் தெரிந்தது அது.

“பாருங்களேன்.,..எங்கே தள்ளுறாங்க பாருங்க…?”

எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. கூடவே மனதுக்கு அருவருப்பாகவுமிருந்தது.

“அய்யய்ய…காலங்கார்த்தால என்ன கண்றாவி இது?” – என்றேன்.

பக்கத்து எதிர்வீட்டின் வாசலில் ஒரு பெருச்சாளி செத்துக் கிடந்தது. உடல் ஊதிப்போய்க் காணப்பட்டது. வாயில் துணியைக் கட்டிக் கொண்டு அந்த வீட்டுப் பெண்மணி அதைத் துடைப்பத்தால் பெருக்கி, நேர் எதிர் வீட்டுப் பகுதியில் குப்பையோடு சேர்த்துத் தள்ளிக்கொண்டிருந்தாள்.

“அவுங்க வீட்டுப் பக்கத்துப் ப்ளாட் சும்மா கெடக்கு. புதர் மண்டிப் போச்சு. இடம் வெறுமனே கிடந்தாலே, இதெல்லாம் வரத்தான் செய்யும். ஏதாச்சும் நாயோ, பூனையோ, சாகடிச்சுக் கொண்டு வந்து போட்டிருக்கும்…”

“அது சரிங்க…அதுக்காக இப்டியா? அதை யாராச்சும் ஆளைக் கூப்பிட்டு அப்புறப்படுத்தாம இப்படியா மொத்தமாத் தள்ளி விடுவாங்க? யாரும் பார்க்கமாட்டாங்கன்னு நினைக்கிறாங்களா? அல்லது யார் கேட்கப் போறாங்கன்னு நினைச்சிட்டாங்களா? இது தப்பில்லை…?”

“அதுக்குக் காசு செலவு பண்ணனுமே? அப்பத்தானே நடக்கும்? யாரும் கவனிக்கிறதுக்கு முன்னாடி இப்படிப் பொசுக்குன்னு தள்ளிவிட்டுட்டா, பிறகு என்ன ஆவுதுன்னு வேடிக்கை பார்க்கலாமில்ல?

அதான்…! நீ கவனிச்சதில்லை போலிருக்கு…அந்தம்மா தினசரிக் குப்பைகளையே இப்படித்தானே தள்ளுவாங்க…அதப் போலவே இதையும் செய்றாங்க…அவுங்க வீட்டு காம்பவுண்ட் சுவருக்கு ஒரு அடி தள்ளித்தானே தினமும் குப்பையைக் குவிப்பாங்க…நீ பார்த்ததில்லையா?

“பார்த்திருக்கேன்…பார்த்திருக்கேன்…பக்கத்து வீட்டு மாமிதான் தினமும் அந்தக் குப்பையையும் சேர்த்து எரிக்கிறாங்க…ரெண்டு பேரும் தோழிகளோ என்னவோ? யார் கண்டது?”

“தோழியுமில்லே…கோழியுமில்லே…எதுக்கு அநாவசியச் சண்டைன்னு எல்லாஞ் சேர்ந்து எரிஞ்சிட்டுப் போகட்டுமேன்னு செய்திட்டிருக்காங்க…அவ்வளவுதான்…”

“அது தப்புங்க.!..சொல்ல வேண்டாமா? ஒரு முறையாவது சொன்னாத்தானே தெரியும் அவுங்களுக்கும்…”

“உன்னை மாதிரி இப்படி நினைக்கிற நிலையெல்லாம் கடந்தவங்களா இருக்கும்…மனுஷங்கன்னா பல மாதிரிதான் இருப்பாங்க…இதிலென்ன கௌரவம் இருக்குன்னு நினைக்கிற பரந்த மனசா இருக்கும்…”

“அப்போ அது எனக்கு இல்லைங்கிறீங்க…அப்படித்தானே.? ..புரியுது…புரியுது…”

“நான் எங்க சொன்னேன்? நீயா அப்படி நினைச்சிட்டா அதுக்கு நா என்ன பண்ணட்டும்?”

“அப்படிச் சொரணை இல்லாம இருக்க முடியாதுங்க…நானா இருந்தா சொல்லத்தான் செய்வேன்…தெரியாதவங்களுக்கு சொல்லித்தான் புரிய வைக்கணும்…”

“ரொம்ப சந்தோஷம்…இப்போ இந்தப் பெருச்சாளிப் பிரச்னைக்குப் போய்ச் சொல்ல வேண்டியதுதானே?”

“நல்லாயிருக்கு நீங்க பேசுறது? என் வீட்டுப் பக்கமாவா அது வந்திருக்கு? அதை எதிர் வீட்டுக்காரங்கல்ல கேட்கணும்?”

“ஆக, பிரச்னை நம்மை எட்டாதவரைக்கும், நம்மைப் பாதிக்காதவரைக்கும் நாம அதில தலையிடமாட்டோம்… எதுக்கு வம்புன்னு ஒதுங்கிப் போயிடுவோம்…அப்டித்தானே?”

“ஆமா…வலியப் போய்ச் சண்டை போட முடியுமா? வேறே வேலையே இல்லையா நமக்கு? அவுங்கவுங்க பிரச்னையை அவங்களேதான் தீர்த்துக்கணும்…அந்தம்மாவோட குறுகின புத்தியைக் காண்பிக்கத்தான் நான் உங்களைக் கூப்பிட்டேன்…நீங்க என்னடான்னா என்னையே பதம் பார்க்குறீங்களே…?”

“இப்போ, எதிர் வீட்டம்மா, அதே பெருச்சாளியை நம்ம வீட்டுப் பக்கம் தள்ளி விட்டிருந்தா என்ன பண்ணுவே…?”

“கிழிச்சு நார் நாரா ஆக்கிப்புடுவேன்…”

“எதை? பெருச்சாளியையா? “

கையை ஓங்கிக்கொண்டு அடிக்க வந்தாள் சாந்தி. சிரித்தான் இவன்.

“இன்றைக்குக் காலைல வேடிக்கை பார்க்கிறதுக்கு உனக்கு ஒரு விஷயம் கிடைச்சிருச்சுன்னு சொல்லு…”

“உங்களுக்கு வேற வேலையே இல்லை…ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்குறீங்க… இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை வேறே…கேட்கணுமா? லீவு நாள்…பொழுது போகலை…”

“அடடே…! இன்னைக்குக் குப்பை வண்டி வராதே?”

“ஆமாங்க…என்னங்க பண்றது? எங்கேயாவது குப்பை வண்டிக்கு லீவு விடுவாங்களா? தினசரி குப்பையை அள்ளினாத்தானே தெரு சுத்தமாகும்?”

“அது சரிதான்…அதுல உழைக்குற ஆளுகளுக்கு ஒரு நாளாவது லீவு வேண்டாமா?”

“ரெண்டு பேரை வேலைக்குப் போட்டு, மாத்தி மாத்தி அள்ளச் சொல்ல வேண்டிதானே?”

“ஆஹா..! தாராளமாச் செய்யலாமே…!! மாதச் சந்தா இருபதை இருபத்தஞ்சாக்கினவுடனே பாதிப் பேர் குப்பையே போடுறதில்லை…வேண்டாம்னுட்டாங்க…இதிலே ரெண்டு பேரை எங்கேயிருந்து போடுறது? போட்டா சம்பளம் கொடுக்க வேண்டாமா?”

“அப்போ நாறிட்டே கெடக்கட்டும்…வியாதி வரட்டும்…அப்பத்தான் புத்தி வரும்…”

சொல்லிவிட்டுக் குளியலறை நோக்கிப் போய் விட்டாள் சாந்தி. செத்த பெருச்சாளியை விடிகாலை கண்கொண்டு பார்த்த அசிங்கத்தையும் சேர்த்துக் கழுவ வேண்டும் என்ற அவசரம் அவளுக்கு.

இவன் ஜன்னல் வழி பார்த்தான். அது நடு ரோட்டில் கிடந்தது. வாகனங்கள் அவ்வப்போது கடந்து கொண்டிருந்தன. பார்த்தவாறே போயினர் பலர்.

வேக வேகமாய்ப் பக்கத்துக் கண்மாய்க்குக் காலைக் கடன்களை கழிக்கச் செல்லும் வழக்கமான ஒருவர், அவசரத்தில் கவனிக்காமல் அதை மிதிக்கப்போய் நிலை தடுமாறினார்.

“சே! அநாச்சாரம்..!! – என்றவாறே மேல் துண்டால் மூக்கையும் வாயையும் பொத்திக் கொண்டு விலகி விரைந்தார்.

தன் வீட்டிலிருந்து எதிர்வீட்டுப் பக்கம் தள்ளிவிட்ட அந்த அம்மாளின் பெயர் நீலாம்பரி. இவனுக்கு சினிமா ஞாபகம் வந்தது. வாழ்க்கையைப் பார்த்து சினிமா எடுக்கிறார்களா அல்லது சினிமாவைப் பார்த்து வாழ்க்கை அமைந்து போகிறதா? என்று தோன்றியது.

எதிர் மரங்களில் ஐந்தாறு காக்கைகள் வந்து உட்கார்ந்திருந்தன. வழக்கமாய் அந்த நேரத்திற்கு அங்கு காக்கைகளைப் பார்த்ததில்லை இவன். இன்று எப்படி மூக்கில் வேர்த்தது அவைகளுக்கு? கழுகுகளுக்குத்தானே அப்படி வியர்க்கும் என்பார்கள்?

அவைகளின் பார்வை அந்த இரையின் மீதே நிலைத்திருந்தது.

(மீதி அடுத்த இதழில்)

About The Author