உணவு உற்பத்தியைப் பாதிக்கும் பருவ மாற்றங்கள்

புவி வெப்பமயமாதலின் விளைவாக கோதுமை, சோளம், அரிசி, சோயா ஆகிய உணவுப்பொருட்களின் விலை 20 விழுக்காடு உயர்ந்திருக்கிறது. 1900 ஆண்டு முதல் 2008 வரை பருவ மாறுதல்களின் விளைவாக தானியங்களின் விளைச்சல் மிகவும் குறைந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளின் புவி வெப்பம் கோதுமை, சோளம் மற்றும் பல உணவுப் பொருட்களின் விளைச்சலைப் பாதித்திருப்பதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கின்றன.

ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வின்படி கோதுமை, சோளம் ஆகிய தானியங்களின் விளைச்சல்கள் முறையே 3.8 சதவிகிதமும், 5.5 சதவிகிதமும் குறைந்திருக்கின்றன. அரிசி மற்றும் சோயாபீன்ஸ் வகைகளில் உலகின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள விளைச்சல் குறைவுகள் உலகின் மற்ற சில பாகங்களின் அதிக விளைச்சலால் சமமாகி இருக்கிறது. கடந்த காலங்களில் பருவ மாறுதல்களினால் ஏற்பட்டுள்ள தாக்கம் முக்கியமான உணவுப் பொருட்களின் விளைச்சலை எவ்வாறு பாதித்திருக்கிறது என்று கண்டறிய முடியும் என ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் புவி சுற்றுச்சூழல் துறையின் ஆராய்ச்சியாளர் டேவிட் பி.லோபல் கூறுகிறார்.

1980 முதல் 2008 வரையில் ஏற்பட்டுள்ள பருவ மாறுதல்கள், உணவுப்பொருள்களின் உற்பத்தி இவைகளின் தகவல் விவரங்களை ஆய்வாளர்கள் ஆராய்ந்ததில் பருவ மாறுதல்களால் சில நாடுகளில் மட்டுமே ஏற்படும் உணவுப்பொருள்களின் விளைவுக்குறைச்சலை அறிவித்தனர். உதாரணமாக, கோதுமை ரஷ்யா, துருக்கி, மெக்சிகோ நாடுகளில் 15 சதவிகிதம் குறைவான விளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. சோளத்தின் விளைச்சல் சீனாவில் குறைந்திருக்கிறது. இத்தகைய மாறுதல்கள் அமெரிக்காவில் காணப்படவில்லை.

Intergovernmental Panel on Climate Change (IPCC) நிறுவனம் தன் 2007ம் ஆண்டு அறிக்கையில் புவியின் சராசரி பருவ மாறுதல்கள் 0.18 டி. செ.கிரேட் உயர்ந்திருப்பதாக அறிவிக்கின்றன. அந்த அறிக்கை உலக உணவுச் சந்தையில் நான்கு முக்கிய உணவு தானியங்களின் விலை 20 சதவிகிதம் உயர்ந்திருப்பதாகவும் கூறுகின்றது.

ஆனால், இந்திய விஞ்ஞானிகளிடம் பருவ மாறுதல்கள் உணவுப்பொருள்களின் விளைச்சலை பாதிக்குமா என்பது பற்றிய கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. பெங்களூருவின் ஆர்.எஸ்.தேஷ் பாண்டே என்ற சமூக பொருளாதாரக் கழகத்தின் இயக்குனர், கோதுமை சோளம் இவற்றில் அவ்வப்போது ஏற்படும் விளைவுக் குறைச்சல்களுக்கு பருவ மாறுதல்களைக் காரணமாகக் கூறமுடியாது என்று சொல்கிறார். அதே சமயம் பருவ மாற்றங்களைப் பற்றி நாம் கவலை கொள்ளாமலும் இருக்க முடியாது என்றும் சொல்கிறார் .

பருவ மாறுதல்கள் உணவுப்பொருட்களின் உற்பத்தியில் ஏற்படுத்தும் மாற்றங்களைப் பற்றி பல தனிப்பட்ட ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த ஆய்வுகளில் ஒன்று, தமிழ் நாட்டில் அரிசியின் உற்பத்தி குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. கோயம்புத்தூரில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம் 2008ம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் அரிசி விளைச்சலைப் பற்றிய ஆய்வுகளை அவ்வப்போது மேற்கொண்டிருகிறது. மழை, வெப்பம் இவைகள் அரிசி உற்பத்தியின் விளைச்சலில் ஏற்படுத்தும் பாதிப்பின் விவரங்களைப் பற்றிக் கூறும்போது இவை அவ்வப்போது ஏற்படும் இயல்பான பருவ மாறுதல்களின் தன்மையால் ஏற்படுகின்றனவே தவிர, அதீத பருவ மாற்றங்களினால் அல்ல என்று தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று இந்த மையத்தின் தலைமைப் பேராசிரியர் திருமதி கீதா லக்ஷ்மி கூறுகிறார். இந்த நூற்றாண்டின் நடுவில் 1.5. டி. செ. கிரேடும், நூற்றாண்டின் இறுதியில்
2டி. செ. கிரேடும் பருவ மாற்றங்கள் அதிகமாகக்கூடும் என அவர் அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார். தவிர, அரிசி விளையும் காவிரி டெல்டா பகுதியில் இது முக்கியமாக பாதிக்கும் எனவும், அரிசி விளைச்சலுக்கு அதற்கேற்ற தகுந்த ஏற்பாடுகள் இப்போதே செய்யாவிட்டால் 15 லிருந்து 20 சதவிகிதம் அரிசி விளைச்சல் குறையும் என்றும் எச்சரித்திருக்கிறார்.

(நன்றி : ‘பாடம்’ மாத இதழ்)

About The Author