உந்தித் தீ-(1)

வாசலில் நின்று கொண்டிருப்பதார், விரட்டியடிக்க மனமில்லை. பிச்சைக்காரனா ஞானியா புரிபடவில்லை. ஒரு சொல்லேனும் பேசவில்லை. என் மௌனத்தின் மூலம் என் தேவையைக் கண்டுபிடி என்பவனைப்போல சலனமற்று நின்று கொண்டிருந்தான். எதைத்தேடி வந்தான்? கண்களிலிருந்து எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவை சலனமற்றிருப்பது அதிசயம்தான். ஒருகால் ஞானியாக இருப்பானோ. ஞானிக்கு இங்கு என்ன வேலை? அவர்களுக்கான இடமுமில்லை. இவ்வளவு பெரிய மாளிகை உன் ஒருவனுக்கு அவசியமா என்று வழக்கமாகக் கேட்கும் முகங்களின் சாயல் ஏதுமில்லை. திருடனாயிருப்பானோ, திருடனுக்குத்தான் அடுத்தவனையும் கள்வனாகப் பார்க்கும் மனோபாவம்.

அன்னம்மாவின் முகம் கோடுகளாய்த் தெரிந்தது.

"சாயி காலை இட்லி மிச்சமிருக்கா. ராயரைக் கேளு. இங்க கொண்டு வந்து போடு. சாப்பிடறானா பாக்கலாம்…"

இதெல்லாமே அன்னம்மா கொடுத்த பவிசு. தெருவிலே போய்க் கொண்டிருந்தவனைக் கூப்பிட்டுக் கொடுத்த பரிசு. "யாரையும் விரட்டாதே. சாப்பாடு போடு. திகட்டத் திகட்டப்போடு… என் வழக்கத்தைத் தொடரு…" என்று அவள் மெல்லிய குரலில் உத்திரவிடுவது கேட்டது.

அவன் கண்களில் லேசாகப் பிரகாசம். அவசரம். ஒவ்வொரு இட்லியாக விள்ளாமல் முழுசாய் அப்படியே வாயில் போட்டுக் கொண்டான். ஒன்று…இரண்டு… மூன்று… ஏழு… பத்து… அடேயப்பா பகாசுரனோ. அல்லது என்னுடைய முன்னாள் பிரதியோ. ஒரு நிமிடம் உற்றுப் பார்ப்பது எதனால். நன்றி தெரிவிக்கிறானோ. அலட்சியமாக நடந்தான் மறைந்தான். அவனுடைய நீண்ட தாடி மட்டும் இன்னும் காற்றில் இங்கேயே கலைந்து ஆடுவது போலிருந்தது. அடையாளமாய் அதை விட்டுப் போனானா. பிரமையா?

பசி பிரதானமானது. அதை விரட்டும் அன்னம்; சுட்டெரிக்கும் சோறு ஞானத்தைவிட உயர்வானது. அன்னம் ப்ரம்மம். அன்னம் கடவுள். அன்னம் ஆனந்தம். அன்னத்தைத் தேடும் தேடல் உத்தமமானது. அதை அடைதல் சொர்க்கம். பரவசம். யார் ஏற்கிறார் இதை. நிஜத்தை அவ்வளவு சீக்கிரம் ஏற்க எவருக்கு மனசு வரும். பாசாங்கைப் பிடித்துக் கொண்டு கொண்டாடிச் சுழலும் உலகம்.

"என் பசி. அப்பா தாத்தா அம்மா என அனைத்து பந்தங்களையும் உறிஞ்சிவிட்டது" என்பாள் அத்தை. தான் தப்பித்த அதிசயத்தையும் சொல்வாள். "என் ம்ருத்யுஞ்சய நோம்பின் மகிமை" என்பாள். அவள் நல்லவள். பாவம், என்ன பண்ணுவாள்? நாலு வீடு பெருக்கி பத்துப் பாத்திரம் தேய்த்து துணி தோய்த்து கிடைத்த பழைய சோறு, மீந்த இட்லி உப்புமா. இப்படி எதையாவது மூட்டையாகக் கட்டிக் கொண்டு வருவாள். எதுக்குடி இவ்வளவு. வீட்லே சாப்பிட ஆள் இருக்காளோ, என்ற கேள்விகளுக்கு தலையாட்டல் பதில். டே… பிசாசாடா நீ… சோற்றுப் பிசாசு. இந்த வயசிலே இப்படிச் சாப்பிட்டு யாரையும் நான் பார்த்ததில்லே. வயிற்றிலே நெருப்பா? சதா எரிஞ்சிண்டே இருக்கற நெருப்பா. எதைப் போட்டாலும் எவ்வளவு கொட்டினாலும் இன்னும் இன்னும்னு பறக்கறே. தாங்க முடியலேடா என்னாலே. அவமானம் வேறு… என்னடீ கூத்துன்னு ஊர் சிரிக்கிறது.

நிஜத்தில் இது குறித்து லட்ஜையில்லை. ஊரில் எந்த வீட்டுக் கல்யாணத்திலும் முதல் பந்தி. யார் விரட்டினால் என்ன, அசைவதில்லை. அக்கம்பக்க ஊர்களில் தெரிந்தவர் தெரியாதவர் யார் வீட்டு விசேஷமானாலும் ஒரே ஓட்டம். சாப்பாடு… சாப்பாடு, வயிற்றில் எரியும் அக்னி காலாக்னி. அணையாத அக்னி. அமுத சுரபியை கக்கத்தில் இடுக்கிண்டே கிடக்கனும். இஷ்டப்பட்ட போதெல்லாம் அள்ளி அள்ளி… முடியுமோ.

யாரிட்ட சாபம். எந்த ஜன்மத்தில் இட்ட சாபம். எனக்கு மட்டுமேயான இந்த சாபத்திற்கு எவ்வாறு விமோசனம். எப்போது விமோசனம்?

இந்தப் பரம்பரையே பசி பரம்பரை. சதா சோறு சோறுன்னு அலையற பரம்பரை. எங்க கிடைச்சாலும் சரி. பிராமணார்த்தம். சவுண்டி, சமாராதனை, கல்யாண வீடு, இழவு வீடு… எங்கே வேண்டுமானாலும் சோறு தேடி உட்காரும் வம்சம். இவன் கொஞ்சம் அதிகப்படி என்று நாகுப்பாட்டி நீட்டி முழக்குவாள்.

சோறே பிரதானம் என்பது நீசத்தனமா. எந்த அறம் சொல்கிறது எந்த சாஸ்திரம் சொல்றது. உண்மை பேசாத அவற்றைக் கொளுத்து.

திருவையாறு தியாகராஜ ஆராதனை. உத்சவத்திற்கு வருஷம் தவறாமல் போவார் தாத்தா. கூடவே பேரனும். சங்கீதம் கேட்கவா? பஞ்சாங்கத்திலே தேதி பார்த்து பகுள பஞ்சமி பார்த்து புறப்பட்டால் திரும்பும் நாள் தெரியாது. அஞ்சு நாள் அன்னதானம். யாரோ பெரிய மனுஷன் புண்ணியவான் பசியை விரட்டினால்தான் சங்கீதம் உட்பட சகல வித்தைகளும் என்றுணர்ந்தவன். ஏகப்பட்ட நிலத்தை பிராமண போஜனத்திற்காக எழுதி வைத்திருந்தான். தாத்தா போன பிறகு என் விஜயம் நிற்குமோ. அம்மன் சந்நிதியில் பெரிய சத்திரம். பெரிய பெரிய தூண்கள் மூணு ஆள் கட்டிப்பிடிக்கற மாதிரி. வவ்வால் புழுக்கை நாற்றம். ஏழெட்டு காடா விளக்குகள் ஏகப்பட்ட அகல் விளக்குகள். கரண்ட் கிடையாது அப்ப.

மணக்க மணக்க வெங்காய சாம்பார், கொத்துமல்லி ரசம், கத்திரிக்காய் பொரியல், அவரைக்காய் கூட்டு, மலைமலையாய் ஆவி பறக்கற சாதக்குவியல். தடித்தடியாய் சமையல்காரர்கள் பரிசாரகர்கள் எடுபிடிகள் பிரம்மாண்டமான அண்டாவை உருட்டிக் கொண்டே – அகன்ற கரண்டியால் தலைவாழை விளிம்பு வரை சாதம் சிதறும். "எலே மணி ரசத்திலே ஒண்ணரை முறம் உப்பு போடு அடுப்பக் கவனி. கால் மணி நேரத்தில் இறக்கு… என்ற அதட்டல் வேறு. சமுத்திரமாய் சாம்பார். மூழ்கிக் கிடக்கும் கத்தரிக்காய் முருங்கைக்காய் வெங்காயம்… அடேயப்பா இப்ப நெனச்சாலும் வாசனை வருது."

ஒரு பந்தி நடந்து கொண்டிருக்கும்போதே பிரம்மாண்ட மான வாசற்கதவை சாத்தியிருப்பார்கள். அகலத் திண்ணையில் நாலு பந்திக்கு ஆசாமிகள் கசமுசவென்று சப்தம் போட்டுப் பேசிக் கொண்டு.

About The Author