உந்தித் தீ (3)

"சொந்தமா ரெண்டு ரைஸ் மில் இருக்கு. ஏகப்பட்ட நிலம் நீச்சு. சொன்ன வேலையச் செய்யறதுக்கு நம்பிக்கையா ஆரும் இல்லே… நீ இருக்கியா… எல்லாத்தையும் பாத்துப்பியா… ஏகப்பட்டது இருந்தும் சாப்பிடறதுக்கு ஆளில்லே. இருக்கியா…"

எதிர்பாராமல்தான் அதிசயங்கள் நடக்கும்… நடந்தது.

மூணு வருஷம் அவன் தொட்டது துலங்கியது என்று பேசிக் கொண்டனர். ஒன்றுக்குப் பத்தாய் எல்லாம் பெருகியது. வீட்டை இடித்து பெரிதாய்க் கட்டினான். கார் வாங்கினான். அன்னம்மா… அன்னலட்சுமி… நீ இப்ப லட்சாதிபதியில்லே கோடீஸ்வரி… மூட்டை மூட்டையா நெல்… மூட்டை மூட்டையா மளிகை சாமான்கள்… ஆள் அம்பு என ஏகப்பட்ட எடுபிடிகள். ஒரே ஏற்றம்தான். அன்னம்மா போன பிறகு திணறினான். இவ்வளவையும் ஒண்டியாய் ஆள முடியுமோ அடேயப்பா…

யார் யாரோ வந்தார்கள். ஏதேதோ சொன்னார்கள் புதிய உறவுகள் சொன்னார்கள். புதுசு புதுசா சினேகிதர்கள். வடிச்சுக் கொட்ட நாலைந்து சமையல்காரர்கள். ஏகப்பட்ட வேலையாட்கள். ஊர் மெச்சியது. அன்னலெட்சுமியையும் தாண்டிய வள்ளல். இடிந்து கிடந்த பிள்ளையார் கோயில். பெருமாள் கோயில் பளிச்சிட்டன. வர்ணம் பூசிக் கொண்டு பிரகாசித்தன. பூஜை அன்னதானம் என்று அமர்க்களப்பட்டது. தூர்ந்து போயிருந்த குளம் சரி செய்யப்பட்டு தண்ணீர் ததும்பியது.

"அண்ணா உங்களுக்கு கோதுமைக் கஞ்சி வச்சிருக்கேன். சூடாய்ச் சாப்பிடுங்க. புடிக்கலேன்னாலும் மல்லுக்கட்டி சாப்பிடுங்க. உடம்புக்குத் தெம்பு வேண்டாமா… இப்பவே ஈர்க்குச்சி மாதிரி ஆயிட்டுது ஒடம்பு. ஒரு மடக்கு குடிக்கறதுக்குள்ளே வயிறு குபீரென வெளியே தள்றது… உங்க நல்ல மனசுக்கு என்ன வேதனை."

டாக்டருக்கும் புரிபடாத வியாதி. எங்கெங்கேயோ போய் பட்டணம் போய் பெரிய பெரிய டாக்டர்ங்ககிட்டே காட்டியாச்சு. மந்திரம் மாந்ரீகம், எல்லாம் பாத்தாச்சு பிடிபடலே… அன்ன த்வேஷம்… மருந்தும் மாத்திரைகளும் வயிற்றை நிறைக்க மனசு ஆடிப்போனது. காதருகே யாரோ கூவியழைப்பது போன்ற குரல் அடிக்கடி. காலதேவனா…? கொல்லைக் கொய்யா மரத்திலிருந்து அணில் குஞ்சு முழு பழத்தையும் சாப்பிட்டுவிட்டு திணறத் திணற தாண்டி ஓடியது.

இடி மின்னல் மழை வெள்ளம் வறட்சி புயல் – மாறி மாறி… உலகத்தின் சுழற்சியின் நிச்சயம் தெரிந்தது.

மாலை – லேசாய் இதமாய் வெயில்… இரண்டு நாட்களாக தண்ணீர் தவிர வேறு உணவில்லை. வயிற்றின் அனைத்து பகுதிகளையும் பாறாங்கல் அடைக்க… என்ன செய்வது. என்ன மாயம் அது. கண்கள் மயங்க தலை கிறுகிறுக்க வாசலைப் பார்த்தபோது… யாரது… அது யார்… மங்கலாக அவன் தெரிந்தான். "என்ன மறுபடி வந்துட்டியா… எத்தனை நாளானால் என்ன மறக்க முடியுமோ. வா… வா… வந்து சாப்பிடு… ராயரே இலை போடு… நிறைய பண்ணியிருக்கியா. இல்லேன்னா பண்ணு…."

மேலும் கீழுமாகப் பார்த்தான். உன் புஷ்டி எங்கே போயிற்று. கன்னம் ஒட்டி, முகம் ஒட்டி, மார்புக் கூடுகள் தெரிய கண்கள் குழி விழுந்து என்ன ஆச்சு உனக்கு என்பதுபோல் ஒரு பார்வை. தோள்வரை தொங்கிய அழுக்குச் சடை. நிலை கொள்ளாமல் அங்குமிங்கும் அலைந்தான். வேறொரு மனிதனைப் பார்ப்பதுபோல் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான். லேசான சிரிப்பு தாடிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்தது.

"ஞாபகம் இருக்கு… ஆறு பேருக்குக் காணும் சாப்பாட்டை நீ ஒருவனே அள்ளி முழுங்கினாயே… மறந்தா போயிடும். என்னைத் தெரியுதோ… அடையாளம் புரிந்ததோ, மாறிவிட்டேனா. அரை டம்ளர் கஞ்சியும் சொட்டுச் சொட்டாய்… ஸ்பூனால்… பரவாயில்லை வா… வா… அன்னத்தை ஆட்சி செய்."

உட்கார்ந்து சாப்பிடுவதைக் கண் கொட்டாமல் பார்க்கும்போது அதே ஆவேசம். "போடு போடு இன்னும் போடு. சாம்பாரை ஊத்து… ரசம் இருக்கா… கடைசியில் யானைக் கவளமாய் பெரிய உருண்டையாய் அப்படியே விழுங்கிவிட்டு விசித்திரமாய் ஒரு பெரிய ஏப்பத்தை விட்டுவிட்டு எழுந்தான்."

கண்கள் திரும்பவும் இருட்டில் உழன்றன. அவன் கையை அசைத்து வா வா என்றழைப்பது புரிந்தது. பதில் பேசத் தோன்றவில்லை. கேள்விகள் ஏதுமில்லை. மந்திரத்தால் கட்டுண்டவனைப்போல படியிறங்கினான். வேகவேகமாக அவனுடைய நடைக்கு அனுசரணையாய் இவன் பின்னால் நடக்க மாளிகையான வீடு மெல்ல மெல்ல பின்னால் மறைவதைப் போலிருந்தது. சட்டென இருட்டு. வெகுதூரம் வந்துவிட்டிருப்பதாகத் தோன்றியது.

பிரம்மாண்டமான சத்திரத்தின் வாசலில் வந்து நின்றான் போவோமா என்பதுபோல் பார்த்தான்.

வரிசை வரிசையாய் இலைகள்… ஏகப்பட்ட பதார்த்தங்கள் மலையாய்ச் சோறு… சாம்பார் ரசம் அண்டா அண்டாவாய் மணக்க – மணக்க –

அவன் ஒரு கவளம். விழுங்குவதற்குள் இவன் இலையைக் காலி செய்துவிட்டு அடுத்த சோற்றுக்காகக் காத்திருந்தான். தாடி சிரித்தது.

வயிறு இன்னும் இன்னும் என்று அரற்றியது

About The Author