உறவின் வரைபடம் (1)

சமீப சில நாட்களாக ஊதியப்பா என் வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருக்கிறார். காலையில் பள்ளிக்கூடம் போவது போன்ற கடமையுணர்வுடன் வந்துவிடுவதும் என் குழந்தைகளுடன் அரட்டை அடிப்பதும், அடுப்படி வரை வந்து எட்டிப் பார்ப்பதுமாக அமர்க்களம் பண்ணிக் கொண்டிருக்கிறார். ஓர் இடத்திற்கு வந்தார் என்றால் வந்தோமா, பேசினோமா, போனோமா என்று இருக்கத் தெரியாத மனிதர் அவர். என் வீட்டிற்குள்ளும் இப்போது இந்தக் கதை அமுலாகிறது. அவருடைய பேச்சுக்கு ஒரு ஆரம்பமும் முடிவும் உண்டு. புதிதாக யாரையாவது எங்கேயாவது பார்க்க ஆரம்பித்தால் முதலில் அவர் தனக்கு எந்த உறவுமுறைக்காரர் என்று கண்டுபிடிப்பதிலிருந்து தன் பணியை ஆரம்பிப்பார். உறவுமுறை நமக்குள் எதுவும் கிடையாது என்கிற பேச்செல்லாம் அவரிடம் செல்லுபடியாகாது. எதிரே நிற்பவரின் வாப்பாவும் ம்மாவும் யார் என்பதை முதல் கட்டமாக விசாரிப்பார். பிறகு அந்தப் பெற்றோரின் மூலவேர் எங்கேயிருக்கிறது என்பதைத் தன் கண்களை அந்தரத்தில் மேயவிட்டுச் சுட்டுவிரலை அங்குமிங்குமோ, தேவைப்பட்டால் மேலும் கீழுமோ ஆட்டி ஆட்டி அது எங்கே சுற்றுகிறதோ அங்கேயெல்லாம் சுற்ற அனுமதித்து, கடைசியில் அது தன் மனைவியின் உறவுமுறையோடோ அல்லது தன் உறவுமுறையோடோ வந்து ஒட்டி உறவாடுவதைப் பிடித்துக் கொள்வார். அதற்குப் பிறகு எதிரே நிற்பவன், ஊதியப்பாவிற்கு மகனாவோ மருமகனாகவோ அல்லது பேரனாகவோ கொள்ளுப் பேரனாகவோ வந்து வாய்த்திருப்பதை சம்பந்தப்பட்டவரிடம் அடையாளம் காட்டி விடுவார். ஊதியப்பாவின் இந்தக் கணிதத்தை இதுவரை யாராலும் பொய்யாக்கி காட்டவும் முடியவில்லை. எல்லோருக்கும் எல்லோருமே உறவுமுறைதான். கொண்டான் – கொடுத்தான் என்று ஊரில் கொஞ்ச நஞ்சமா வேலை நடக்கிறது. ஆளாளுக்கு நாலைந்து பிள்ளைகளைப் பெற்றுக் போட்டு இங்கே இருந்து ஒரு பெண்ணைத் தள்ளி, அங்கே இருந்து ஒரு பெண்ணை எடுத்து பேரன்களையும் பேத்திகளையும் பெற்றெடுக்க வைத்து ஊர் மொத்தமும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உறவுமுறைக் கொழுந்துகளாக பச்சை பிடித்திருக்கிறது. ஊதியப்பாவின் முதல் ஸ்பெஷல் ஐட்டமே அவருடைய அந்தக் குடுகுடு ஓட்டம்தான். முன்பக்கமாய் இருந்து பார்க்கையில் அது வேகமான நடை என்பது போன்ற மாயத்தோற்றம் காட்டும், பின்னிருந்து பார்க்கும்போதுதான் அது குடுகுடுத்த ஓட்டம் என்பது புரியவரும்.

******************

ஊதியப்பா என் வீட்டுக்கு இப்போது வருவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. சும்மா வருவதுமில்லை. கையில் பிஸ்கட் பாக்கெட்டுடனோ, வண்ணமயமான சாக்லேட்டுகள் அல்லது காத்தமுத்து கடை காராச்சேவு என்றோ எதையெல்லாமோ வாங்கியும் வருகிறார்.

எங்கேயும் யாருக்கும் இப்படிச் செலவுகள் செய்து தன் அன்பை வெளிக்காட்டுவது இதுவரையில் அவரிடம் இல்லாத விசயமாக இருந்தது. வளமான நஞ்சையோ புஞ்சையோ அவருக்கு உண்டு. அதுதான் வாழ்வின் ஆதாரம். சென்ற வருசத்து அடைமழையில் ஊதியப்பா நல்ல மகசூல் பெற்றிருக்கலாம். இது எவ்வளவு பெரிய பரந்த ஊர்? வெளிப்பார்வைக்கு இந்த ஊரின் பிரம்மாண்டம் ஒரு போதும் தெரியாது. பஸ்ஸில் வருகிற ஜனங்களுக்கு ஊரின் கீழ்முனை மட்டுமே பார்க்கக் கிடைக்கும். இதில் ஊதியப்பாவின் வீடும் என் வீடும் வெவ்வேறு முனைகளில் உள்ளவை. அவர் அங்கேயிருந்து இங்கு வருவது சாதாரணமான விசயமில்லை. என் வீடு ஒதுக்குப்புறத்தில் இருப்பதுடன், மலையைத் தொட்டுவிடும் தூரத்திலும் இருக்கிறது. மலையடிவாரமாக மாலை உலா செல்வது என் நடைமுறையாகவும் இருக்கிறது.

இந்நிலையில் என் வீட்டிற்கு ஊதியப்பா வந்தபோது எனக்கு சந்தோசமாகவே இருந்தது. ஊதியப்பா ஒரு கலகலப்பான ஆசாமி. என் வீட்டில் நானும் என் மனைவியும் எங்கள் குழந்தைகளும் எப்போது கலகலப்பாக இருப்போம். எங்கள் கலகலப்போடு அவருடையதும் ஒட்டிக் கொண்டதினால் ரொம்பவும் உற்சாகமாகவே இருந்தது. அவரிடம் பல விவகாரங்களைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் எங்களுக்கும் இருந்தது என்றுதான் நானும் புரிந்து கொண்டேன். என் மனைவியும் அவருடைய வருகையைத் தட்டிக் கழிக்க முடியாதபடிக்கு அவரிடம் பேச்சுக் கொடுத்தபடியே காய்கறிகளை நறுக்குவது, தேங்காய் துருவுவது, மீனை ஆய்வது என்று சமையல் கட்டு வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தாள். மீன்களைப் பார்த்ததும் அவற்றை எப்படிப் பக்குவமாக ஆக்குவது அல்லது பறிப்பது என்பதனை ஒரு கை தேர்ந்த சமையல்காரர் போல மிகவும் அடங்கிய ஒரு தொனியில் ஒரு பாடமாய் நடத்துகிற அந்தத் தோரணையை நான் ரசனையாப் பார்த்தவாறே ஊர்ந்தேன். என் நாவில் எச்சில் ஊறும்படியாக அதைச் சொன்னார். என் மனைவியின் சமையல் பதார்த்தங்கள் ருசி கொண்டவை. அவள் மீன் ஆனம் வைத்தால் அதைப் பார்த்துக் கொண்டே சாப்பிட முடியும். அவ்வளவு தேர்ச்சி இருந்தும் ஊதியப்பாவின் பாடத்தில் எங்காவது ஓரிடத்தில் இன்னொரு தூக்கலான சேர்மானம் கிடைத்துவிடக்கூடும் என்கிற ஆர்வமாய் அதைக் கேட்டாள்.

ஊதியப்பா இப்படி வந்து கொண்டிருப்பதன் ரகசியம் எனக்குப் பிடிபடவில்லை. இவ்வளவு பெரிய ஜனக்கடலில் என் வீட்டை ஏன் தேர்ந்தெடுத்தார்? ஒருவேளை என் மனைவிக்கு தெரிந்திருக்குமோ என்று அவளையும் விசாரித்தேன். "எல்லா இடத்துலயும் சுத்திக்கிட்டு இருக்குற மனுஷந்தானே! சரி இங்கேயும் கொஞ்சநாளு போயிட்டு வரலாமேன்னு அவரு நெனச்சிருக்கலாம்" என்றாள்.

"ஆனா நல்ல மனுஷன். பிள்ளைங்களுக்காக தினசரியும் ஏதாவது வாங்கிட்டு வர்றாரே! சும்மா சொல்லப்படாது" என்றேன்.

ஒரு பெரிய நாவலை நான் வாசிக்க வேண்டியிருந்தது. மேலும் நண்பர் கிருஷ்ணமூர்த்தி தான் புதிதாய் ஆரம்பித்திருக்கும் பத்திரிகையொன்றின் பிரதியை எனக்கு அனுப்பி வைத்து, அடுத்த இதழில் இடம்பெறுமாறு ஒரு கோரிக்கையையும் முன் வைத்திருந்தார். ஆகவே ஒரு கதை எழுதியே தீர வேண்டியதான சமூகப் பணி ஒன்றும் எனக்காகக் காத்துக் கிடந்தது. இருந்தாலும் காலையில் நூலகம் செல்வது, மாலை உலா போவது என்று எதையும் கை கழுவிவிடாமல்தான் இந்தப் ணிகளையும் நான் செய்வேனே தவிர, ஒன்றுக்காக இன்னொன்றை விட்டுக் கொடுத்து விடுவதில்லை. ஊதியப்பா வருவது இந்த வகையில் ஒருபாதிப்புதானா? அவர் வராதிருந்தால் ஒரு இரண்டு மணி நேரமாவது நாவல் வாசிக்கப் பயன்படும். அதற்கென்ன? ஊதியப்பாவும் ஒரு நாவல்தானே!

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author