உறவின் வரைபடம் (2)

ஒருநாள் மத்தியானம் என்னையறியாது வந்து என்னைத் தழுவிய தூக்கத்தின் பிடிக்குள் நான் மூழ்கிப் போனேன். அசத்தலான தூக்கம். பல நாள்களின் இரவு முழிப்புக்கெல்லாம் சேர்த்து மாட்டி என்னை அடித்து வீழ்த்தியிருந்தது அந்தத் தூக்கம். எத்தனை மணிக்கு நான் தூங்க ஆரம்பித்திருப்பேன் என்பதைக் கூட ஞாபகத்தில் கொண்டு வந்து பார்க்க முடியவில்லை. என் மனைவி என்னை ஓங்கித் தட்டி எழுப்பவும்தான் நான் உணர்வு பெற்றேன். என் கண் திறப்பில் என் முன்னே உள்ள பீங்கான் கோப்பையிலிருந்து தேநீரின் நறுமணம் கமகமத்தது. கோப்பையிலிருந்தும் ஆவி பிரிவது பார்க்க அழகாக இருந்தது. அந்த ஆவிக்குப் பின்னே ஊதியப்பா இருந்ததும் தெரிந்தது. ஒரு கோப்பைத் தேநீரை அவர் ஊதி ஊதிக் குடித்துக் கொண்டிருந்தார். ஊதியப்பா என்கிற பெயர் இப்படித்தான் அவரை வந்து ஒட்டிக்கொண்டது என்பதை இப்போதேனும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்களாக! மற்றபடி அவருடைய இயற்பெயர் அஹ்மது சுல்தான் காசிம் என்பதாகும். இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள யாரும் சிரமப்பட்டு விடலாகாது என்கிற நன்னோக்கத்தின் அடிப்படையில்தான் ‘ஊதியப்பா’ என்று அறிமுகம் செய்யலானேன். இந்த சில நாள்களாகவும் காலை வேளையில் மட்டுமே வந்து கொண்டிருந்த அவர், இப்போது மாலை நேரத்திலும் போகலாம் என்று நினைத்து விட்டாரோ? என் ஆராய்ச்சியைத் தொடர விடாமல் இடைமறித்தவராக, "புத்தகம் ஒரு பக்கமும் நீ ஒரு பக்கமுமா கெடந்தீங்கப்பா. புத்தக் தாளெல்லாம் படபடன்னு அடிக்கிறது. தாள் தானா பிஞ்சுட்டுப் போயிடுமோன்னு வேற பயமாயிருந்துச்சி. அதத் தூக்கி இங்க பத்திரமா வச்சிட்டேன்" என்று சுட்டிக் காட்டினார்.

"உன் பொண்டாட்டி சூப்பரா டீ போடுறாளேப்பா! என் பொண்டாட்டி கையால டீ குடிச்சா தாயோளி வெளக்கெண்ணைய குடிச்ச மாதிரிதான். நானும் தலையில் தலையில் அடிச்சுக்கிட்டேன். மூத்தவ கையி திருந்த மாட்டேங்குதுப்பா!" என்றும் சொன்னார்.

"நல்லவேளை. நமக்கு இன்னும் அந்தத் தண்டனை கிடைக்கல்ல" என்றேன்.

"வீட்டுக்கு யாரு வந்தாலும் என் பொண்டாட்டிக்கிட்டே டீ போடச் சொல்றதில்லே. எதிர்த்த கடையில்தான் வாங்கிக் கொடுக்குறது. நீ தைரியமா என் வீட்டுக்கு வரலாண்டே!"

அவர் சொன்ன முறையைப் பார்த்தால் ஒரு பெருங்கண்டத்திலிருந்து தப்பித்து போலத்தான் இருந்தது. ஊதியப்பாவிடம் ஒரு வசீகரமான கலை இருக்கிறதாக எனக்குத் தோன்றுகிறது. எதைச் சொன்னாலும் அந்தந்த சூழ்நிலைக்கேற்றபடி நம் மனதைப் பொருத்தி விடுகிறாரே, இன்பமோ துன்பமோ அதை அனுபவிக்க வைக்கிறாரே என்று வியக்கலானேன். கூடுமான வரையிலும் என்னையறியாமலே அவரை உள்வாங்கிக் கொள்கிறேன்.

ஊதியப்பா இப்போதும் வந்து இருப்பாய் இருப்பதால் அவருக்காக என்னுடைய மாலை உலாவை ஒத்திப் போட முடியாது. அவர் இங்கே இருக்கட்டும், நாம் உலா போகலாம் என்று என் சட்டையைப் போட்டேன். கைலியைக் களைந்து எட்டு முழ வேட்டியை உடுத்தினேன்.

"நீ எங்கேடே போற?"

"சும்மா அப்படி ஒரு வாக்கிங்க்தான்"

"அப்போ, நானும் கூட வாரேன்டே!"

இருவருமாக ஆற்றங்கரையைத் தொட்டுவிட்டோம். பஞ்சு போன்ற மேகங்கள் கூடுவதும் கலைவதுமான மேற்றிசை நாடகம் நடந்து கொண்டிருந்தது. மலையைப் பிளந்த சூரியன் மறைவதாக இருந்தது. சூரியன் கீழே இறங்கவும் மேகங்கள் தனித்தனியான நிறங்களைத் தம்மீது போர்த்திக் கொண்டன. சற்று அடர்த்தியான மேகங்களின் நகர்வில் சூரியனின் பலவீனக் கதிர்கள் விலகிச் சாய்ந்தன. எப்போதாவது ஒருமுறைதான் இதைப் போன்ற ஒரு காட்சி காணக் கிடைக்கும். நான் அந்த வர்ணஜாலங்களைக் கண்டு புன்னகை செய்தேன். "ஊதியப்பா ஏதாவது உங்களுக்குத் தெரியுதா?" என்று மென்மையாக உதட்டசைத்துக் கேட்டேன். அவர் என்னை ஒருவிதப் பயம் தொற்றிய பரபரப்புடன், "என்ன, என்ன, உனக்கு அங்கே என்னதுடே தெரியுது?" என்றார். அவரைத் திரும்பிப் பாராமலே ‘ஒண்ணுமில்லே" என்று சொன்னவனாய் என் ரசிப்பைத் தொடர்ந்தேன். அவரும் என் ரசிப்பைத் பின் தொடர மிகவும் முயற்சி செய்வதை நான் யூகித்தேன். நான் அப்படியே கையைக் கட்டுக்கொண்டு எப்போதும் போல நின்றேன். அவரும் நானும் தனித்தனி உலகங்களில்! நீண்ட நேரம் கழித்து அவரை நான் பார்க்கவும் அவர் பிரமிப்பு கொண்ட விழிகளோடு என்னை நோக்கினார். அவரின் பிரமிப்புக்குள் அதிர்ச்சியும் அடங்கி இருந்தது. "அரைமணி நேரமா நிலையா நின்னு அங்க அப்படி என்னத்த நீ பாத்தே! பேச்சு மூச்சு இல்லாமல் நின்னுட்டியே!" என்றார். அந்த அரைமணி நேரமும் தன்னிருப்பை எனக்கு உணர்த்திக் கொள்ளாமல் அவர் தன் வாயை மூடிக்கொண்ட அந்த வினோதம்தான் எனக்கு ஆச்சரியம் தந்த விசயமாகும். நான் அவரிடம் "ரொம்பவும் நன்றி" என்றேன். நான் மேலும் முன்னேறி நடந்தேன். அவர் என் நிழலாய் ஆனார்.

ஊதியப்பா என்னோடு இப்படி ஒட்டிக் கொண்டாலும் நானும் அவரும் சம வயது கொண்டவர்களல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு வயசு வந்த பெண் ஒருத்தியும் கல்லூரியில் படிக்கும் மகன் ஒருவரும் உண்டு. அவருடைய மனைவி என் மனைவிக்கு தூரத்து உறவு. இதை என் மனனவிதான் எனக்கு உணர்த்தினாள். "அப்படியா, எப்படி உறவு சொல்லு பார்ப்போம்" என்று நான் கேட்டதற்கு, "அதெல்லாம் யாருக்குத் தெரியும். எப்பவோ உங்க உம்மா சொன்னத வச்சித்தான் சொன்னேன்" என்றாள். ஆனால் இந்த ஊரிலுள்ள ஒட்டுமொத்த ஜனங்களுக்குமான உறவின் வரைபடம் ஒன்று ஊதியப்பாவின் மனசில் இருக்கிறது, ஊதியப்பா மட்டும் இல்லையென்றால் இந்த ஊர் மக்கள் யார் யார் தங்கள் சொந்தம், எந்த வகையில் சொந்தம் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியாது. கண்ணுக்கெட்டிய தூரம் வரைதான் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துள்ளார்கள். அதற்கு மேலுள்ள விவரங்களையறிய ஊதியப்பாவால்தான் முடியும். இந்த மாதிரியான சப்ஜெக்டை நாங்கள் வாலிபர்களாகச் சேர்ந்து கொஞ்ச காலத்திற்கு முன் பேசியிருக்கிறோம். நிறைய பையன்கள் படிப்பதற்காக வெளியூர்களுக்குப் போய்விட்டார்கள். வசதி வாய்ப்புள்ள பெண்மணிகளும் தொலைதூரமாய்ச் சென்று ஹாஸ்டல்களில் தங்கிப் படிக்கிறார்கள். படித்து முடித்த பலரும் உடனடியாக விமானமேறி அரபு நாடுகளின் ஒட்டக மேய்ப்பாளர்களாகவோ, கணினிப் பொறியாளர்களாகவோ மாறியிருக்கிறார்கள். இந்தப் பையன்கள் பிறக்கும்போதே உம்மாவின் முகத்திற்கு அடுத்து டிவியின் திருமுகத்தை மட்டுமே அறிந்து உணர்ந்திருக்கிறார்கள். தெருவைக் கூட எட்டிப் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. பள்ளிக்கூடம் போக தெருவில் நடக்க நேர்ந்ததை ஒரு வலிய தண்டனையாக உணர்ந்து கொண்டார்கள். அக்கம்பக்கத்தாரின் திருமுகங்களின் லட்சண-அவலட்சணங்களை உள்மனது தமக்குள் உள்வாங்கிக் கொள்ளாததால் எல்லோருமே யார் யாரோ என்று ஆகிவிட்டிருந்தார்கள். எனவே இந்தப் பையன்களுக்கு எதிரிலே வருவது மாமனா, சித்தப்பனா, எருமை மாடா என்கிற நுண்ணிய அறிவெல்லாம் பிடிபடாமலே போய்விட்டன. ஊதியப்பாவின் அருமை பெருமைகள் என்னென்ன என்பதை உனர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அந்த மேற்கூறிய சிக்கல்களையெல்லாம் கணக்கிட்டாக வேண்டும். எனவே முகங்களும் உறவுகளும் அற்ற இளைய தலைமுறைகளை உறவோடு உறவாகப் பின்னிப் பிணைக்க வேண்டுமென்றால் அங்கே ஊதியப்பாவின் சேவை அனைவருக்கும் தேவை. ஒருவேலை அவசர அவசியமான சமயத்தில் ஊதியப்பா கிடைக்கவில்லையென்றால் (அமங்கலமா எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதால்தான் அதை இப்படி இலைமறை, காய்மறைவாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.) என்ன ஆவார்கள் இந்த மக்கள்? எனவேதான் நாங்கள் பலரும் ஒருநாள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், ஊரின் பொது நிதியத்திலிருந்து ஒரு கம்ப்யூட்டரை வாங்கி ஊதியப்பாவின் துணைகொண்டு ஒரு மாபெரும் உறவுமுறை வரைபடத்தை ஏற்றிக் கொள்வதே பாதுகாப்பான வழி என்று முடிவெடுத்து வைத்திருக்கிறோம். இந்தத் திட்டம் நிறைவேற அல்லாதான் எங்களின் மீது தன் கருணை மழையைப் பொழிய வேண்டும்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author