உறவின் வரைபடம் (3)

இப்படிப்பட்ட ஊதியப்பா இப்போது என்னுடன் மாலை உலாவில் பங்கேற்று இதுவரையிலும் அமைதி காத்திருந்தார். "இப்போ நான் பேசலாமாடே?" என்று என்னிடம் அனுமதி கோரினார். என் மாலை உலாவின் நுட்பவிவரங்களை இந்த ஒரே நாள் உலாத்தலில் ஊதியப்பா கிரகித்துக் கொண்டர் என்பதை அவரின் இந்தக் கேள்வியின் வாயிலாகப் புரிந்து கொண்டேன். "சும்மா பேசுங்கப்பா!" என்றேன். "அதுதான, ஊமையா போயிட்டிருக்கோமே, ஏதாவது பேசினா உனக்கு சரிப்பட்டு வருமான்னு தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன்பா"

மனுஷர் எச்சரிக்கையாக இருக்கிறார். இதுதான் எனக்குத் தேவை. இனி அவர் பேசினால் கொஞ்சம் ராகத்தாகத்தான் இருக்கும். அதைக் கேட்டுக்கிட்டே வீடு போய்ச் சேர்ந்து விடலாம் என்றுதான் எண்ணினேன். அந்த சுகானுபவத்திற்காக அவர் வாய் திறக்கக் காத்திருந்தேன். ஊதியப்பா பேசினார், "நீ நெறைய கதையெல்லாம் எழுதியிருக்கறதா சொல்றாங்களே! அது வாஸ்தவம்தானா?"

"ஊதியப்பா இது என்ன வெளயாட்டு? புதுசா கேக்குறீங்க?" என்று அதிர்ந்தேன். உரத்துக் கேட்டேன் அவரை.

"நீ நெறைய புஸ்தகம் வாசிக்கிறேங்குறது எனக்குத் தெரியும்பா! ஆனா கதையும் எழுதிக்கிட்டு இருக்கிறேங்குற விவகாரம் எனக்குத் தெரியவே தெரியாது. எனக்கு அந்தச் செய்தியக் கேட்டுட்டு ஒரே ஆச்சரியமா இருந்துச்சுப்பா!"

உண்மையில் எனக்குத்தான் ஆச்சரியம். அதை விடவும் அதிகரித்து வந்தது என் வேதனை. கதை, கவிதை, கட்டுரை என்று இத்தனை நாளாய் எழுதி எழுதியும் கடையில் ஊதியப்பாவுக்கும் கூடவா நாம் தெரியாமல் போய்விட்டோம் என்று ரொம்ப ஆற்றாமையாக இருந்தது. யாரோடும் ஒட்டி விளையாடுவதில்லை, ஒதுங்கித்தான் இருக்கிறோம் என்ற போதிலும் நான் கதை, கவிதைகள் எழுதி வருவது ஊருக்குள்ளே பிரபலமான விசயமாக இருக்கிறது என்றல்லவா இத்தனை நாளும் எண்ணியிருந்தேன். பரிசுகள் வாங்கியிருக்கிறோம். செய்தியும் பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இதற்கெல்லாம் என்ன மவுசு? ஊதியப்பாவை இடையிலே விட்டுவிட்டு மீண்டும் மலையடிவாரம் நோக்கித் திரும்பிவிட்டால் என்ன? என் கற்பனையுலகமே சேதாரமாகிவிட்டது.

வானை நோக்கினேன். வானத்தின் மேகத்திரைகள் உருவற்று வெறும் ஜடப்பொருளாய்க் கருமை பூண்டிருந்தன. ஒரு பெரும் பறவைக் கூட்டம் மெதுவாக நீந்திச் செல்வது போல வாணத்தில் மிதந்தது. கடைசியாகச் சில அடிகள் இடைவெளிவிட்டு ஒரே ஒரு பறவை மட்டும் தனியாகப் பறந்தது. என் கவனம் அந்தப் பறவையின் மீது குவிந்தது. சற்று நேரத்தில் அந்த ஒற்றைப் பறவை மட்டுமே என் கண்களுக்குத் தெரிந்தது.

நான் வீடு நோக்கித் திரும்பினேன். ஒருநாளும் இல்லாதபடி உடம்பும் மனமும் அயர்ச்சியாக இருந்தது.

**************

மறுநாள் காலையிலும் ஊதியப்பா வந்தார். என் படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்தேன். அவர் வந்ததைக் கண்டுகொண்டதற்காக என் தலையை மட்டும் லேசாக அசைவித்தேன். ஊதியப்பா அமைதியாய் உட்கார்ந்துவிட்டார். கொஞ்ச நேரம் பொறுத்திருந்தார். என் மனைவியிடம் பேச்சு கொடுத்தபடிக்கே அடுப்படிக்குள் நுழைந்துவிட்டார். நான் அந்தப் பக்கமே போகவில்லை. மத்தியானச் சாப்பாட்டு நேரத்தில் ஊதியப்பா தன் வீடு திரும்பினார். என் மனைவியை அழைத்தேன். "என்ன ஊதியப்பா. இதையே வழக்கமா வச்சிக்கிட்டாரு. இதை நிறுத்த முடியாதா? என்று கேட்டேன்.

"எனக்கு எதுவும் புரியல்ல. ஆனா தொந்தரவா இல்லதானே?"

"அவரு வர்றதும் போறதும் எனக்கு படிக்கவும் எழுதவும் இடைஞ்சலா இருக்கு!"

"உங்கள் தொந்தரவு செய்யாம சமையக்கட்டுக்கு வந்துட்டாரே! அங்க வந்தும் சும்மாயில்லை. இன்னைக்கு தக்காளிச் சம்பலும் ரசமும் அவருதான் செஞ்சு வச்சிட்டுப் போயிருக்காரு. சாப்பிட்டுப் பாருங்க. சூப்பரா இருக்கு!"

சூப்பராகவே இருந்தது. பிள்ளைகளுக்கு மிக்சரும் வாங்கி வந்திருக்கிறார். இவரை வரவிடாமல்எப்படித் தடுப்பது? வயதால் பெரிய மனிதரும் ஆவார். வீடு தேடி வருகிற மனிதரிடம் முகம் கொடுக்காமல் இருப்பது மரியாதைக்கு மாறான செயல். திடீரென்று ஒட்டி உறவாடக் கூடிய அளவுக்கு இங்கே எதுவுமேயில்லை. நாளடைவில் இதுவே வழக்கமாகிவிட்டால் குடும்பத்தின் இயல்பான ஓட்டத்தில் ஏதாவது குளறுபடிகள் உண்டாகக் கூடுமோ என்று பலவகையாகவும் ஆராய்ந்து பார்த்தேன். ஒன்றும் யூகமாகவில்லை.

இன்றைய மத்தியானச் சாப்பாட்டை அடுத்தும் கண்ணை அசத்தலானது. எழுந்து நடமாடினேன். பள்ளிக்கூடப் பையனாக இருந்து பாடப்புத்தகம் படித்ததைப் போல, இப்போது நாவலை வாசித்துக்கொண்டெ நடந்தேன். முன்பு போல வாசிக்க முடியாமல் போயிற்று. நண்பர் கிருஷ்ணமூர்த்தி கதை கேட்டிருந்தார். அதையாவது எழுதலாம். ஆனால் கரு இன்னும் தட்டுப்படமால் இருக்கிறது. ஒரு வழியாக மணி நான்கு ஆனது. பாயில் புரண்ட என் மனையாளை எழுப்பினேன். திடுதிப்பென்று எழுந்து உட்கார்ந்தாள். "என்ன.." என்றாள்.

"உடனே டீ போடு, வெளியில அவசரமான ஜோலி ஒண்ணு இருக்கு!"

நல்ல மனைவி. மறுபேச்சு இலை. பத்து நிமிடங்களில் அருமையான தேநீர். குடித்து முடித்துக் கோப்பையைக் கீழே வைத்தபோதே தெருவிற்கு வந்துவிட்டேன். வெயிலை முகத்துக்கு நேரே சந்திக்க வேண்டியதானது. உலா செல்ல நேரம் கனியவில்லை. ஆனாலும் இடத்தைக் காலி பண்ணிவிட்டேன். ஒரு விநாடி தாமதமானாலும் ஊதியப்பாவுடன் போகிற கட்டாயத்தைத் தந்துவிடும். வேகமாய் நடந்து ஆற்றோரம் வந்து பெருமூச்சு விட்டேன். மரங்களின் நிழல்களைத் தாவித் தாவிப் பிடித்துக் கொஞ்சம் நிற்பதும் பின் நடப்பதுமாய் இருந்தேன். காட்டுவெளிக்குள் பதுங்கிக் கிடக்கும் ஏதோ ஒரு கல்யாண வீட்டிலிருந்து ‘குறுக்கு சிறுத்தவளே…’ பாட்டு மிதந்து வந்தது. மேகங்கள் மலை மீது தவழ்ந்தாட, பாட்டின் இனிமை செவியை நிறைக்க என் மனம் ரம்மியமான சுகானுபவத்திற்குள் மூழ்கியது. உயர்ந்த மலை தன்னுடைய ஆகிருதியால் என்னைப் பயமுறுத்த ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வதும் பின் தோற்பதுமாக இருக்கும். இருப்பினும் மலையும் நானும் நல்ல நண்பர்களே. இன்றும் என் முன்னே மலை தன் விளையாட்டை ஆரம்பித்தது. தன் தோற்றத்தை விஸ்தீரணப்படுத்த இன்றும் முயன்றது. எனக்குச் சிரிப்பு வந்தது. சிரித்தேன். "என்ன தனியா நின்னு சிரிக்குற?" என்று குரல் கேட்டது. ஊதியப்பாதான். என் அமைதியை அவர் தன் கையில் ஒரு பந்து போல சுருட்டிக் கொண்டதாக உணர்ந்தேன். இனி ஒருக்காலும் இவரைத் தவிர்க்க முடியாதா? என்னைக் கடினமான வார்த்தைகளைப் பேசும் நிர்பந்தத்திற்குள் தள்ளி விடுவாரோ? பல்லைக் கடித்து யோசித்தேன். எதுவுமே பேசாமல் மலையைப் பார்த்து நின்று விட்டேன். சில நிமிடங்களிலேயே இது பலன் தராது என்று தெரிந்துவிட்டது. நேற்று என் மௌனத்தைக் கலைக்கும்வரை அமைதியாய் உட்கார்ந்திருந்த மனுஷந்தானே இவர்? நான் அவர்மீது வேண்டாவெறுப்பாக இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் காட்டினேன்; கூடவே கோபமும் எனக்குண்டு என்பதற்கான பாவனைகளையும் அதிலேயே கலந்தேன். என் முகம் அந்த மாதிரியான ஒரு பூச்சாண்டித்தனத்தைக் காட்டவில்லை என்று புரிந்தது அவருடைய செயல்பாடுகளின் மூலம். உடனே வேகமாக நடக்க ஆரம்பித்தேன். ஆனால் ஊதியப்பாவுக்கு ஓட்டமே நடை என்பது அப்போதுதான் தட்டுப்படுகிறது. அவர் என்னைவிட ஓர் அடிக்கேனும் முன்னணியில் பாய்ந்து கொண்டிருந்தார்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author