உறவின் வரைபடம் (4)

"நீ ஒரு மாதிரியான ஆளுதாண்டே. நீ என்ன செய்யிற. ஏது செய்யிறங்குறத கண்டுக்கவே முடியலியப்பா. அதனால் தாண்டே நீ ஒரு எழுத்தாளனா இருக்க முடியுது! என் சின்னப்புத்திக்குத்தான் ஒரு புண்ணாக்கும் புடிபடாம போச்சு! என் விஷயத்துல நான் எவ்வளவு மடச்சாம்பிராணியா இருந்திருக்கேன். பார்த்தியா?"

என் மனம் விகாரமாய்ச் சிரித்தது. உள்ளுக்குள் பொங்கியெழும் சிரிப்பின் ஓசையை ஊதியப்பா கேட்க நேர்ந்திருந்தால் அவருடைய கைகால்கள் அச்சத்தினால் வெட்டி இழுத்திருக்கும்.

"எனக்கு என்ன வருத்தமுன்னா, இப்படி ஊரே ஒட்டுமொத்தமா திரண்டு நின்னு உன்னை ஒரு எழுத்தாளன், கவிஞன்னு சொல்லுது. ஆனா இந்த ஊர் மக்களையெல்லாம் நான் என் விரல் நுனியில் அடக்கி வச்சிருக்கேன். இருந்து உன் விசயம் என் மண்டையில ஏறலியே! என்ன மனுசன்பா நான்? இவ்வளவு நாளும் நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாமே போச்சேப்பா!"

அவருடைய அவஸ்தைகளை அவர் வாயாலேயே கேட்கக் கேட்க என் மனம் குளிர்ந்தது; துள்ளாட்டம் போட்டது. "ஒரு எழுத்தாளனா நீ நம்ம ஊர்ல இருக்கும்போது நமக்கு தேவையில்லாத குப்பையெல்லாம் பெரிய விசயமா மனசுல பட்டிடுச்சே! அதுதான் பாத்துக்க, நான் என்னதான் பெரிய மனுசனா இருந்தாலும் என் உலகம் இன்னும் இருட்டுலதான் கெடக்குதுன்னு புரிஞ்சிக்கிட்டேன். எவனுக்கெல்லாமோ என்ன எழவையெல்லாம் என் தலையில் போட்டு ராப்பகலா செஞ்சுக்கிட்டு கெடக்கேன். அஞ்சு பைசாவுக்கும் பொறாத வேலை. அதக் காட்டிலும் உன் வீட்டுல கெடந்து உனக்கும் உன் வீட்டுக்கும் வேண்டப்பட்டதயெல்லாம் நம்மால முடிஞ்ச அளவுக்கு செஞ்சு ஒரு பிரயோசனமா இருந்துக்கலாமேன்னு தோணுதுப்பா"

இவர் மனவருத்தம் இந்த அளவுக்கா ஆகிவிட்டது என்று நான் மலைத்துப் போகிற அளவுக்கு அவர் பேசியவாறு இருந்தார். ஒரு சாதாரண விவரம் தன் தனித்துவத்தை அடித்து வீழ்த்தியதன் துயரம் ஒரு மனச்சுமையாக அதிகரித்து வருவதை எனக்கு உணர்த்த அவர் பட்டபாடு பெரும்பாடாக இருந்தது. அவரை ஆற்றுப்படுத்துவது எனக்குரிய கடமையாக ஆகிவிட்டது. "சரி ஊதியப்பா, இதுல இவ்வளவு வருத்தப்படறதுக்கு என்ன இருக்கு? எழுத்தாளன்னா என்ன கொம்பா முளைச்சிருக்கி? மத்தவங்க எழுதல. அவங்கள்லாம் எழுத ஆர்மபிச்சிட்டாங்கன்னா நான் பின்னால் போனாலும் போயிடுவேன். உங்கள மாதிரி ஆளுங்க இன்னமும் எழுதாதால நாங்க பெரிய எழுத்தாளர் மாதிரி தோணறோம்"

"ம்ம்…" கையை வேகமாக ஆட்டியபடிக்கு அவர் சொன்னார். "அப்படில்லாம் சொல்லாத, அதுக்கெல்லாம் ஒரு இது வேணுமாக்கும்"

"அது?"

"அதாம்பா… அதுதான் ஆண்டவனோட கிருபை. பேனா புடிச்சாலும் உப்பு, புளின்னு எழுதத் தெரியாதவன் ஒரு கோடி பேரு இருக்கான் தெரியுமா? அப்ப உன்ன நான் தெரிஞ்சு வச்சுகலேன்னா அது எவ்வளவு பெரிய தலையெழுத்து?"

"நானும் ஊரு ஜனங்கள்ட்ட இருந்தும், உங்கள மாதிரி ஆட்கள்கிட்ட இருந்தும் ரொம்ப தூரம் விலகிதான இருந்திருக்கேன். அதனால நீங்க என்னை எழுத்தாளன்னு தெரிஞ்சிதான் இருக்கணும்னு அவசியமே இல்லே தெரியுமா?"

"அப்படி என்ன தூரம் உனக்கும் எனக்கும்? நீ எங்க வாப்பாவுக்கு அவங்க மாமியோட உறவுமுறையில, அவங்க உன் பெரியாப்பாவோட கடைசி மவளுக.. அப்படியே சுத்தி வந்தா அந்த ஆனாகான புஹாரி காக்காவோட மருமகனுக்கு நீ சகல. அவன் எனக்கு மச்சினன். அப்போ நீயும் எனக்கு மச்சினன். மச்சினன்னா மாப்பிள்ளை. ஏ, நீ எனக்கு மாப்பிளப்பா!"தன் நீண்ட காவியத்தை நிறுத்திவிட்டு என்னை ரொம்ப ஆவலாக உற்று நோக்கினார்.

"ஊதியப்பா, முன்னால் ஒருக்கா நீங்க கணக்கு பாத்தப்போ நான் உங்களுக்கு மருமவன் முறைன்னு சொன்னீங்களே, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு!"

"அது என் பொண்டாட்டி வீட்டு வகையில வச்சு கணக்கு போட்டேனோ.. என்ன எழவோ? அத இப்ப யாரு மனசுல வச்சுருக்கா?"

"இருந்தாலும் ஊதியப்பா மருவன மச்சினன்னு முறை மாத்திக்கிட்டா நல்லாவா இருக்கு?"

"துலுக்கனுக்கு தொண்ணூத்தெட்டு முறைன்னு சொல்லி வச்சிருக்கானுவோ! சும்மாவா சொல்லியிருப்பான். அந்தக் கதைய விடு. இப்ப நீ எனக்கு மாப்பிள்ள. என் மாப்பிள்ள ஒரு எழுத்தாளன்ங்குற விசயத்த நாந்தான் முதன்முதலா ஊருல எல்லாத்துக்கும் சொல்லியிருக்கணும். ஆனா அப்படி நடக்காம போச்சே. பாவி எல்லாத்தையும் கெடுத்துப்புட்டேனே!" அவரின் புலம்பல் எப்போது முடிவு பெறும் என எனக்குப் புரியவில்லை. திடீரென்று என் கையைப் பிடித்துக்கொண்டார். "மாப்பிள்ள, இங்க பாரு, என்னைப்பத்தி முதல்ல நீ ஒரு கதை எழுதுப்பா. இப்படியெல்லாம் உருப்படாத மனுசனுங்க இருக்காங்கன்னு எழுது. ஒரு பிராயச்சித்தமா இருக்கட்டும்" என்று வெதும்பினார்.

மனசுக்குள் சொன்னேன், "இல்ல; உருப்படியான மனுசன்னு எழுதிக் காட்டுறேன்" என்று!

(முடிந்தது)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author