உறவுகள் தொடர்கதை-1

பொழுது புலர்ந்து வெகுநேரமாகிவிட்டது. தூக்கம் கலைந்து எழுந்த அரவிந்தன், மணியைப் பார்த்தான்.

கடிகாரம் எட்டரை மணியைக் காட்டியது.

ஞாயிற்றுக்கிழமைதான் என்றாலும் அதற்கு மேல் அவனால் தூங்கமுடியவில்லை. எழுந்து வேலைகளை முடித்துக் கொண்டு, வீட்டைப்பூட்டிக் கொண்டு காலைச் சிற்றுண்டிக்காக உணவகத்தை நோக்கி நடந்தான்.

உணவு முடிந்ததும் திரும்பி வீட்டுக்கு வந்தான். தொலைக்காட்சியை இயங்க வைத்துப் பார்த்தான். சில சானல்களில் பக்தி அலைகள் பெருகி வழிந்தன; சிலவற்றில் திரைப்படம், அவை சார்ந்த பாடல்கள், விமரிசனம் – எதையுமே பார்க்கப் பிடிக்காமல் நிறுத்தினான்.

வானொலியை இயக்க, மணிவிழா கண்ட ஒரு பிரபலமான தம்பதியைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.

"உங்கள் இல்லறத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?" பேட்டியாளர் கேட்டார்.

"விட்டுக் கொடுத்து வாழ்வது" என்று இருவரும் ஒரே நேரத்தில் பதிலளித்தனர்.

அரவிந்தன் பல்லைக் கடித்தான். "ச்சே! வேறு வேலை கிடையாது. பேட்டி எடுக்கறாங்க பேட்டி!"

கோபத்தோடு வானொலியை நிறுத்தினான். அன்றைய தினசரியைக் கையில் எடுத்தான்.

கொலை, கொள்ளை, விபத்து, கற்பழிப்பு என்று சோகச் செய்திகள் நிறைந்து கிடந்தன. இவை போதாவென்று அங்கங்கே அரசியல்(வி)வாதிகளின் அறிக்கைப் போர்கள்!

அன்றைய ஞாயிறு மலரின் சிறப்புக் கட்டுரை: "பெருகி வரும் விவாகரத்துகள்"

பலதரப்பட்டவர்களையும் பேட்டி கண்டு – சமூக சேவகிகள், வழக்கறிஞர், விவாகரத்து பெற்று வாழ்ந்து கொண்டிருப்போர், மனநல மருத்துவர் என்று அனைவர் கருத்துகளும் அலசப்பட்டிருந்தன.

தலைப்பைப் பார்த்ததும் அரவிந்தனுக்குக் கோபம் எகிறியது.

"யார் யாரை விவாகரத்து செய்தால் இவர்களுக்கு என்ன வந்தது? பெரிசா கட்டுரை எழுத வந்துட்டாங்க…"

திட்டிக்கொண்டே அந்தப் பேப்பரைத் தூக்கி வீசினான். தண்ணீர் குடித்து விட்டு வந்து மறுபடி படுத்துக் கொண்டான்.

மறுபடியும் மறுபடியும் நினைவுகள் பொங்கின. அவன் யாரை மறப்பதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறானோ, மீண்டும் அதே நினைவு.

"ரஞ்சனி இருந்திருந்தால்…இப்படி எனக்குப் போரடிக்குமா?"

கோபம் போய் துக்கம் வந்தது.

மற்ற நாள்களில் எல்லாம் ஏழு மணிக்கு எழுப்பினால் கூட எழுந்திருக்காத ரஞ்சனி, ஞாயிறு என்றால் போதும், காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விடுவாள்.

பத்து நிமிஷம் வரை பொறுத்துப் பார்த்துவிட்டு, அரவிந்தனை எழுப்பிவிட்டு விடுவாள்.

*********************

"எழுந்திருங்க டாடி! மணி ஆறாயிடுச்சு. எழுந்திருங்க…."

அரவிந்தன் மகளைக் கொஞ்சிப் பார்ப்பான்.

"இதப் பாரும்மா கண்ணா! முதல்ல அம்மாவை எழுப்பி காபி போடச் சொல்லு. பின்னாலேயே அப்பா வருவேன். போம்மா…"

ரஞ்சனியை லேசில் ஜெயிக்க யாராலும் முடியாது.

"அம்மா அப்பவே எழுந்துட்டாங்க. நீங்க தான் இன்னும் தூங்கறீங்க. சீக்கிரம் வாங்க. கார்ட்டூன் பார்க்கலாம்."

ஞாயிறு முழுதும் அரவிந்தனுக்கு மகளோடு தான் இருக்க வேண்டும். மற்ற நாள்களிலெல்லாம் அரவிந்தன் தன் அலுவலகத்தில் இருந்துவரும் முன்பே ரஞ்சனி தூங்கி விடுவதால், ஞாயிறு தான் இருவருக்குமே ‘ஸ்பெஷல்’.

ரஞ்சனி முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். ஞாயிறன்று அப்பாவோடு உட்கார்ந்து பேசுவாள், பேசுவாள், அப்படி என்னதான் பேசுவார்களோ என்று சமயத்தில் அரவிந்தனின் மனைவி சாந்திக்குக் கூட சந்தேகம் வரும்.

"அப்பாவும் பெண்ணும் என்ன தான் பேசுவீங்களோ?"

"அம்மா! இதெல்லாம் எனக்கும் அப்பாவுக்கும் மட்டும் உள்ள ரகசியம். உங்களுக்குச் சொல்ல முடியாது. இல்லையா அப்பா?" என்று அம்மாவை வெறுப்பேற்றுவாள்.

அந்த வாரம் ரஞ்சனியின் பள்ளியில் நடந்த விஷயங்களைதான் சொல்லிக் கொண்டிருப்பாள். சாந்திக்கு அதையெல்லாம் உட்கார்ந்து கேட்க நேரமும் இல்லை; பொறுமையும் போதாது. அரவிந்தனுக்கு ரஞ்சனி சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். விழிகள் விரிய உணர்ச்சி பாவங்களோடு அவள் காயத்ரியோடு சண்டை போட்டது, பிறகு பழம் விட்டது, நரேன் டீச்சரிடம் அடி வாங்கியது, சுகன்யா பென்சிலைத் தொலைத்தது, மேத்ஸ் மிஸ் ரஞ்சனியை ‘வெரிகுட்’ சொன்னது, அந்த வாரம் சொல்லிக் கொடுத்த பாட்டு, விளம்பரத்தில் வரும் புது சாக்லேட்- இன்னும் அனுமான் வால் போல வளர்ந்து கொண்டே போகும்.

திடீரென்று பார்த்தால் அதற்குள் சாயங்காலம் ஆகியிருக்கும். படம் பார்க்க அமர்ந்தால் ரஞ்சனியின் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது.

அதனால் சாந்தியை படம் பார்க்க விட்டு விட்டு, இவர்கள் இருவரும் வெளியே புறப்பட்டு விடுவார்கள்.

*************************

மகள் நினைவு வந்ததும் கண்கள் கலங்கின. ஆயிற்று, ரஞ்சனியைப் பிரிந்து இரண்டாண்டுகள் முடியப் போகின்றன. கூடவே விவாகரத்து வாங்கிச் சென்ற மனைவி சாந்தியும் நினைவில் வந்தாள்.

அரவிந்தன் எவ்வளவோ முயற்சி செய்தும் ரஞ்சனி பெண் குழந்தையானதால் தாயுடன் வளர்வதே முறை என்று நீதிபதி ரஞ்சனியை சாந்தியின் பாதுகாப்பில் அளித்து தீர்ப்பு கூறிவிட்டார்.

அரவிந்தனுக்கு ரஞ்சனியிடம் எவ்வளவு பிரியம் இருந்ததோ, அதே அளவு வெறுப்பு சாந்தி மீது ஏற்பட்டிருந்தது. அதனாலேயே இருவரும் மனமொத்து ‘மியூச்சுவல் கன்ஸென்ட்’ அடிப்படையில் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

வாழ்க்கையை விரக்தியும் வேதனையுமாய் நகர்த்திக் கொண்டிருந்தான். அதைப் புரிந்து கொள்ளாத நண்பர்கள், ‘இன்னமும் சாந்தியை மறக்க முடியவில்லையா? அதனால் தான் மறுபடி கல்யாணம் செய்து கொள்ளவில்லையா?’ என்று அடிக்கடி கேட்கத் தொடங்கினர். அவர்கள் வாயை மூட வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகவே அரவிந்தன் மறுமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருந்தான். அவன் கொடுத்திருந்த "மணமகள் தேவை" விளம்பரமும் சென்ற வாரம் பத்திரிகையில் வந்திருந்தது.
சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு, அரவிந்தனுக்கு அந்தப் பத்திரிகை கிடைத்தது. தான் கொடுத்திருந்த விளம்பரத்தை ஒருமுறை படித்துப் பார்த்தான்.

"இந்து, 34 வயது, அரசு வேலை, கை நிறையச் சம்பளம், 170 செ.மீ உயரம், அவிட்டம், முதல் மனைவியை சட்டப்படி பிரிந்து விட்ட வரனுக்கு மணமகள் தேவை. ஒரு பெண் குழந்தை (7 வயது) அன்னையின் கவனிப்பில் உள்ளது. எந்த வில்லங்கமும் இல்லை. நற்குணமுடைய, அழகான, அடக்கமான, அனுசரிக்கத் தெரிந்த, குடும்பப்பாங்கான, வேலைக்குச் செல்லும்/ செல்லாத பெண் தேவை. ஜாதி, மதம் தடையில்லை. விதவை, விவாகரத்தானோர் விண்ணப்பிக்க வேண்டாம். ஆதரவற்ற பெண்களும் தொடர்பு கொள்ளலாம்."

விளம்பரத்தின் கீழே அவனுடைய பெயரும் வீட்டு முகவரியும், தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தன.

"இது வரை எந்த பதில் கடிதமும் வரவில்லை, பார்க்கலாம்" எனத் தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்த அரவிந்தனை அழைப்பு மணியின் ஒலி கலைத்தது.

"யாரது? என்னைப் பார்க்க வந்திருப்பது?"

கதவைத் திறக்க, அந்தப் பெண் புன்சிரிப்போடு வணக்கம் சொன்னாள்.

‘அமுதம்’ பத்திரிகையில் வந்த விளம்பரம் சம்பந்தமாப் பார்க்க வந்திருக்கேன். மிஸ்டர் அரவிந்தன் இருக்காரா?"

(உறவுகள் தொடரும்…..)

About The Author