உறவுகள் தொடர்கதை – 13

இடைவேளைக்கான நேரம் முடிந்து மணி ஒலித்தது. அரவிந்தனைச் சூழ்ந்திருந்த குழந்தைகள் பட்டாளம் அவரவர் இடம் தேடி நகரத் தொடங்க, அதற்குள் அவர்கள் வகுப்பாசிரியை வந்துவிட்டார்.

"என்ன கும்பல் இங்கே?"

"எங்கப்பா வந்திருக்கார் மிஸ்!" ரஞ்சனி சொல்ல, அரவிந்தன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

பதில் வணக்கம் சொன்ன ஆசிரியை, ரஞ்சனியையும் வகுப்புக்குப் போகச் சொல்லிவிட்டு, அரவிந்தனிடம், "உங்க கிட்டே ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்" என்றார்.

இருவரும் வெளியே வந்தனர்.

"ரஞ்சனி புத்திசாலிப் பொண்ணு; வெரி ஸ்மார்ட்! ஆனா, வகுப்புல அப்பான்னு ஏதாவது பாடத்துல வந்துட்டா, உங்களை நினைச்சு ரொம்ப அப்ஸெட் ஆயிடுவா. இரண்டு வருஷமா நான்தான் அவளுக்கு வகுப்பு மிஸ். அடிக்கடி என்கிட்டே வந்து ‘எங்கப்பா வந்துடுவார்தானே மிஸ்’னு கேட்பா. மத்த பசங்க எல்லாம் ‘அவங்கப்பா வாங்கிட்டு வந்தது’னு ஏதாவது எடுத்துட்டு வந்தா, ரஞ்சனியும் விக்கியும் ரொம்ப டிப்ரெஸ் ஆயிடுவாங்க….ரஞ்சனி உங்க கிட்டே எவ்வுளவு பாசமா இருக்கான்னு நீங்க புரிஞ்சுக்கிட்டா நல்லது."

அரவிந்தன் இடையில் குறுக்கிட்டான்.

"ஆனா, மேடம்! நானும் என் மனைவியும் பிரிஞ்சு வாழறோம்."

"தெரியும் சார், சாந்தி எங்கிட்டே சொல்லி இருக்காங்க. நீங்க மனைவியை மட்டும்தான் சட்டப்படி பிரிஞ்சீங்க. உங்க மகள் ரஞ்சனிங்கிறது என்னிக்கும் பிரியாத உறவு. குறைஞ்சது மாசத்துக்கு ஒரு முறையாவது நீங்க வந்து ரஞ்சனியை பார்த்துட்டுப் போங்க. ரஞ்சனியோட வெல்விஷர்ங்கிற முறையில இது என்னுடைய வேண்டுகோள். நான் வரேன்."

ஆசிரியை சென்று ரஞ்சனியை அனுப்பி வைத்தார்.

"என்னப்பா, மிஸ் என்ன சொன்னாங்க?"

சிந்தனையில் மூழ்கிவிட்ட அரவிந்தன் கலைந்து வந்தான்.

"நீ நல்லா படிக்கிறேன்னு சொன்னாங்க. சரி, அப்பா கிளம்பட்டுமா?"

"வீட்டுக்குத் தானேப்பா போறீங்க?"

அரவிந்தன் தயங்கினான்.

"இ…இல்லைம்மா.."

"அப்ப திரும்ப இனிமே என்னைப் பார்க்க வரமாட்டீங்களா?" ரஞ்சனியில் குரலில் அழுகையின் அடையாளம்.

"அப்படி இல்லை ரஞ்சு! நான் வீட்டுக்கு வரலாமான்னு அம்மா கிட்டே கேளு. அம்மா சரின்னு சொன்னா நாளைக்கு நானும் உன்னோட வீட்டுக்கு வருவேன், சரியா?"

அரவிந்தன் சமாதானப்படுத்த முயன்றான்.

"நிச்சயமா நாளைக்கு வரணும். சரியா? பை" ரஞ்சனி கையசைத்து வகுப்புக்கு ஓடினாள்.

அரவிந்தனுக்கு சாந்தியின் நினைவும், கூடவே அவளுக்கு ஏற்பட்டுள்ள நோயும் நினைவுக்கு வந்தன. மகளைப் பார்த்த மகிழ்ச்சி அப்படியே ஆவியாக, மனைவியைப் பார்த்து ஆறுதல் சொல்ல உள்ளம் தவித்தது.

சாந்தி சொன்னதாக சூர்யா கூறியவை அவன் காதில் எதிரொலித்தன.

"இப்ப என் நிலைமை தெரிஞ்சா ஒருவேளை அவர் வருவார்; ஆனா மனசு மாறி வரமாட்டார். என்மேலே பரிதாபப்பட்டு வருவார். நான் சாகப்போறேன்னு தெரிஞ்சா வேதனைப்படுவார். எதுக்கு அவரை கூட்டிட்டு வந்து வேதனைப்படுத்தணும்?"

நோயால் சாந்தி வேதனைப்படும்போது, உதவ வேண்டும் என்று அவனுக்குத் தோன்றுகிறது. அதன் காரணம், இன்னும் சாந்தி மீது தனக்கு உள்ள அன்பா, அல்லது சாந்தி இருக்கப்போவது இன்னும் கொஞ்ச காலம்தானே, அதுவரை அவளை சந்தோஷமாக வைத்திருக்கலாமே என்ற பரிதாபத்தில் எழுந்த உணர்ச்சியா என்று அரவிந்தனாலேயே இனம் பிரிக்க முடியவில்லை.

ஆனால் சாந்தியின் நோய் பற்றித் தனக்கு தெரிந்ததாக அரவிந்தன் காட்டினால், நிச்சயம் அவன் பரிதாபப்பட்டே வந்திருக்கிறான் என்று சாந்தி முடிவு செய்துவிடுவாள். அவன் மனம் மாறி வரவேண்டுமென்ற அவள் ஆசை நிறைவேறாமல் போய்விடும். அரவிந்தனின் மனச்சாட்சி அவனை எச்சரித்தது.

"நானே மனசு மாறி வந்தது போலத்தான் சாந்தியைச் சந்திக்க வேண்டும். அப்போதுதான் அவள் எண்ணம் நிறைவேறும். அவள் சொல்லும் வரை அவள் வியாதியைப் பற்றித் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளக் கூடாது. சாந்தியின் உடல்நிலையைத் தெரிந்து கொள்ள நிச்சயம் சூர்யா உதவி செய்வாள்" என்று தீர்மானிக்க, சூர்யா என்ற பெயர் வந்ததும் கொஞ்சம் இடறியது.

‘சூர்யாவை இன்னும் மூன்று மாதங்களில் திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னாயே? அது என்னவாயிற்று? இப்போது அவள் உன் மனைவி நலத்துக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயே?’

—அரவிந்தன் மனசுக்குள் போராட்டம் நடக்கத் தொடங்கியது.

"சாந்தியின் நிலை எனக்கு முன்பே தெரிந்திருந்தால், சூர்யாவிடம் அப்படிச் சொல்லியிருக்கவே மாட்டேன். அது என் தவறா? இல்லை. என்னைவிட, சூர்யாவுக்கு சாந்தியின்மேல் அதிகமான அன்பும், அக்கறையும் உண்டு. சாந்திக்காகவும், ரஞ்சனிக்காகவும் அவ்வுளவு தூரம் வருத்தப்பட்ட சூர்யா, இப்போது அவர்கள் வாழ்க்கை சீராகப்போகிறது என்று தெரிந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவாள்."

இன்றைக்கே சூர்யாவிடம் இதுபற்றிப் பேசி அவள் கருத்தை அறிவதென்று அரவிந்தன் தனக்குள் முடிவெடுத்தான். நிச்சயமாய் சூர்யா சாந்திக்கு எதிராய் இருக்க மாட்டாள் என்று அவன் மனம் சொன்னது. மாலையில் கடற்கரையில் காத்திருப்பதாய், தொலைபேசியில் அழைப்பு விடுத்தான்.

***********

அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய சாந்திக்கு அதிசயம் காத்திருந்தது.

எப்போதும் பள்ளிச் சீருடையோடு, ஆயாவோடு சண்டை போட்டு அடம் செய்து கொண்டிருக்கும் ரஞ்சனி அன்று வேறு உடைக்கு மாறியிருந்தாள்.

தலை சீவி, முகம் கழுவி, டிரெஸ் செய்திருந்தாள். அதைவிடப் பேரதிசயம், உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தாள்.

"அடாடா! இன்னிக்கு மழைதான் வரப்போகுது, ரஞ்சு!" என்றபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் சாந்தி.

"ஆமாங்க, அம்மா! பாப்பா இன்னிக்கு ரொம்ப நல்ல புள்ளையா இருக்கு" என்றபடியே ஆயா காபி கொண்டுவந்தாள்.

அதைப் பருகிய சாந்தி உடை மாற்றிக் கொண்டு வந்து ரஞ்சனியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

"என்ன ரஞ்சு! ஏதாவது விஷயம் இருக்கணுமே இன்னிக்கு, என்ன சொல்லு?"

"ஒரு ஸ்பெஷல் நியூஸ் இருக்கும்மா."

"அதானே பார்த்தேன், என்ன சொல்லு?"

"நீங்களே யோசனை பண்ணுங்களேன்"

"ம்….நீ கிளாஸ்லே ஃபர்ஸ்ட் ராங்க் வாங்கியிருக்கே, கரெக்டா.?"

"போம்மா….இது ரொம்ப ரொம்ப….ஸ்பெஷல்…."

"எனக்குத் தெரியலை, ம்.. நீயே சொல்லு"

"சொல்லட்டுமா..? இன்னிக்கு அப்பா என்னைப் பார்க்க வந்தார், தெரியுமா?" என்றாள் ரஞ்சனி, உற்சாகமாக.

"ரஞ்சனி! பொய் சொல்லக்கூடாதுன்னு உனக்கு சொல்லியிருக்கேன் இல்லை?"

"பொய்யில்லைம்மா..காட் பிராமிஸா அப்பா இன்னிக்கு ஸ்கூலுக்கு வந்தார்; என்னோட பேசினார்! நான் வீட்டுக்கு வாங்கப்பான்னு கூப்பிட்டேன். அம்மா சரின்னு சொன்னா நாளைக்கு வரேன்னு சொன்னார். அம்மா, அம்மா! நாளைக்கு அப்பாவை இங்கே கூட்டிட்டு வரேன்மா, ப்ளீஸ்மா! சரின்னு சொல்லுங்கம்மா! " என்று ரஞ்சனி கெஞ்சினாள்.

"இன்னமும் எனக்கு நம்பிக்கை வரலே. சரி, அப்படி ஒருவேளை நாளைக்கு அப்பா ஸ்கூலுக்கு வந்தா, நீ அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வா"

"தேங்க்யூம்மா…!"

ரஞ்சனி உற்சாகத்தில் துள்ளினாள்.

(உறவுகள் தொடரும்……)

About The Author