உறவு வரும், ஒருநாள் பிரிவு வரும் (1)

நண்பர் சாந்தன், யாழ்ப்பாணத்தில் வசிக்கிற சாந்தன் சொல்லுவார், யாழ்ப்பாணத்து மக்கள் திருச்சி வானொலியையும் சென்னை வானொலியையும் குறிப்பிடுகிறபோது, ‘திருச்சி ரேடியோ சிலோன், மெட்ராஸ் ரேடியோ சிலோன் எண்டு தான் சொல்லுவினம்’ என்று.

டால்டா என்றால் வனஸ்பதி என்று இருப்பதைப் போல, டார்ட்டாய்ஸ் என்றால் கொசுவத்தி என்று இருந்ததைப் போல, இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால் வானொலி என்றால் ரேடியோ சிலோன் தான்.

அதைப் போல, ஸ்கூட்டர் என்றால் லாம்ப்ரெட்டா தான்.
பிற்காலத்தில், லாம்ப்ரெட்டா சுருங்கிப் போய் லாம்பியாக ஆனபோது தான் ஸ்கூட்டர் ஓட்டுகிற பேறு எனக்குக் கிட்டியது.
கல்யாணமாகி ஒரு வருஷங் கழித்து, மாமனார் எனக்கொரு ஸ்கூட்டர் சாங்ஷன் செய்தார்.

எனக்கு என்றால் எனக்கே எனக்கு அல்ல.
நான் டிரைவர்.
அவருடைய மகளைப் பின்னால் உட்கார்த்தி வைத்துக் கொண்டு திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் சுற்றிச் சுற்றி வர விதிக்கப்பட்ட டிரைவர்.

அதிலே எனக்கொண்ணும் ஆட்சேபனையிருக்கவில்லை. ஆனால் தன்மானம் என்கிற வஸ்து கொஞ்சம் முரண்டு பிடித்தது.
தன்மானமா வரறட்டுக் கௌரவமா என்கிறதில் சந்தேகம் உண்டு.

”ஒங்ங்கப்பா நமக்கு ஒரு லாம்பி வாங்கிக் குடுக்கப் பிரியப்படறதப் பத்தி ரொம்ப சந்தோஷம்மா. ஒம்பதாயிரம் ரூபா. என்னோட சம்பாத்தியத்ல நிச்சயமா வாங்க முடியாது. டி .வி .எஸ்ல புதுசா ஒரு மோப்பட் இன்ட்ரடியூஸ் பண்றாங்க. டி .வி .எஸ் ஃபிஃப்ட்டின்னு பேரு. எங்க ஆஃபீஸ் பக்கத்துலதான் ஷோரூம். எஸ் ஜி ஜெயராஜ் நாடார் கம்பெனி. ஷோக்கேஸ்ல வச்சிர்ருக்கான். வண்டி ரொம்ப அழகாயிருக்கு. ரெண்டாயிரத்திச் சொச்சந்தான். நாங்க மூணு ஃப்ரண்ஸ் ஆஃபீஸ்ல லோன் போட்டு வாங்கலாமான்னு யோசிக்கிறோம். நீ என்ன சொல்ற. ஒன்னோட சம்மதம் முக்கியம். ஏன்னா, நீ தான் பின்னாடி ஒக்காரப் போறவ. ஒங்கப்பா வாங்கிக் கொடுக்கற லாம்பி ஸ்கூட்டர்ல ஒன்ன ஒக்காத்திக் கூட்டிட்டுப் போறதவிட என்னோட சம்பாத்தியத்ல வாங்கற மோப்பட்ல ஒன்ன ஒக்காத்தி வச்சுக் கூட்டிட்டுப் போறது தான் எனக்கு சந்தோஷமா யிருக்கும். ஏன்னா….”

நான் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து அவளொரு நெத்தியடி அடித்தாள்.
”மோப்பட்லயெல்லாம் நா ஒக்கார மாட்டேன்.”

போட்ட போட்டில் தலைக் குப்புற விழப்போனேன்.
இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு, இன்னொரு முறை முயன்று பார்க்கலாம் என்று வாயைத் திறந்தேன்.

”நா எதுக்குக் கேக்கறேன்னா, நம்ம சுய சம்பாத்தியத்ல….”

”ஒங்க சுய சம்பாத்தியத்த நீங்களே வச்சுக்குங்க. பெரிய ஜெனரல் மானேஜர் உத்யோகம் பாக்கறீங்க! கொழும்புல எங்க டாடிகிட்ட மூணு கார் இருக்கு. ஒண்ணுல்ல ரெண்டுல்ல. மூணு. என்னமோ அக்கா பையன், ஒறவு விட்டுப் போயிரக் கூகூடாதுன்னு ஒரு சமாதானஞ் சொல்லி, எங்க டாடி ஒங்கள எந்தலையில கட்டி வச்சுட்டாங்க. ஒங்களக் கட்டிக்கிட்டு இந்த ஊருக்கு வந்தப்புபறந்தான், எந் தலையெழுத்து நா டவுன் பஸ்ல போறேன். பெரிய மனசு பண்ணி டாடி ஸ்கூட்டர் வாங்கித் தந்தா மரியாதையா வாங்கிக்குவீங்களா, என்னமோ தன்மானச் சிங்கம் மாதிரி பினாத்தறீங்களே!”

எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.
வாஸ்தவந்தான்! .
உறவு விட்டுப் போய்விடக் கூடாது என்று என்னை இவள் தலையிலோ, இவளை என் தலையிலோ கட்டி வைத்து விட்டது வாஸ்தவந்தான்.
கொழும்பில், மாமா வீட்டில் மூணு கார் இருக்கிறதும் வாஸ்தவந்தான்.
மூணு ஸைஸில் மூணு கார்.
அப்பா கார், அம்மா கார், பாப்பா கார்.

அப்பா, அம்மா, பாப்பா மூணு பேருக்கும் டிரைவிங் தெரியுமாதலால், மூணு காருக்கும் சேர்த்து ஒப்புக்கு ஒரு டிரைவர். ஒரேயொரு டிரைவர்.
புது மருமகனாய் மாமியார் வீட்டுக்குப் போன எனக்கும் டிரைவிங் தெரியும். ஹ.!

புதுமணத் தம்பதிகள் ஊர் சுற்றிப்பார்க்க, பாப்பாக் கார் ஒதுக்கப்பட்டது. என்னைப் போன்ற சின்ன உருவத்துக்குச் சின்னக் கார்தான் தோது.
நிகாம்பு, பென்தொட்ட, கண்டி, சிலாபம் போன்ற பக்கத்து ஊர்களுக்குப் போய்வர ஏற்பாடானபோது, பெரிய வண்டிகளில் ஒன்று எங்கள் பாவனைக்குத் தரப்பட்டது.
காரோடு, கார்ச் சாரதியும்.

காரில் போகிற போது, டிரைவரின் பெயர் என்ன என்று இவளைக் கேட்டேன்.
”’தெரியாது”’ என்றாள், சர்வ அலட்சியமாய்.
”என்னது? தெரியாதா?”
”அதுக்கு ஏன் இப்படி வாயப் பொளக்கறீங்க. தெரியாதுன்னா தெரியாது தான்.”
”இவர் எத்தன நாளா ஒங்ககிட்ட வேலக்கி இருக்கார்?”
”மூணு வருஷம் இருக்கும்.”
”மூணு வருஷமா வேல செய்யறவரோட பேர் தெரியாதுங்கற?”
”அதுக்கென்னங்க இப்ப? ஒங்களுக்குப் பேச வேற விஷயமே கெடயாதா? லுக், இவர் எங்க டிரைவர். நாங்க எல்லாரும் இவர டிரைவர்னுதான் கூப்புடுவோம். நீங்களும் அப்படியே கூப்புடலாம். புரிஞ்சிதா?”

டிரைவரை அவர் இவர் என்று இவள் மரியாதையாய்க் குறிப்பிடுவதே பெரிய விஷயம் என்று நான் சமாதானஞ் செய்து கொண்டேன்.
சின்னக்காரில் நாங்கள் ரெண்டு பேரும் ஊரைச் சுற்றி வருகையில், காரோட்டுவதற்கு எனக்கு சர்வ சுதந்திரம் அருளிவிட்டுப் பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொள்வாள்.

கொழும்பு நகர வீதிகள் எனக்குத் தெரியாததால் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு இவள், லெஃப்ட் ரைட் சொல்லிக் கொண்டு வருவாள். ஆனால் அதோடு நிறுத்திக் கொள்ள அவளுடைய பொறுப்புணர்ச்சி இடந்தராது.
அவங்ங்க அப்பா காரை, ஓட்டத் தெரியாமல் ஓட்டி நான் கெடுத்துவிடக் கூடாதில்லையா!

ஹாண் அடிங்க… பிரேக் புடிங்க…. இந்த எடத்துல ஓவர்ட்டேக் செய்யாதீங்க….. இவ்வளவு ஓரமாப் போகாதீங்க…. கியர்ச் சேய்ஞ்ஜ் பண்ணுங்க….  

அனத்தல், பொறுமையை சோதிக்கிறதாயிருக்கும்.

இந்தக் கார்க்கதை யெல்லாம் இருபத்தியாறு வருஷப் பழசு. இனி இருபத்தியஞ்சு வருஷப் பழைய ஸ்கூட்டர் கதைக்கு வருவோம்.

வண்ணார்ப்பேட்டை ஏ ஆர் ஏ எஸ் டிப்போவில் என்னுடைய (?) லாம்பியை டெலிவரி எடுத்த தினம் தான் ஒரு பேருண்மை உறைத்தது. காரோட்டக் கற்றுக் கொண்டிருந்தவன் ஸ்கூட்டர் ஓட்ட முறைப்படிக் கற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும், தியரி தெரியுமாதலால், மெக்கானிக் உதைத்துக் கொடுத்த ஸ்கூட்டரில் ஸ்ட்டாண்டை எடுத்துவிட்டு, கியரை மாற்றி, ஆக்ஸலரேட்டரைக் கமுக்கமாய் முறுக்கி வண்டியைக் கிளப்பிக் கொண்டு போனது ஒரு த்ரில்லாயிருந்தது.
சின்ன வயசில் சைக்கிள் ஓட்டப் பழகிய புதுசில் இருந்த மாதிரியான த்ரில்.
ரொம்ப சுலபமாய் லாம்பி எனக்கு வசப்பட்டது.

ஆனால், இவளை வசப்படுத்துவதுதான் பெரிய பிரயத்தன மாயிருந்தது. இந்த ஸ்கூட்டர் தன்னுடைய அப்பா வாங்கிக் கொடுத்தது, இதைத் துஷ்டர்களிடமிருந்து (நான் உட்பட) பாதுகாத்தருள வேண்டிய கடமையும் பொறுப்பும் தனக்கு இருப்பதாய் நம்பிக் கொண்டிருந்தாள்.

பேட்டை ஹிண்டு காலேஜில் பியூஸி படித்துக் கொண்டிருந்த சித்தி பையன் ஒரு ரவுண்ட் போய்ட்டு வருவதாய்க் கேட்டதற்கு, ரொம்ப தாராளமாய் சாவியை எடுத்துக் கொடுத்து நான் வழியனுப்பி வைத்த போது, இவள் உஷாராகி வாசலில் வந்து நின்று கொண்டாள். அவனுக்கு உருப்படியாய்¢ ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாது என்கிற விவரம் எனக்குத் தெரியாது. அந்தப்பாவி என்ன செய்தான், ஹாண்டில் பாரை நேராய் விறைப்பாய் வைத்து லாக் செய்து கொண்டு இக்னிஷனைப் போட்டு ஸ்டார்ட் செய்து ஏறி உட்கார்ந்து த்ராட்டிலைக் கொடுத்தான்.

லாக் செய்யப்பட்ட ஹாண்டில் பாரை இந்தப் பக்கம் அந்தப்பக்கம் திருப்ப முடியாத இக்கட்டில், பாலன்ஸ் செய்ய சுதந்திரமில்லாமல், பயல் முணே மூணு சென்ட்டி மீட்டர் தூரத்தில் தொப்புக்கட்டீர் என்று விழுந்தான்.
அவன் விழுந்தான் என்பதை விட, ஸ்கூட்டர் விழுந்தது என்பது முக்கியம். தங்கமான அந்தத் தருணத்துக்காகவே காத்திருந்த மாதிரி இவள் பட் படார் என்று வெடித்துத் தள்ளி விட்டாள்.

யார் ஸ்கூட்டர யெடுத்து யார்ட்ட குடுத்தீங்க நீங்க… ஒங்கக் காசு போட்டு வாங்கியிருந்தா இப்படிப் பொறுப்பில்லாம கேட்டவனுக்கெல்லாம் தூக்கிக் குடுப்பீங்களா… காசோட அரும தெரியுமா ஒங்களுக்கு… அனாமத்தா வந்தது தான, அது நல்லா இருந்தா என்ன நாசமாப் போனா என்னங்கற கெட்ட புத்திதான ஒங்களுக்கு… இத்யாதி இத்யாதி.

(மீதி அடுத்த இதழில்)

About The Author

2 Comments

  1. VAI.GOPALAKRISHNAN

    அருமையான நகைச்சுவை விருந்து. ரஸம் சாதம் சாப்பிட்டவுடன் என் இலைக்கு பாயஸம் வரவேண்டிய நேரத்தில் பாயஸம் தீர்ந்து விட்டது என்று சொல்லி பரிமாறுபவர் சென்றுவிட்டது போல, கதையின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்தபோது, மீதி அடுத்த இதழில் என்றதும் ஏமாற்றமாகிவிட்டது.

  2. K.S.Senbakavally

    நல்ல கதையோட்டம். மீதியை அவலுடன் எதிர்பார்க்கிறேன்! கே.எஸ். செண்பகவள்ளி, மலேசியா

Comments are closed.