ஊர் திருமணம்

மண்டபமிராத‌ ஊரில்
இல்லாதவன் வீட்டுத் திருமணம்
நடுத்தெருவைச் சொந்தமாக்கி
திடீர் மேடையமைத்து
அனைவரையும் ஆர்ப்பரிக்கும்.

தென்னங்கீற்றுப் பந்தலில்
ஆங்காங்கே தொங்கும்
கீற்று ராக்கடிகள்
செவ்விளநீர் குலைகள்
வரவேற்கும் வாசல் வாழையென‌
தென்னைக்கும் வாழைக்கும்
வருடம் முழுதும் திருமணம்.

சிலோன் வானொலி
அறிவிப்பாளனை தோற்கச்
செய்து படத்தின் பெயர்
பாடல் நடிகர் நடிகைகளோடு
உள்ளூர் கதையும்
அவிழ்த்து விடும்
சன்னாசி சவுண்டு சர்வீஸ்.

எங்கிருந்தோவரும் குடிகாரன்
ஐந்து ரூபாயில் அத்தனை
நடிகராயும் மாறிப்போய்
ஆடத்தொடங்குவான்
வேட்டியை உதறியெறிந்து.

பாண்ட்ஸ் பவுடர் அப்பி
அழகு பெறும் மணமக்கள்
வெளுப்பவன் கொடுத்த‌
சேலைத் துணிகளை
உடுத்திக் கொண்டு
வெளுத்திருக்கும் மேடையென‌
வெள்ளந்தி மனிதர்கள்
உலவும் தெருத்திருவிழா.

About The Author