எது ஆபாசம்?

ஏன் இப்படி திடீர் மாற்றம்? இந்த ஓவர்நைட் மாற்றம் எப்படி கிருஷ்ணகாந்தனிடம் ஏற்பட்டது என்று எங்களுக்குப் புரியவில்லை. இலக்கிய ஆர்வம் படைத்தவன். விமர்சிக்கும் திறமை படைத்தவன். நிறைய கதைகள் எழுதி(திரும்பி வந்தவை) வைத்திருக்கிறான். ஆணித்தரமான அபிப்பிராயங்களுக்குச் சொந்தக்காரன்.

அவனுடைய தூண்டுதலின் பேரில்தான் இந்த வாசகர் மன்றத்தையே ஆரம்பித்தோம். இலக்கியம் என்ற பெயரில் போலியை – ஆபாசத்தைப் படைத்து விற்கிறார்கள். அதுவும் வாசகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று நம் மீது பழியையும் போடுகிறார்கள். இந்த நிலைமையை மாற்ற ஒரு வாசகர் மன்றம் ஆரம்பிக்க வேண்டும். வருகிற கதைகளைத் தூண்டித் துருவிப் படிக்க வேண்டும். தரக்குறைவான எழுத்துகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும். தீர்மானம் போட வேண்டும். ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுத வேண்டும். அவனது இந்த லட்சியத்தின் அடிப்படையில்தான் மன்றத்தை ஆரம்பித்தோம்.

இன்றுதான் முதல் கூட்டம். நான், ஜம்பு, பத்து, பாலு, கிட்டு, கணேஷ், சேகர், கோகுல், மோகன் எல்லோரும் வந்து விட்டோம். கிருஷ்ணகாந்தனைக் காணோம். பக்கத்திலிருந்த அவன் வீட்டுக்கு அனைவரும் சென்றோம்.

இப்போது பேசுகிறான் கிருஷ்ணகாந்தன். "எது ஆபாசம்? எது ஆபாசமில்லை? இதற்கு ஏதாவது அளவுகோல் இருக்கிறதா? எழுதுபவனின் பேனாவுக்கு விலங்கு போட்டு இதை எழுது. இதை எழுதாதே என்று சொல்லும் உரிமை யாருக்கும் கிடையாது. இந்தக் காரியத்தை என்று செய்கிறோமோ… அன்று இலக்கியத்துக்கு இருண்ட காலம் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்.’

"இல்லை காந்தன்.. இளைஞர்கள் மனம் கெட்டுப் போவுது!"

ஏளனச் சிரிப்பு சிரித்தான் காந்தன்.

"கதையைப் படித்துக் கெட்டுப் போவது என்பது வேடிக்கைதான். இப்படிப் பார்த்தால் நாம் எல்லாம் ஆத்திசூடி, நாலடியாரை வைத்து பஜனை பண்ணிக் கொண்டிருக்க வேண்டியதுதான்."

விடவில்லை கணேஷ். "இருந்தாலும் எதை எழுதுவது, எதை எழுதக் கூடாது என்று ஓர் எல்லை இல்லையா? எவ்வளவு அசிங்கமாக எல்லாம் எழுதுகிறார்கள்?"

காந்தன் சீறினான்.

"எது அசிங்கம் என்றுதான் கேட்கிறேன். கம்பனும், காளிதாசனும், வால்மீகியும் வாத்ஸ்யாயனரும் அசிங்கத்தையா எழுதினார்கள்? கொனார்க், கஜுராஹோ கோவில்கள் அசிங்கத்தையா வடித்திருக்கின்றன?"

சரி, இவனுடன் பேசிப் பயனில்லை என்று எல்லாரும் கலைந்தோம். திடும் என்று எதிர்க் கட்சி வக்கீலாக அல்லவா மாறிவிட்டான்? ஏன் இந்த மாற்றம்?

விஷயம் புரியாமல் நடையைக் கட்டினோம். வழியில் அந்த வார "சிற்பம்" இதழை வாங்கிப் புரட்டினோம்.

முழுப் பக்க அளவில் ஏறத்தாழ நிர்வாணமாய் ஒரு பெண் படம். அருகில் ஒரு "கவர்ச்சிக் கதை". எழுதியவர் கிருஷ்ணகாந்தன்.

புரிந்தது.

(இதயம் பேசுகிறது-4.10.1983)

About The Author