எனக்கென்று ஒரு மனம்

இன்டைக்கு எனக்கு கிளாஸுக்குப் போகவே விருப்பமில்லை. அம்மா பேசுவா எண்டதுக்காகப் போகப் போறன். இந்தக் காம்பில இருந்து வெளிக்கிட்டு அரை மணித்தியாலம் நடந்தாத்தான் பஸ் ஸ்டொப்பே வரும். அதுக்குப் பிறகு பஸ்ஸுக்குக் காத்துக் கொண்டு நின்டு பேந்து பஸ்ஸிலே ஏறி, டைப்பிங் கிளாஸுக்குப் போக வேணும்.

அம்மாவுக்குப் பாவம், நான் எதையாவது படிச்சு உத்தியோகம் எடுக்க வேணும். தன்னை மாதிரி குசினிக்கை இருந்து அடுப்பை ஊதி ஊதிப் பத்த வைக்கக் கூடாது என்றதில ஒரு வைராக்கியம்.
தம்பி பாஸ்கர், ரோட்டு மூலையில நிண்டு பெரியளோட குறைச் சிகரெட்டு குடிக்கிறது தெரிஞ்சா அம்மா உசிரை விட்டுடுவா. அவனும் சொன்னாக் கேக்கப் போறானே! எத்தினை தரம் சொல்லிப் பாத்திட்டன்.

நாங்கள் அத்தியடியில இருக்கிற வரைக்கும் நல்ல சந்தோசமாத்தான் இருந்தனாங்கள். எண்டைக்கு எங்கட வீட்டை ஆமி அடிச்சு உடைச்சாங்களோ அண்டைக்குப் பிடிச்சது எங்களுக்குச் சனி. நாங்களும் மாறி மாறி எத்தினை ஊரெண்டு போயிட்டம்.

அப்பாவும் பாவம் களைச்சுத்தான் போட்டார். எங்களைப் பத்திரமாப் பாக்க வேணும் எண்டு அவர் பட்ட பாடு எத்தினை இடமெண்டு அவரும் வேலைக்கு அலைஞ்சவர்! ஆர் குடுக்கப் போயினம் வேலை! ஊர் ஊரா அலையிற அகதிகளுக்கு, அதோடு வேலையிடத்திலையும் ஒரே பிரச்சனைதானே! அவையளுக்கும் நிம்மதி இல்லாத சீவியம்தானே!

ஒரு மாதிரி இப்ப ஒரு மூண்டு வருடம் இங்க வவுனியாவில காம்பில இருக்கறம். வாழுறம் எண்டுதான் சொல்ல வேண்டும். அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை, ‘என்னடி சவுந்தரா, நீ படிச்சு ஒரு மாதிரி வேலை எடுத்துடுவாய் என்ன பிள்ளை?’ எண்டு ஆசையா அம்மா கேக்கேக்கில நான் எனக்கு நம்பிக்கை இல்லை என்டு எப்படிச் சொல்லுவன்?

அப்பாக்கு இப்ப நான் படிக்கிறனோ, இல்லாட்டி இல்லையோ அதெல்லாம் ஒண்டும் கவனமில்லை. வேலையால பின்னேரம் வீட்ட வரேக்க ஒரே சாராய நாத்தம் அடிக்கும். அம்மா கேட்டா ‘சும்ம போடி. என்ட மனசில எவ்வளவு கவலை இருக்கு என்டு தெரியுமோடி?’ என்டு கத்துவார். அம்மாவும் பேசாம உள்ளுக்குப் போயிடுவா.

பேந்து ராத்திரி அவ்வைப் போட்டு ஒரே கரைச்சல் படுத்துவார். குடுசேக்குள்ள நடக்கறது எல்லாருக்கும் கேக்கும்தானே! பாஸ்கர் நல்லா குறட்டைவிட்டு நித்திரை கொள்ளுவான்.
குடிச்சாப் போல கவலை எல்லாம் முடிஞ்சுடுமே. அவரை எங்க கேக்கிறது. காலம்பற வேலைக்குப் போகேக்கையில மட்டும் சாமி கும்பிட்டு, விபூதியும் பூசிக் கொண்டு வடிவாத்தான் போவார்.

ஏதோ போராட்டம் எண்டு, கனபேர் செத்துப் போயிட்டினம். எங்க பக்கத்து வீட்டில இருந்த குமாரும் செத்துப் போனானம். ஆமி சுட்டுப் போட்டுதாம். நேத்துதான் கனகம் மாமி அம்மாவுக்குச் சொல்லிக் கொண்டு இருந்தவ.

குமாரை இன்னும் மறக்க ஏலாமக் கிடக்குது. என்னைச் சுத்தி தித்து வந்து கொண்டிருப்பான். ‘சவுந்தரா உனக்கு ரெட்டைப் பின்னல் நல்ல வடிவா இருக்கு’ என்டு நான் கோயிலுக்குப் போகெக்க பின்னால வந்து சொல்லுவான். கோவிச்சுப் பார்த்தாலும் எனக்கு மனசுக்கு கொஞ்சம் சந்தோசம்தான்.

அவனும் இயக்கத்தில சேருவான் என்டு நான் கடைசி வரை நினைக்கேல்ல. ஒரு நாள் வந்து "சுவந்தர ஈழத்திண்ட விடுதலைக்குப் பிறகு நான் வருவன்" என்டு சொல்லீட்டுப் போனவன். அவனும் இப்ப செத்துப் போயிட்டான் எண்டால் என்னவோ மனசுக்க கொஞ்சம் பாரமாத்தான் இருக்கு.

என்னெண்டுதான் அப்பா ஒவ்வொரு நாளும் கூலி வேலைக்குப் போயிட்டு பேந்து இப்பிடிக் குடிச்சிட்டு வர்றாரோ தெரியாது.

அம்மாவும் பாவம் நேத்து கனகம் மாமி வீட்டில அரிசி கடன் கேக்கேக்கை கூனிக் குறுகிப் போயிட்டா. கனகம் மாமி லேசுப்பட்டவ இல்ல. "இஞ்ச பார் நல்லம்மா, நெடுக இப்பிடி கடன் வாங்கிச் சீவியம் நடத்தப் போறியே? பேசாம உவள் சவுந்தராவைப் பிடிச்சு ஒரு வேலைக்கு அனுப்பிவிடு. அங்கால ரோட்டில நெசவுக்கு ஆக்களை எடுக்கினமாம்" எண்டு சொல்ல, "இல்லை அக்கா! அவள் என்னை மாதிரி கஸ்டப்படாம ஏதாவது கொஞ்சம் நல்ல உத்தியோகம் எடுப்பாள். அதுதான் அவளை டவுனுக்கு அனுப்பறன்" எண்டு மெதுவாகச் சொன்னவ.

இந்த டைப்பிங்க் படிச்சிட்டு எங்க வேலை கிடைக்கப் போகுது? கிளாஸுக்குப் போனா அங்க என்னையும் மூண்டு வீடு தள்ளி இருக்கிற பார்வதியையும் அதுகள் படுத்தற பாடு! அதெப்படி அம்மாவுக்குத் தெரியும்?

அதுகள் எங்களுக்கு வச்சிருக்கிற பேர் ‘வீடில்லாமத் திரியிற அகதிகள்.’ அங்க வாற சுகந்தி, சரஸ்வதி, வத்சலா அதுகள் எல்லாம் போடுற உடுப்புகள், குலுக்குற குலுக்கல்கள். அண்டைக்கு அப்படித்தான் வத்சலா, சரசுவதிக்குச் சொல்லிக் கொண்டிருந்தது, "எனக்கு லண்டன் மாப்பிள்ளை பேசீனம். அதுதான் சும்மா டைப்பிங் படிச்சாக் கொஞ்சம் ஸ்டைலா இருக்குமெல்லே" எண்டு.
கொஞ்ச நாளைக்கு முன்னால அப்பா ஒரு நாள் வெறியில அம்மாவிட்ட சொல்லிக் கொண்டிருந்தவர், "ஏய் நல்லம்மா, ஒரு மாதிரி பிடிச்சு இவளை வெளிநாட்டுக்கு அனுப்பி விட ஏலாதே?" எண்டு. அதுக்கு அம்மா, "இஞ்சை பார், நீயென்ன பெரிய காசுக்காரன் எண்ட நினைப்பே? அதுக்கு லட்சம், கோடி வேணும். எதையாவது விக்கலாம் என்டாலும் எண்ட தாலி கூட கயித்திலதான் தொங்குது. பேருக்குக் கூட அரை அங்குலம் நிலமில்லை. பேந்து சும்மா விசர்க்கதை கதைச்சுக் கொண்டு இருக்கிறாய். பேசாமப் போய் படு" எண்டு சொன்னவ.

கன பேர் இஞ்சை பிரச்சனை எண்டு சொல்லி வெளி நாடுகளுக்குப் போகினம்தான். ஆனா அவையிண்ட அப்பா அம்மாவிட்ட வித்துக் கித்து வெளியில அனுப்புறதுக்கு காணி பூமி கிடந்திது. நேத்து சோறோட மோரும் கருவாடும் இண்டைக்கு என்னண்டு தெரியல்ல. இதுதான் எங்கட சாப்பாடு. பிறகு வெளிநாடு எல்லாம் கனவில கூட வருமே!

இவ்வளவு சொல்லுறன் எனக்கு நல்லாச் சீவிக்க வேணுமெண்டு விருப்பமில்லையே? முந்திப் பாட்டி உசிரோட இருக்கேக்கச் சொல்லுறவ, "கிடைக்கிற பொருளாப் பாத்து ஆசைப்படு மோனை. எட்டாத பழம் வேணும் எண்டு வீணா ஏமாந்து போகாத" எண்டு. அது இன்னும் எண்ட காதுக்கை கேட்டுக் கொண்டு இருக்குது.

எலக்சன் மூட்டம் ஒவ்வொரு நாளும் கும்பிட்டுக் கொண்டு இந்த எம்.பிமார் வந்து வந்து போச்சினம். இப்ப அண்டைக்கு பக்கத்து வீட்டு குமாரசாமி மாமா சொல்லிக் கொண்டிருந்தவர், அந்தக் காம்பில இருக்கிற ஆக்களுக்கு ஏதேனும் நிரந்தர இடம் கேட்டு அவேண்ட ஒபீசுக்குப் போனா பாக்கக் கூட நேரமில்லை எண்டு சொல்லியினமாம்.

அம்மாவைக் கேட்டா, "உனக்கு என்ன வயசு பதினாறுதானே! இதெல்லாம் எப்பிடி விளங்கும்?" எண்டு வாயை மூடிப் போடுவா. இப்ப எங்களுக்கு இதைச் சொல்லித் தராட்டி பேந்து எப்பிடி எங்களுக்கு விளங்கும் எண்டு கேக்கிறன்.

எனக்கெண்டா இண்டைக்கு கிளாஸுக்குப் போக விருப்பமேயில்ல. போற வழியில சந்தியில அந்தப் பரமசிவமும், சுந்தரமும் அவங்களோட சேந்து நிக்கிற கும்பலும் என்னைப் பாக்கிற மாதிரியே எனக்குப் பிடிக்காது. அண்டைக்கு கேக்கிறாங்கள், "ஒரு நாளக்கு எங்களோட வாறியே?" எண்டு பக்கத்தில ஆமிக்காரன் நிண்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறான். இதெல்லாம் அம்மாவுக்குச் சொன்னா பாவம் இருக்கற கவலை போதாதெண்டு இதையும் போட்டு மண்டையை உடைச்சுக் கொண்டு இருப்பா.

அப்பா சாராயத்தைக் கண்டா எல்லாத்தையும் மறந்திடுவார். டீச்சரும் எங்களைக் கவனிக்கமாட்டா. அவ வத்சலா, சரசுவதி கூட்டத்தோடதான். அண்டைக்கு ஆரோ சொல்லிச்சினம், அந்த டைப்பிங் கிளாஸ் நடக்கிற கட்டிடம், வத்சலாண்ட அப்பாவிண்டையாம்.

போன கிழமை அப்பிடித்தான் நானும், பார்வதியும் கெதியாப் போனதால முன்னுக்கு இருந்திட்டம். பேந்து வந்த வத்சலா "என்ன அகதிகளெல்லாம் முன்னுக்கு வந்திட்டுதுகள்? உங்கட இடத்தில போயிருக்க வேண்டியதுதானே" என்டு சொல்ல நானும், பார்வதியும் எழும்பிப் போய் பின்னால இருந்திட்டம். பாவம் பார்வதீண்ட கண்ணில தண்ணி வந்திட்டுது.

அதுகளையும் பிழை சொல்ல ஏலாது. எங்கட இந்தப் பழைய சட்டையைத் தானே நாங்க தோச்சுத் தோச்சு ஒவ்வொரு நாளும் போடுறம். அதுகளுக்கு இளக்காரமாத்தானே இருக்கும்! ஆனா பார்வதி சொல்லுது, "தன்னைவிட எளியவர்களைக் கண்டா இரங்க வேணும் என்டெல்லே சின்னப் பிள்ளையில சொல்லித் தந்தவை? அப்படி இதுகளுக்குச் சொல்லிக் குடுக்க இல்லையே?"

ஆனா இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அந்த பஸ் ஸ்டாண்டிலே ஒரு குயில் ஒவ்வொரு நாளும் பாடிக் கொண்டு இருக்குது. அதுக்குத் தெரியும் போல "அகதியெண்டாலும் எனக்கு ஒரு மனம் இருக்கெண்டு."

About The Author