எப்போதும் உன் ஆட்சி

எப்போதும் உன் ஆட்சி
மதுவிலும் மறையிலும்
துறையிலும் உன் ஆட்சி
ஆழ்கடல் அடியிலும்
கயல்விழியாள் உன் ஆட்சி

இரும்பொலி வீச்சுக்கள்
இரைச்சலின் இடையினிலும்
கரும்பொலியாள் உன் பேச்சு
கேட்காமல் கேட்குதடி

டிடிஎஸ் சத்த்தில்
உலகெலாம் அதிர்கையிலும்
வாய் திறந்து சொல்லுதிர்க்க
விலை கேட்கும் மௌனம் நீ

வெட்கத்தை மொத்தமாய்
குத்தகை எடுத்தாயோ?
நாணத்தை நளினத்தை
விட்டுவைக்க மாட்டயோ?

மௌனத்தின் மெல்லிசையை
எனைக்கேட்க வைத்தவளே
புன்னகையின் அர்த்தத்தை
நானறியச் செய்தவளே

உன்னழகோ டொப்பிட்டு
ஏளனம் செய்திடவே
மாதத்தில் முப்பது நாள்
நிலவை நான் பார்க்கின்றேன்

மென்மையில் உனை மிஞ்ச
தேவதை உண்டென்று
பூங்காவில் மலர்களிடம்
பந்தயம் செய்கின்றேன்

அடைமழையாய் வார்த்தைகளை
நான் கொட்டித் தீர்த்தாலும்
பதிலுக்கு ஒரு சொல்லும்
நீயுதிர்க்க மாட்டாயா?

நான்எதைக் கேட்டாலும்
சிரிப்பையே தருகின்றாய்
சிரிப்பையே நான் கேட்டால்
நீ எதைத் தருவாயோ?

****

About The Author