எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா

டிசம்பர் 23 ஞாயிறன்று சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.ஸ்வாமி அரங்கில் லா.ச.ரா.  நினைவாக எஸ். ஷங்கரநாராயணன் தொகுத்த விமரிசனக் கட்டுரைத்தொகுதி ‘சந்நிதிகள் பிராகாரங்கள் வீதிகள்’ வெளியிடப் பட்டது. அன்னை ராஜேஸ்வரி  பதிப்பகத்தி‎ மூலம் வெளியிடப்பட்ட 248 பக்கங்கள் கொண்ட இத‎ன் விலை ரூ 100/-

நூலை அசோகமித்திரன் வெளியிட்டு தனக்கேயுரிய தரமான கருத்துக்களை நகைச்சுவைபடப் பேசினார். முதல்பிரதி பெற்றுக்கொண்ட எழுத்தாளர் திலகவதி,
லா.ச.ரா. வாழ்ந்த காலகட்டத்தினை வைத்து அவரது சாதனைகளை மதிப்பிடாமல், குழு மனப்பான்மையுடன் அவரை விமரிசிக்கும் அரைவேக்காட்டு விமரிசகர்களைச்  சாடித் தாம் எழுதியுள்ள ஒரு முன்னுரைக் கட்டுரையை வாசிக்கச் செய்தார்.

டாக்டர் கே.எஸ். சுப்ரமண்யன் தான் ரசித்த லா.ச.ரா. வரிகளை மேற்கோள்களுடன் அடையாளங் காட்டினார். டாக்டர் ருத்ரன் பேசுகையில் லா.ச.ரா. சிதையில் எரிந்து கொண்டிருக்கும் போதும் மனப்பூர்வமாக அவருடன் தாம் உரையாடிக் கொண்டிருந்ததாகப் பேசினார். லா.ச.ரா குடும்பத்துடன் நிமிடங்களைக் கழிக்கவே விரும்புவதாகவும், லா.ச.ரா. சொல்கிறபடி மெளனமே பல விஷயங்களை உணர்த்திவிடும், என்றும் கூறி அமர்ந்தார்.

திருப்பூர் கிருஷ்ணன் துவக்க உரையாகப் பேசியபோது நன்கு பழுத்து உதிர்ந்த பழம் போல அவரது மரணம் அழகானது என்று பேசியமர்ந்தார். அடுத்து வந்தவர் லா.ச.ரா.வின் மகன் சப்தரிஷி – அப்பா சார்ந்த நினைவில் அவர் நெகிழ்ந்ததில் கூட்டத்தில் நிறையப் பேர் கண்களைத் துடைத்துக் கொண்டார்கள்.

தொகுப்புரையாளராக இயங்கிய ஷங்கரநாராயணன், எல்லாருக்குமே அவரவர் அப்பாவை நினைவுபடுத்தி விட்டீர்கள் என்று குறிப்பிட்டார். மலர்மன்னன் பேசியபோது, ‘லா. ச. ரா தம் எழுத்துக்களில் மரபை மீறி மேற்கத்திய, உக்கிரத்தை உக்கிரமாக வெளிப்படுத்தும் மோஸ்தரைப் பின்பற்றினார். அதில் எந்தத் தாத்பர்யமோ தர்க்கமோ தமக்குக் கிடைக்கவில்லை,” என்று குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் ஏற்புரை போல, முழுமை பெறாத, இயக்குநர் அருண்மொழியின் ‘Creative writer La Sa Ra’ ஆவணப்படத்தில் லா.ச.ரா. பேசும் காட்சிகள் திரையிடப் பட்டன.

முடிவு வரை அரங்கு நிறைந்திருந்தது முது பெரும் எழுத்தாளருக்கு காட்டிய அன்பான மரியாதையை வெளிப்படுத்தியது.

தமிழ்நாட்டின் ஒரு மூத்த எழுத்தாளருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இவ் விழாவினை அமைத்திருந்த எஸ். ஷங்கர நாராயணனின் முயற்சியைப் பெரிதும் பாராட்ட வேண்டும்.

About The Author