எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் நேர்காணல் (3)

8) 1000த்திற்கும் மேற்பட்ட நாவல்கள், 2000த்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளீர்கள்; இன்னமும் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு முறை எழுதிய கதையின் சாயல் மற்ற கதைகளில் தோன்றாதவாறு எழுதுகிறீர்கள். இது எப்படிச் சாத்தியமாகிறது?

அதற்கு முதல் காரணம், நடப்பில் இருக்கும் விஷயங்களைத் தெரிந்து வைத்துக் கொள்வேன். தற்போதைய விஞ்ஞானம் பற்றிய தகவல்கள், செய்திகள், கண்டுபிடிப்புகள், நாட்டின் தற்போதைய நிலவரங்கள் இப்படிப் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை அடிப்படையாகக் கொண்டு கதை எழுதுகிறேன். உதாரணமாக 1980இல் இருந்து 1990வரை கிரைம் நாவல்களில், ஒரு பெண்ணைக் கடத்திக் கொலை செய்வது, அதைப் பார்க்கும் ஒருவன் பிளாக்மெயில் செய்து பணம் பறித்தல் போன்ற கதைகள் வெளிவந்தன. ஆனால் கணினி, இணையம், கைப்பேசி போன்றவை வந்த பிறகு தொடர்ந்து அதே போன்று எழுதாமல் நிறைய புத்தகங்களின் உதவியுடன் என்னுடைய பொது அறிவை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தேன். அதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது 26 புத்தகங்கள் அடங்கிய அறிவுக் களஞ்சியம் (Encyclopedia A-Z). உதாரணமாக, பிஸ்கட் பற்றிய விவரங்களை அறிய விரும்பினால், பிஸ்கட் தயாரிக்கச் சேர்க்கப்படும் பொருட்கள், அதன் செய்முறைகள், வகைகள், விதவிதமான வடிவங்கள் இப்படிப் பல விவரங்களும் அதில் கிடைத்தன. இதன் உதவியுடன், ஒரு கதை எழுதும் முன்பு அதற்குத் தேவையான விஷயங்களை அறிந்து கொண்டேன். எனக்குத் தேவையான விவரங்கள் புத்தகங்களில் கிடைக்காதபோது அதன் துறை சார்ந்த நபர்களைச் சந்தித்துத் தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். இப்படி, தினம் தினம் வளரும் விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு கதைகளை எழுதுவதால் ஒரு கதையின் சாயல் மற்றொன்றில் வருவதில்லை. அது மட்டுமில்லாமல் என்னுடைய கதைகளைப் பத்திரிக்கைகளுக்கு அனுப்புவதற்கு முன்பு என்னுடைய மனைவி அவற்றைப் படித்துவிடுவார். எந்தக் கதையிலாவது வேறொரு கதையின் சாயல் தோன்றுவதுபோல் இருந்தால் என்னுடைய மனைவி எனக்குத் தெரிவித்துவிடுவார். நானும் அதற்கேற்பக் கதையை மாற்றி எழுதிவிடுவேன்.

9) ‘கிரைம் நாவல் மன்னன்’ எனும் பட்டம் பெற்ற நீங்கள், ‘கிரைம் நாவல்கள் எழுதுவது எப்படி?’ என்று புத்தகம் எழுதும் வாய்ப்பு உள்ளதா?

அப்படியெல்லாம் புத்தகம் எழுத வேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கலாம், ஓவியம் சொல்லிக் கொடுக்கலாம், எந்த ஒரு இசைக்கருவி வாசிப்பதையும் சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் கதை எழுதுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்க முடியாது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் ஒரு திறமை உண்டு. கதை எழுதுவது என்பது இறைவன் கொடுத்த ஒரு வரம். எல்லோருக்கும் குரல் வளமிருந்தாலும் எஸ்.பி.பி, ஜானகி, சித்ரா போல் பாட முடிவதில்லை. கதை எழுதுவது என்பது இயல்பாக வெளிப்பட வேண்டிய ஒன்று. அதைச் சொல்லிக் கொடுத்து வரவழைக்க முடியாது என்பது என்னுடைய கருத்து. அப்படி ஒரு புத்தகம் எழுதும் எண்ணம் எனக்கில்லை.

10) உங்களுடைய நாவல் படமான அனுபவம் எப்படி இருந்தது?

என்னுடைய நாவல் ‘அகராதி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அவர்கள் என்னுடைய குழந்தையை நன்றாகவே அலங்கரித்திருந்தார்கள். அதில் எந்தவிதச் சந்தேகத்திற்கும் இடமில்லை. எந்த ஒரு இடத்திலும் என்னுடைய கதையை மாற்றாமல், கதையில் வரும் சம்பவங்களை நன்றாகப் படமாக்கியிருந்தார்கள். அதன் ப்ரிவியூவிற்கு நான், என்னுடைய குடும்பத்தார் மற்றும் என்னுடைய நலம் விரும்பிகள் சென்றிருந்தோம். என்னுடைய நாவல் திருப்தியளிக்கும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளதாக அனைவரும் பாராட்டினர். சில காரணங்களால் அந்தப் படம் இன்னமும் வெளிவரவில்லை. அது எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம்.

11) உங்களுடைய எழுத்துக்களின் மூலமாக நீங்கள் சொல்ல விரும்புகிற விஷயம் / கருத்து…

ஏதோ பத்து ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கினோமா, பொழுதைக் கழித்தோமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தக்கூடியவை அல்ல என்னுடைய கதைகள் என்பது என்னுடைய கருத்து. ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்கிகள், அதிகம் படிக்காத கிராமத்து இளைஞர்கள் போன்ற எத்தனையோ பாமர வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய கதைகளைப் படித்துவிட்டு "எனக்கு ஆங்கிலமே தெரியாது சார். ஆனால், உங்கள் கதைகளைப் படித்த பிறகு நான் நிறைய ஆங்கில வார்த்தைகள் தெரிந்து கொண்டேன். உதாரணமாக, ‘May I come in?’ என்பதின் அர்த்தம் என்ன என்று புரிகிறது. ஒருவர் பேசினால் அதற்கு மற்றவர் என்ன பதில் சொல்ல வேண்டும் என்றும் எனக்குத் தெரிகிறது. ஓரளவு என்னால் இப்போது ஆங்கிலம் புரிந்து கொள்ள முடிகிறது" என்றார் ஒரு கிராமத்து இளைஞர். நான் வெறும் கதைகள் மட்டும் எழுதுவதில்லை, அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கும் ‘விளக்கம் ப்ளீஸ் விவேக்!’ என்கிற பகுதியில் பதிலளிக்கிறேன். என்னிடம் கேட்கக்கூடிய அறிவியல் கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட நபரிடமோ அல்லது அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசித்தோ நான் பதிலளிக்கிறேன். என்னுடைய எழுத்துக்களைப் படிப்பவர்கள் புதிதாக ஒரு விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய பொது அறிவு சிறிதளவேனும் அதிகரிக்க வேண்டும். இதன் மூலமாக நான் அறிவியல் சார்ந்த விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்துகிறேன். பாளையங்கோட்டையில் இருக்கும் ஒரு பள்ளியில் உள்ள அறிவியல் ஆசிரியர், தினமும் பள்ளியில் நடக்கும் காலைப் பிரார்த்தனைக்குப் பிறகு ஒரு அறிவியல் செய்தியை என்னுடைய புத்தகங்களில் இருந்து படித்துச் சொல்கிறார். இதனால் அவரைச் சக ஆசிரியர்கள் மட்டுமில்லாமல் தலைமை ஆசிரியரும் பாராட்டியுள்ளார். இது போன்ற விஷயங்களைக் கேட்கும்போது மிகவும் பெருமையாக உணர்வது மட்டுமில்லாமல் எனக்கே என்னை மிகவும் பிடிக்கிறது.

12) நீங்கள் எழுத விரும்புவது சிறுகதையா, நாவலா, தொடர்கதையா? இவற்றுக்கு இடையே இருக்கும் வேறுபாடுகள் என்ன?

எல்லாவற்றிற்குமே அடிப்படை ஒன்றுதான். ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சில பக்கங்களில் எழுதப்படுவது சிறுகதை. நாவல்கள் எழுதுவதற்கு முன்பு கதைக்கான களத்தைத் தீர்மானித்து, அதற்குத் தகுந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு நோக்கிக் கதையை எடுத்துச் சென்று விடுவேன். ஆனால், தொடர்கதை சிறிது வேறுபடும். தொடர்கதை எழுத ஆரம்பிக்கும்போது என்னிடம் கதை ஒருவரிச் செய்தியாக மட்டுமே இருக்கும். சாதாரணமாக ஆரம்பிக்கப்படும் கதையில், கதையின் தன்மைக்கேற்பக் கதாப்பாத்திரங்களையும், அந்தக் காலக்கட்டத்திற்கேற்ப நாட்டில் நடக்கும் சம்பவங்களையும் தேவையான அளவில் சேர்த்துக் கொண்டு வருவேன். தொடர்கதை முடிவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு கதையின் திருப்பங்களைக் கோவையாகக் கொண்டு வந்து, இறுதியில் காரணத்தைத் தெரிவித்துக் கதையை முடித்துவிடுவேன்.

13) நீங்களே மீண்டும் விரும்பிப் படிக்க விரும்பும் உங்களுடைய படைப்பு எது?

— வெகு சுவாரசியமான இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளத் தவறாமல் படியுங்கள் அடுத்த வாரம்…

About The Author