ஏனோ?

நிலவெனும் ஆற்றின் கரையோரம்
நினைவை அழிக்கும் ஓரழகி
பலபல நாளாய் வருகின்றாள்;
பக்கத்தில் மனமேடையிலே

உலகின் கவலை பின்நீத்து
உணர்வெனும் அமுதம் உட்கொண்டு
கலையின் தென்றல் நுகருமெனைக்
கடைக் கண்ணாலே பார்க்கின்றாள்.

அமுதை இசையை வாசத்தை
அழகெனும் ஒளியை மெல்லியலை
இமயப் பனியின் தூய்மைதனை
இழைத்துரு வாக்கிய பதுமையிவள்

நெஞ்சைப் பூவெனத் திருகுகிறாள்;
நெறிந்த குழலிடை செருகுகிறாள்;
பச்சை நிகர்த்த மென்முகில்கள்
பட்டால் பாதம் கனலுகிறாள்.

கொத்துக் கொத்தாய்த் தாரகைகள்
கொஞ்சிக் குலாவும் வேளையிலே
நித்திரை மண்ணை முத்தமிடும்
நேரத்தில் இப் பேரழகி
நிலவெனும்ஆற்றின் கரையோரம்
நித்தம் ஏனோ வருகின்றாள்?
வலையினைநோக்கி என்மேலே
வனிதை ஏனோ வீசுகிறாள்?

About The Author

1 Comment

  1. kaja

    ஒரு வார்த்தைக்காக நிலலாய்- நீ
    தொடர்ந்த பொளுதுகள் இன்றும் – என்னை
    தொடர்கின்றன இதயத்தில்-ஒரு
    னினைவுச்சங்கிலியாக……………….

Comments are closed.