ஒரு அடிமையின் கதை-3

ஆனால் சாப்பாடு என்னவோ அரைவயிற்றுக்குத்தான். ஒருவாரத்திற்கென்று சோளம் கொடுத்துவிடுவார்கள். அதனை அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். ஆறு பக்கத்திலேயே ஓடியதால் மீன் கிடைக்கும். அதைத் தவிர மட்டன் என்பதெல்லாம் எப்போது கிடைக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப் படவேண்டியதுதான். எனது எஜமானர் எனக்கு ஒரு ஜோடி ஷூ, சாக்ஸ் மற்றும் தொப்பி இரண்டு முரட்டுத்துணியாலான சட்டைகள் பேண்ட் கொடுத்திருந்தார். குளிர்காலத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். புகையிலையை விற்பனைக்காக எருதுகளின்மீது வைத்து சந்தைக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். திரும்பிவர ரொம்ப நேரமாகிவிடும். நன்றாகக் குளிர் நடுக்கும்.

ஒரு சனிக்கிழமை நான் சோளக்காட்டிலிருந்து திரும்பியபோது எனது எஜமானர் என்னை வாஷிங்டனில் ஒருவரிடம் ஒரு வருடம் வாடகைக்கு விட்டிருப்பதாகச் சொன்னார். நான் அங்கே ஒரு கப்பல் தளத்தில் வேலை செய்யவேண்டும் என்று சொன்னார்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு- புது வருஷ தினத்தன்று எனது எஜமானர் குதிரையில் வாஷிங்டனுக்குப் புறப்பட்டார். என்னை அவர் கூடவே நடந்துவரச் சொன்னார். நாங்கள் அந்த கப்பல் தளத்திற்கு வந்தபோது இரவு நேரமாகிவிட்டது. அங்கு நான் பார்த்தவை எல்லாமே எனக்கு ரொம்ப விநோதமாக இருந்தன. அங்கே ஒருவர் என்னிடம், கரையில் நின்று கொண்டிருந்த ஒரு கப்பலுக்குள் நான் வேலை பார்க்க வேண்டும் என்று சொன்னார். ஒரு சிறுவனை நான் செல்ல வேண்டிய வழியைக் காட்டச் சொன்னார்.

என்னுடைய வேலை அந்த கப்பலில் பணி புரிபவர்களுக்கு சமையல் செய்வதுதான் என்று சொன்னார்கள். கொஞ்சநாளில் எனக்கு எல்லாம் பழக்கமாகிவிட்டது. அத்தனை சமையல் சாமான்களுக்கிடையில் வேலைபார்ப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அங்கு பணி புரிந்த அதிகாரிகளிகளிடமெல்லாம் மிகவும் பணிவாக நடந்துகொண்டு அவர்களிடம் நல்லபெயர் வாங்க முயற்சித்தேன். இது பலன் அளித்தது. அங்கு வருபவர்கள் எனக்கு சிறிது பணம் கொடுப்பார்கள். நல்ல உடை கிடைத்தது. எப்போதும் வேலையிருந்தாலும் எனக்கு அது கஷ்டமாகத் தெரியவில்லை. மாலை நேரங்களில் என் இஷ்டப்படி செலவழிக்க ஓய்வு நேரம் கூடக் கிடைத்தது. அப்போது நான் கப்பலை விட்டு வெளியே சென்று பெரிய பெரிய கட்டிடங்களைப் பார்த்து ஆச்சரியப் படுவேன். நான் அங்கிருந்து ஜார்ஜ் டவுன் வரை சென்றிருக்கிறேன். பல அடிமைகளுடன் பழக்கம் ஏற்பட்டது.

என்னைப் போன்ற நிறத்தவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு ரயிலிலழைத்துச் செல்லப்படுவதைப் பார்த்தேன். இப்போது அடிமை வியாபாரத்தை கோபத்துடனும் அருவறுப்புடனும் பார்ப்பதுபோல அந்த நாட்களில் இல்லை. ஒரு கருப்பு இன அடிமை தனது எஜமானரிடமிருந்து தப்பி ஓடுவது என்பது நடவாத காரியம். எனக்குத் தெரிந்து என் அப்பா ஒருவர்தான் அப்படி தைரியமாகத் தப்பித்திருக்கிறார். அதற்குப் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை தெரியாது.

நான் கப்பல் தளத்தில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் வேலை பார்த்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். அங்கிருந்து வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. ஒரு படகில் நிறய இரும்புப் பொருட்கள் எங்களது கப்பல் உபயோகத்திற்காக பிலடெல்பியாவிலிருந்து வந்தன. அதனை எங்கள் கப்பலில் ஏற்றுவதற்காக வந்த பலரில் ஒரு கறுப்பு இனவேலையாளும் இருந்தான். அவனுடன் எனக்கு இரண்டு நாட்களில் பழக்கம் ஏற்பட்டது. அவன் தான் அடிமையில்லை என்றும் சுதந்திர மனிதன் என்றும் சொன்னான். அவன் கப்பலிலிருந்து வருபவர்களை மகிழ்விப்பதற்கான நிகழ்ச்சிகளை பிலடெல்பியாவில் ஏற்பாடு செய்வதாகவும் அவன் இல்லாத நேரத்தில் அவனது மனைவி பார்த்துக் கொள்வாள் என்றும் சொன்னான்.

பிலடெல்பியாவைப் பற்றி அவன் விவரித்த விதமும், அங்கு எப்படி கருப்பர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று சொன்னபோதும் எனக்கு நானும் அந்த மாதிரி சுதந்திரமாக இருக்கமாட்டோமா என்று தோன்றியது. எப்படியாவது இந்த அடிமை விலங்கிலிருந்து தப்பித்து வடக்கு மாகாணத்தை நோக்கிச் சென்றுவிடவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. நான் இதைப் பற்றி அந்த நண்பனிடம் சொன்னேன். அவனும் எனக்கு உதவி செய்வதாகக் கூறினான்.

அந்தப் படகு புறப்படும் நாளுக்கு முந்தைய தினம் நான் புகையிலை மூட்டைகளுக்கிடையில் பதுங்கியிருக்க வேண்டும்( அந்த மூட்டைகளை பிலடெல்பியாவிற்கு எடுத்துச் செல்லப் போவதாக படகின் காப்டன் கூறியிருந்தார்). ஆனால் நினைத்தபடியெல்லாம்தான் நடப்பதில்லையே!

அந்தப் படகு குறிப்பிட்ட நாளில் கிளம்பவில்லை. அந்த காப்டனும் புகையிலையை வாங்குவதற்குப் பதிலாக ஜார்ஜ் டவுனிலிருந்து மாவு மூட்டைகளை வாங்கிவிட்டார். இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்று நானும் காத்திருந்தேன். மறுபடியும் புது வருஷம் வந்தது. என்னை வாடகைக்கு விட்ட எஜமானர் மறுபடியும் அழைத்துச் செல்ல வந்துவிட்டார். அவருடன் கிப்சன் என்பவரும் வந்திருந்தார். என் எஜமானர் என்னை கிப்சனிடம் விற்றுவிட்டதாகக் கூறினார். நாங்கள் மூவரும் கப்பல் தளத்திலிருந்து கால்வெர்ட்டிற்குப் புறப்பட்டோம்.

என்னுடைய புது எஜமானர் ஒரு விவசாயி. அவருடன் நான் மூன்றுவருஷங்கள் இருந்தேன். அந்த நேரத்தில் சிம்ஸ் என்பவரிடம் அடிமையாக இருந்த ஜூடா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். என் மனைவி வேலை பார்த்த சிம்ஸ் வீட்டிற்கு நான் வாரம் ஒருமுறை செல்வேன். நான் திருமணம் செய்து கொண்ட அதே நேரத்தில் சிம்சும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் பெண் பிலடெல்பியாவிலிருந்து வந்தவர். அவர் ஒரு கருப்பு இனப் பெண் தனக்குப் பணி செய்வதை விரும்பவில்லை. அதனால் அவர் பக்கத்திலிருந்த ஒரு வெள்ளை இனப் பெண்ணைப் பணிக்கு அமர்த்திக் கொண்டார். புது மணப்பெண் மிகவும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் நிறைய விலையுயர்ந்த பொருட்களை வாங்கினார். அந்த சாமான்களை வைத்திருந்த பெட்டியை என்னால் தூக்கக்கூட முடியாது. சிறிது நாட்கள் கழித்து சிம்ஸ் வெள்ளை இனப் பெண்ணை வேலையிலிருந்து நீக்கிவிட்டு என் மனைவியை அந்த இடத்தில் அமர்த்தினார். இதனால் என் மனைவிக்கு ஒரு வேளையாவது நல்ல சாப்பாடும் துணிமணிகளும் கிடைக்குமே என்று எனக்கு மகிழ்ச்சி.

சிம்ஸ் அவர்களுடைய குடும்பம் மாரிலான்டிலேயே பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த குடும்பம். அவர்கள் வாழ்ந்து வந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் ஒரு செங்கல் கட்டிடம் இருந்தது. அதுதான் அந்தக் குடும்பத்தினருக்கு சமாதியாக இருந்தது. ஆனால் பதினைந்து வருடங்களாக அந்தக் கட்டிடம் திறக்கப்படவேயில்லை. ஒருநாள் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறக்கும் முன்னால் தன்னை அந்தக் கட்டிடத்தில் புதைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் ஒரு சனிக்கிழமை வழக்கம்போல என் மனைவியைக் காண சிம்ஸ் வீட்டுக்குச் சென்றபோது அவர் என்னை அந்த செங்கல் கட்டிடத்தை ஒரு கடப்பாரையால் இடித்துத் திறக்கும்படிக் கூறினார்.

நானும் செங்கற்களை இடித்து அதனைத் திறக்க முயற்சி செய்தேன். ஆனால் நான் இரண்டு மூன்று செங்கல்களைக்கூட எடுக்கவில்லை. அதற்குள் அந்த ஓட்டையின் வழியாக மிகவும் துற்நாற்றத்துடன் ஒரு திரவம் வெளிவரத் துவங்கியது. சகிக்க முடியாத துர்நாற்றம். என்னால் மறுநாள் காலைவரை அந்தப் பக்கமே செல்ல முடியவில்லை. அடுத்தநாள் எப்படியோ கற்களை அகற்றி உறவினர்கள் உள்ளே செல்ல வழி செய்தேன். அடுத்தநாள் நான் உள்ளே சென்று பார்த்தேன். அப்போதுதான் வாழ்க்கை என்பது எவ்வளவு நிலையில்லாதது என்று புரிந்தது. அதற்குள்தான் மனிதருக்குள் எத்தனை அகந்தை, கர்வம்! கட்டிடத்தின் உள்ளே வெறும் எலும்புக்கூடுகள் . அவை முழுதும் சிதைந்த நிலையில் இருந்தன.

தொடரும்

About The Author