ஒரு சொம்பு ஜலம் (1)

"எனக்கு என்ன செஞ்சிருக்கா அவ? சீதாராமன் என்ற என்னுடைய இதிகாசச் சிறப்பு மிக்க பெயரை சுருக்கி, திரித்து ‘சீதாச்சு’ என்று நாமகரணம் செய்ததுதான் அவள் செய்த மிகப் பெரிய சாதனை. சீதாச்சுவ பார்க்கணும்போல இருக்குடான்னு அவ பினாத்தினதைக் கேட்டு அந்த கூறுகெட்ட சுப்புணி போன் பண்ணி இவகிட்ட சொன்னானாம். என்னைப் பார்த்துவிட்டு செத்துப்போனால் அவளுக்கு வைகுண்ட மோக்ஷம் கெடைச்சிருமோ? சுத்த பேத்தல். அவா அவாளுக்கு ஆயிரத்தெட்டு வேலை இருக்கு. அதையெல்லாம் விட்டுப்புட்டு இவளைப் போய் தரிசிக்கணுமாக்கும். தான் பெரிய மஹாராணின்னு மனசுல நெனைப்பு…."

"எல்லாம் என் தலையெழுத்து. அந்த பாழாப்போன போன் எனக்குத்தான் வரணுமா? இதப்பாருங்கோ, உங்க சித்திய பார்க்கப் போறதும் போகாததும் உங்க இஷ்டம். தயவுசெஞ்சு என்னைக் கூப்பிடாதீங்கோ. நான் வரமாட்டேன். நீங்களாச்சு, உங்க பொறந்தமாச்சு", என் மனைவி பொரிந்தாள்.

இன்றும் ஞாபகம் இருக்கிறது. 10 வயது சிறுவனாக இருக்கும்போது அம்மாவுடன் கிளம்பி வடவாறு, அரசலாற்றை இடுப்பளவு தண்ணீரில் கடந்து சித்தியின் வீட்டை அடைவதற்கும், நண்பகல் மணி 12 அடிக்கவும் சரியாக இருந்தது. எதற்காக சித்தியின் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பதை ஊரிலிருந்து கிளம்பும்போதும் சரி, ஆற்றைக் கடந்து நடந்துவரும் போதும் சரி, அம்மா வாய்திறக்கவே இல்லை.

"வாடி யோகம். என்ன ஆத்துல புளி ஆயிடுத்துன்னு இங்க வந்தியா?", நமுட்டு சிரிப்புடன் ஒரு எகத்தாளமும் சேர்ந்திருந்தது. சித்தியின் பெருத்த சரீரத்திற்கும், சிவந்த களையான முகத்திற்கும், அந்த சிரிப்பும், எகத்தாளமும் ஒரு அங்கமாக விளங்கின என்றாலும், அதில் ஒரு பணக்காரத் திமிரே மேலோங்கி இருந்தது. அம்மாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. க்ஷேம லாபங்களை வாசற்படியிலேயே விசாரித்துவிட்டு 10 நிமிடம் கழித்து உள்ளே கூப்பிட்டாள். ஏதோ வேண்டா வெறுப்புடன் கூப்பிடுவதுபோல் இருந்தது.

சாப்பாடு முடிந்து கிளம்புவதற்குத் தயாரானோம்.

"கமுலு! அம்பி 5வது முடிச்சுட்டான். உனக்குதான் தெரியுமே. நம்மூர்ல ஹைஸ்கூல் கெடையாது. பம்மங்குடி ஸ்கூல்ல படிக்கணும்னா 8 கி.மீ நடந்து போகணும். ஏற்கனவே பொண்ணு தையல் படிக்கறா. இந்த புள்ளைய இங்க இருக்கற மிடில் ஸ்கூல்ல சேர்த்து உன்கூட வச்சுக்கோயேன். உனக்கும் உதவியா இருக்கும். ஸ்கூல் பீஸ், புத்தகம், செலவெல்லாம் நீ பார்த்துக் கொண்டால் புண்ணியமா போகும். 4 புள்ளைகளை பெத்துட்டு ரொம்ப கஷ்டப்படறேண்டி. உன்னை விட்டா எனக்கு யார் இருக்கா?" அம்மா அழத் தொடங்கினாள்.

அம்மா எதற்காக வந்திருக்கிறாள் என்ற விஷயமும் புரிந்தது. சித்தி மசியவே இல்லை. நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒத்துக்கொண்டாள்.

ஊருக்கு வந்தபிறகு, அன்று முழுவதும் அழுது கொண்டிருந்தேன்.

"என்னால அவாத்துல தங்கி படிக்க முடியாது. பம்மங்குடி ஸ்கூல்ல சேர்த்து விடுங்கோ. இல்லன்னா நான் படிக்காமலே இருந்துடறேன்."

"அசடு மாதிரி அழுதுண்டு இருக்காதே! நம்மாத்துல வசதி இல்ல. அவ யாரு? உன் சித்திதானே! நாங்க என்ன உன்ன திக்குத் தெரியாத காட்டிலேயா கொண்டுபோய்விடப்போறோம்." அக்கா சமாதானப்படுத்தினாள்.

"வசதி இல்லன்னா யாருக்காவது என்னை ஸ்வீகாரம் கொடுத்துடுங்கோளேன்."

அம்மாவால் குடும்பத்தின் ஏழ்மையை எனக்குச் சொல்லி விளக்க முடியவில்லை., பாவம்! அவளும் சேர்ந்து என்னோடு அழுதாள்.

டிரங்க் பெட்டியுடன் என்னைக் கூட்டிக்கொண்டு சித்தியின் வீட்டில் விட்டுத் திரும்பிபோகும் போது காலணா, அரையணா, என 2 ரூபாயை கையில் திணித்துவிட்டுப் போனாள். அம்மா விட்டுச் சென்ற பிறகு ஒரு சூன்யம் படர்ந்திருந்தது. புதிய ஊர், புதிய மக்கள். முதல்நாள் மரியாதை சித்தியிடமிருந்து பிரமாதமாகவே கிடைத்தது.

"சீதாச்சு! இந்தக் காபிய எடுத்துக்கோ. சமையல்கட்டுல பேசன்ல சீடை வச்சுருக்கேன்."

அதன்பிறகு பள்ளிக்கூடம் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் முழுநேர வேலைக்காரனாக என்னை நான் அர்ப்பணித்துக் கொண்டேன் என்று சொன்னால் அது சுத்த அபத்தம்.

காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பால் கறப்பதற்காக மாட்டின் மடியில் தண்ணீர் தெளிப்பதில் தொடங்கி, பருத்தி, புண்ணாக்கு கரைப்பது, வைக்கோல் பிடுங்கிப் போடுவது என நீண்டுகொண்டே இருக்கும். மாடு கறக்கும் இடத்தில் நான் நின்று கொண்டிருந்தால் திட்டு விழும். எங்கே நான் கண் வைத்துவிடுவேனோ என்ற பயம் அவளுக்கு. சொந்த அக்காள் மகனிடமே உழைப்பைக் கறக்கும் அவள், மாட்டின் மடியில் ஒரு துளி கூட வைக்காமல் கறக்கும் கைவித்தைக்காரி என்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.

வேலையெல்லாம் முடிந்து பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் ஒரு காலணாவைக் கொடுத்து, "சீதாச்சு! செட்டியார் கடையில போய் கடலைமாவு வாங்கிண்டு வா" என்பாள். செட்டியார் கடைக்கு 1/2 கி.மீ நடக்க வேண்டும்.

பள்ளி செல்வதற்கு முன்னால் டிபன் எதுவும் கிடையாது. பழையதுதான். அதுவும் ரெண்டாங்கட்டு நிலைப்படி அருகே உட்கார்ந்துதான் சாப்பிட வேண்டும். சற்று உள்ளே உட்கார்ந்துவிட்டால் போதும். ஆசாரக் குறைவு என்று வானுக்கும், பூமிக்கும் குதிக்க ஆரம்பித்துவிடுவாள். அரக்கப் பறக்க பழைய சோற்றைத் தின்றுவிட்டு தினமும் பள்ளிக்கு தாமதமாகச் செல்வதும், கிட்டா சார் வாட்சைக் கழற்றி மேஜையில் வைத்துவிட்டு பிரம்பை எடுப்பதும் வழக்கமாகிப்போன ஒன்று.

அரசலாற்றுக்குக் குளிக்கச் செல்லும்போது ஒரு சொம்பை எடுத்துச் செல்வது வழக்கம். சிறுபையன் என்பதால் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாமென்று சொம்பை கொடுத்திருந்தாள் சித்தி. தண்ணீரை மொள்ளும்போது கைத்தவறி ஆற்றில் விழுந்துவிட, சொம்பு அடித்துச் செல்லப்பட்டது. நீரின் போக்கு அதிகமாக இருந்ததால் பிடிக்கமுடியவில்லை.

"ஐயோ! இதற்கு வேறு திட்டுவாளே!" வீட்டை நெருங்க நெருங்க ‘திக் திக்’ என்றது.

வாசலில் எண்ணெய் வியாபாரி குவளையால் சித்தி பிடித்திருந்த பாட்டிலில் ஊற்றிக்கொண்டிருந்தான். கையில் இருந்த பாட்டிலில் நிரம்பிவிட, மீதமிருந்த எண்ணெயை ஊற்ற பாத்திரமில்லை. ரேழி, கூடம், தாழ்வாரம், அனைத்தையும் தாண்டி வீட்டுக்குள் சென்று எடுத்துவர குறைந்தது 5 நிமிடங்களாவது ஆகும்.

"இதோ சீதாச்சு வந்துட்டானே! மிச்சமிருக்கிற எண்ணெயை அந்த சொம்புல வாங்கிண்டு வா", சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

"சொம்பு இருந்தால்தானே."

உள்ளூர பயம் பரவியது. ரேழியைக் கடந்து உள்ளே சென்றவுடன், "சீதாச்சு! அந்த சொம்புல வாங்கின எண்ணெயை பம்படில வை. நான் எண்ணெய் தேய்ச்சுக்கணும்"

"அது.. வந்து.. குளிக்கும்போது சொம்பு கைதவறி ஆத்துல விழுந்துவிட்டது சித்தி. என்னால பிடிக்க முடியவில்லை." அதன்பிறகு வெறும் காற்றுதான் வந்தது.

"கடங்காரா! இவ்வளவு சாதாரணமா சொல்றியே" எள்ளும், கொள்ளும் வெடித்தது அவளுக்கு.

"இல்ல சித்தி. நான் கவனமாகத்தான் இருந்தேன்." என்பதற்குள், "வாய மூடுடா பிசாசே. வந்து வாச்சுருக்குப் பாரு. உங்காத்து சொம்பா இருந்தா இப்படித் தொலைத்துவிட்டு வருவியா. ஊரான் வீட்டு சாமான்னா நன்னா வந்துருவேளே ஆத்தாளும், புள்ளையும்."

"ஆழம் அதிகமாக இருந்தது சித்தி. ரொம்ப தூரம் போயிடுத்து."

"ஆழம் அதிகமா இருந்தா எறங்கி செத்துத் தொலைய வேண்டியதுதானே. மூதேவி. ஓசில கொட்டிக்கற நாய்க்கு ஒய்யாரமா சொம்பு குளியல் கேக்கறதோ. இந்த ஆத்துப்பக்கமே வராதே. எங்கயாவதுபோய் ஒழிஞ்சுத் தொலை." தரதரவென்று கையைப் பிடித்து இழுத்து வந்து வெளியில் தள்ளினாள்.

(தொடரும்)  “

About The Author