ஒரு தரம்! ஒரே தரம்!

மறுபடியும் அந்தச் சின்ன மனம் சிறிதாக அலை பாய்ந்தது. இம்முறை ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் மீட்டிங் நாள் அப்பா வரும்போது தான் தனது திறமையான ஓட்டப் போட்டியில் வெற்றியீட்டிக் காட்ட வேண்டும் என்ற ஆவலில், லஞ்ச் இடைவேளைகளில் பீட்டர், ஜேம்ஸ் இருவருடனும் ஒரே ஓட்டப் போட்டிதான்.

அம்மாவிடம் கேட்டே விட்டான். "டாடி, வருவாரா மம்மி. என்னோட ரேஸைப் பார்க்க?"

"கேட்டுப் பார்க்கலாம்" நம்பிக்கையில்லாமல் தான் அம்மா சொன்னாள்.

அன்று இரவு தனது அறையில் தூங்க முடியாமல் இருக்கும்போது அப்பாவும், அம்மாவும் பேசிக்கொண்டு இருந்தது கேட்டது.

"ஏங்க, கிஷோர் ரொம்ப ஆசைப்படறான். அவனோட ஸ்போர்ட்ஸ் டேக்கு வர முடியாதா?" தயங்கியவாறே அம்மா.

"சும்மா போடி பைத்தியக்காரி! ஏதோ எல்லாத்திலையும் முதல் பரிசை தட்டிட்டு போகப்போற மாதிரி இல்ல நீ சொல்றாய். மத்தவங்களை இவன் கலைச்சுக்கிட்டு போறதைப் பாக்க நான் வேற லீவு எடுக்கணுமா?" ஏளனமாக அப்பா.

அம்மாவின் ஆயுதமான மௌனம் அவளைக் கவ்விக் கொண்டது.

கிஷோருக்கு ‘டாடி நான் நல்ல பிரக்டீஸ் பண்ணி இருக்கேன். நான்தான் வின் பண்ணுவேன்’ என்று கத்த வேண்டும் போல இருந்தது. அதன் விளைவுகளைப்பற்றி எண்ணுமுன்னம் தூக்கம் தழுவிக்கொண்டது.

நினைவுகளிலிருந்து மீண்டு திரும்பியவன், "என்ன 7 மணிக்கு 5 நிமிடங்கள் இருக்கிறது, டாடியைக் காணவில்லை" மனதுக்குள் எண்ணிக்கொண்டே அம்மாவிடம் வந்தான்.

"என்னடா டாடியை இன்னும் காணவில்லை?" அம்மாவும் முகத்தைச் சுருக்கியவாறு சொன்னாள்.
அம்மாவின் மடிமீது உட்கார்ந்தவன் கண்ணயர்ந்து விட்டான். காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு விழித்தவன். அம்மாவின் பின்னால் வாசற்கதவுக்குச் சென்றான். அம்மா கதவைத் திறந்தாள்.
அங்கே!

ஒரு ஆண் போலீஸும், பெண் போலீஸும் நின்று கொண்டிருந்தார்கள். தொப்பிகளைக் கழட்டியவாறே, "உள்ளே வரலாமா?" என்று கேட்டவர்களை அம்மா உள்ளே அழைத்துச் சென்று சிட்டிங் ரூமில் உட்காரச் சொன்னாள். அம்மாவின் சட்டை நுனியைப் பிடித்தவாறு கிஷோர், திகிலுடன் போலீஸாரைப் பார்த்தவாறு நின்றான். இதுதான் முதற்தடவை போலீஸ் அவனுடைய வீட்டிற்குள் வந்தது. இதுவரை போலீஸுக்கும் அவனுக்கமுள்ள உறவு ‘தொந்தரவு செஞ்சீன்னா போலீஸ் பிடிச்சுக் கொண்டு போயிடும்’ என்று அவன் டாடி மிரட்டுவதோடு முடிந்திருந்தது.
அவன் இளைய இதயத்தில், ‘ஒரு சமயம் டாடிதான் என்னைப் பிடித்துக்கொண்டுபோக அனுப்பி இருப்பாரோ?’ என்ற எண்ணம் இழையோடியது.

"உங்களது கணவர் ஒரு ஆக்ஸிடெண்டில், அகப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் ஹாஸ்பிட்டலில் சேர்க்கப்பட்டிருக்கிறார். நீங்கள் உடனடியாக வருவது நல்லது" என்றாள் அந்தப் பெண்போலீஸ் மிகவும் பரிதாபமாக அம்மாவைப் பார்த்தபடி.

"ஐயோ, தெய்வமே!" அம்மாவின் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது. அப்படியே கிஷோரை அணைத்துக்கொண்டாள்.

ஏனென்று புரியாமலே கிஷோரின் கண்களிலும் கண்ணீர் துளித்தது.

அவசரம் அவசரமாகப் போலீஸ் காரில் இருவரும் ஹாஸ்பிட்டலுக்குச் சென்றார்கள். அம்மாவின் சட்டைத் தலைப்பைப் பற்றியபடியே கிஷோர் அம்மாவைப் பின் தொடர்ந்தான்.

அங்கே ஒரு கட்டிலில் தலை முழுவதும் கட்டுக் காயங்களுடன், கைகளில் பிளாஸ்டிக் டியூப்புகள் பொருத்தியபடி அவன் அப்பா.

கர்ஜிக்கும் சிங்கம் இப்போது அடிப்பட்ட சிங்கமாக அணுங்கிக் கொண்டிருந்தது. மம்மி, டாடியை அணைத்துக் கொண்டே அழுதாள்.

"கிஷோர் எங்கே? அவனைப் பார்க்கணும்" அணுங்கினார் அப்பா.

கிஷோர் மம்மியின் பின்னால் இருந்து விடுபட்டு டாடியின் முன்னே வந்தான். அருகே வரும்படி கண்ணால் சைகை காட்டினார். சென்றான். அப்படியே அவனை இறுக அணைத்துக்கொண்டு "கிஷோர் ஐ லவ் யூ" என்று சொல்லி முத்தமிட்டார். இவ்வளவு நாட்களும் கிடைக்காத ஒரு பாதுகாப்பான சுகத்தை கிஷோர் அந்த ஒரு கணம் அனுபவித்தான்.

அவரின் கைகள் தளர்ந்தது. கண் மூடியது. டாக்டர்கள் கையை விரித்தனர். அம்மா கிஷோரை அணைத்தபடியே கதறினாள். கிஷோரின் மனதில் அந்த ஒரு நிமிட இன்பத்தை உடைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் வந்தது.

‘பிள்ளையாரே! ஒரு தரம், ஒரே தரம் அப்பாவின் அணைப்பிற்காக ஏங்கினேன் ஆனால் அதுதான் கடைசி அணைப்பென்றால் அது வேண்டாமே!’ பிஞ்சு மனம் வெம்பியது.

*****

About The Author