ஒரு ‘தலை’ ராகம்

"இந்த வீட்டுல எதை வச்சாலும் மறுபடி அதைத் தேடணும். வச்ச இடத்துல இருக்காது" என்று அலறினேன்.
சுந்தரி கொஞ்சங்கூட அசையவில்லை.
"மனுஷன் கத்தறது காதுல விழுதா?"
"என்ன வேணும் இப்ப" என்றாள் நிதானமாக.
"என்னோட •போட்டோ"
"எதுக்குப்பா" என்றாள் அமுதா. என் புத்திரி சிகாமணி.
"என்னோட சிறுகதையோட என்னோட புகைப்படமும் வெளியாகப் போவுதாம்" என்றேன் அவ்வளவு டென்ஷனிலும் பிரகாசமாய்.
"அது ரொம்ப பழைய புகைப்படமாச்சே"
"உங்கப்பா எப்பவும் அதே •போட்டோவைத்தான் அனுப்புவாரு. இளமை மாறாத அதே தோற்றம்" என்றாள் சுந்தரி கிண்டலாய்.
எனக்குச் சுரீரென்றது. சனியன் பிடித்த எதிர்க் கண்ணாடியில் என் முகம் தெரிந்தது. முன்புறம் ரோடு போட்ட தலை. ரோம சாம்ராஜ்யம் பாதி தகர்ந்து செட்டப்பாய் பின்னால் இருக்கிற முடியை முன்னுக்கு கொண்டு வந்து சீவியதில் சுமாராய் இருக்கிற மாதிரி ஒரு நினைப்பு. இவள் கேலி செய்ததில் ரோஷம் பொங்கியது.
"உன்னைக் கட்டிக்கிடறதுக்கு முன்னால மாசத்துக்கு ரெண்டு போகம்.. சலூன்ல அறுவடை.. உன்னைக் கட்டிகிட்ட நாள்லேர்ந்துதான் இப்படி பாலைவனம். நீ புடுங்கிற புடுங்கல் தாங்காம" என்றேன் அரை முனகலாக.
"ஆமாமா. அப்படியே தங்கமும் வைரமுமா செஞ்சு களைச்சிட்டீங்க. தீபாவளிக்கே காட்டன் புடவை எடுத்த மகராசனாச்சே"
"பாவம்மா அப்பா" என்றாள் அமுதா.
"இப்ப என்னோட •போட்டோ எங்கே. அதுக்கு வழியைச் சொல்லு"
"பேசாம கடைக்குப் போய் புதுசா ஒரு •போட்டோ எடுத்துருங்க"
திடுக்கிட்டேன். இந்த தோற்றத்திலா. என் இமேஜ் என்னாவது?
"அப்பா.. கவலைப்படாம போங்க. •போட்டோவை டச்சப் பண்ணி இளமையாக் காட்டிருவாங்க"
ஓ. அப்படி ஒரு வழி இருக்கா. தைரியமாகக் கிளம்பிப் போனேன். சந்துருவை அப்போதுதான் வழியில் சந்தித்தேன்.
"என்னடா நீயா.. இப்படி ஆளே மாறிப் போயிட்டே" என்றான் அனாவசியத் திடுக்கிடலுடன்.
அவன் தலை மட்டும் எப்படி அன்று கண்ட கருப்பு மாறாமல்.. மனசுக்குள் பொறாமை பொங்கிற்று.
"ஹி.. ஹி.. ஏதோ அலர்ஜி. முடி கொட்டிருச்சு"
"கவலைப்படாதே. உன் பிரச்னை தீர்ந்துருச்சுன்னே வச்சுக்க"
"எ..ன்னடா சொல்றே"
"இந்த மாதிரி இள வயசுல முடி கொட்டற பிரச்னையை தீர்க்கத்தான் இப்ப புதுசா ஒரு ஹேர் டானிக் கண்டு பிடிச்சிருக்கோம். இந்த ஏரியாவுக்கே நான்தான் சேல்ஸ் ரெப்"
"நெஜம்மாவா. மறுபடி முடி வளருமா"
"என் தலையைப் பாரு. அவ்வளவும் எங்க பிராடக்டோட மகிமை. முழுசா கொட்டி மறுபடி வளர்ந்திருச்சு"
என்னால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
"டேய். அந்த இலை இந்த இலைன்னு அரைச்சு.. எண்ணையில காய்ச்சி.. தலைக்குத் தடவிப் பாருன்னு ஒரு பத்திரிகையில படிச்சுட்டு.. அதே மாதிரி செஞ்சேன். கருமம், அந்த நாத்தமே சகிக்கலை. இன்னொரு பக்க முடியும் கொட்டிருச்சு. இப்ப நீ வேற" என்று இழுத்தேன்.
பளாரென்று வெறுந்தலையில் ஒரு அறை வைத்தான். சத்தியம் செய்கிறானாம். மூளைக்குள் ஏதோ பளிச் பளிச்சென்று மின்னியது, வாங்கிய அடி தாங்காமல்.
"இந்த பாட்டிலை எடுத்துகிட்டு போடா. ஒரு மாசம் யூஸ் பண்ணு. நீ பணமே தர வேண்டாம். என் கமிஷன்ல கழிச்சுக்கிறேன். 150 ரூபா. நண்பனுக்காக தியாகம் பண்றேன்" என்றான் ஆவேசமாய்.
பழுப்பா.. இன்ன கலரென்று சொல்ல முடியாத அசட்டுக் கலரில் ஒரு திரவம் பாட்டிலுக்குள் ஆடியது.
பயபக்தியாய் கையில் வாங்கினேன்.
"டேய். அப்புறம் என் மேல வருத்தப்படாதே. இந்த டானிக் முழுப்பலனும் தரணும்னா ஒரே வழி.. மொட்டை அடிச்சுக்கணும். அப்புறம் தினசரி தலையில அழுத்தி தேய்ச்சுகிட்டு வரணும். அப்புறம் பாரு என்னைத் தேடிகிட்டு வருவே.. இன்னொரு பாட்டிலுக்கு"
முழங்கால் வரை வளர்ந்த கூந்தலுடன் ஒரு பெண்ணின் படம். பொடிப் பொடி எழுத்துக்களில் அதன் பெருமை எழுதப்பட்டிருந்தது.
"நம்பிக்கையா போ. நீயே புரிஞ்சுப்பே"
நான் மெய் மறந்து நின்றதைப் பயன்படுத்திக் கொண்டு என் பர்சை வெளியில் எடுத்தான். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை உருவிக் கொண்டான்.
"உன்கிட்டேர்ந்து கடனா இருநூறு ரூபாய் எடுத்துக்கிறேன். தப்பா புரிஞ்சுக்காதே. அந்த பாட்டிலுக்கு எனக்கு பைசா வேணாம்"
போய் விட்டான்.
ச்சே.. எவ்வளவு உத்தமமான நண்பன்!
இப்போதே போய் மொட்டை அடித்துக் கொண்டு இன்றே ஆவி பறக்க தலையில் தைலத்தைத் தடவிக் கொள்ள வேண்டும். இன்னும் ஒரே மாதத்தில் அடர்த்தியான முடியுடன்.. ஹா.. எல்லோரும் ஆச்சர்யப்பட வேண்டும்.

வீட்டுக்குள் நுழையும்போதே சுந்தரியின் குரல் விரட்டியது.
"யாருப்பா.. அது. தொறந்த வீட்டுல சட்டுனு நுழைஞ்சுக்கிட்டு"
"ஹி..ஹி.. நாதான்." என்றேன் மொட்டைத் தலையும் பேய் முழியுமாய்.
"என்ன ஆச்சுங்க உங்களுக்கு"
"அப்பா.. நீங்களா" என்றாள் அமுதா பயங்கர அதிர்ச்சியுடன்.
"எல்லாம் ஒரு காரணத்தோடதான். விலகுங்க" என்றேன் கிணற்றடி நோக்கி நடந்தவனாய்.
பிறகு விளக்கமாய் நடந்ததைச் சொன்னேன்.
"பிளீஸ்மா. உன்னோட ராசியான கையால இந்த தைலத்தை தேய்ச்சு விடேன்"
அரைமனதாய் ஒப்புக் கொண்டாள். தேய்த்து விட்டதில் பொறி கலங்கி போன ஜன்ம நினைவுகளே வந்து விட்டது. அந்த ஜென்மத்திலும் சுந்தரிதான் என் மனைவி என்று ஏதோ அசட்டு பிசட்டென்று தோன்றியது.
"நாளைக்கெல்லாம் என்னால முடியாது. கை அசந்து போவுது."
எப்படியோ தினசரி ஒருவர் மூலமாக தலையைக் கவனித்துக் கொண்டேன்.
விளைவுதான் எதிர்பாராதது. அடப்பாவி. சந்துரு என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே. வெளியிலே தலை காட்ட முடியாமல் ‘சிக்’ லீவு எழுதிக் கொடுத்து விட்டு வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டியதாயிற்று. நண்பர்கள் வந்தால் கூட தலையைச் சுற்றி பெரிய போர்வையை போர்த்திக் கொண்டு கட்டிலிலேயே கிடந்தேன்.

ஒரு வழியாய் சந்துரு வீட்டைத் தேடிக் கொண்டு வந்து விட்டான்.
"ஏண்டா ராஸ்கல். என்னை இப்படி பண்ணிட்டியே"
"ஏன் என்ன ஆச்சு. முடி வளரலையா" என்றான் குழப்பத்துடன்.
விருட்டென்று எழுந்ததில் போர்வை விலகிக் கீழே விழ.. சந்துரு திகைப்புடன் அதிர்ந்து நின்றான். அமுதா கிரீச்சிட்டாள். சுந்தரி அவசரமாய் கண்களை மூடிக் கொண்டாள்.
ஆறடிக் கூந்தலுடன் விசித்திரப் பிறவி போல நின்றேன்.
"ஏ..ஏதோ தப்பு நடந்து போச்சு. தைலத்துல கலவை மிஸ்டேக்.. எ..எப்படி ஆச்சு.." ஒரேயடியாய் திக்கினான்.
கால் மடங்கி ஓவென அலறினேன்.
"டேய்.. என்னைக் காப்பாத்துரா. என்ன வெட்டினாலும் உடனே வளர்ந்துருதுடா. எனக்கு மொட்டைத் தலையே போதும். முடி வேணாம்.. என்னைக் காப்பாத்துரா"

****

About The Author

1 Comment

  1. Natarajan Kalpattu

    ரூபாய் நூற்றைம்பதுக்கு பதில் இருனூறாகக் குடுத்தது வீண்போகவில்லை. நன்றாகவே முடி வளர்ன்தது அல்லவா?

Comments are closed.