ஒரு பூனை புலியாகிறது (6.1)

வேலூர் வள்ளல்கள்

ஜாக்கி தன் வீட்டுக்குள் சென்று தொலைபேசியில், சென்னையில் உள்ள அவனுடைய கூட்டத்தாரோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கும்போதும் அவன் மனம், ‘சேரன் எங்கே?’ என்று கேட்டுக் கொண்டிருந்தது.

அப்போது அவனுக்கு அருகே, இருபது மீட்டர் தூரத்தில் சேரன் இருந்தான் என்பதை அறிந்தால் அதிர்ந்து போவான். காவேரி மின்நகரிலிருந்து அவன் வேலூரை அடையும் வரை சேரன் அவனுக்கு இரண்டு மீட்டர் தூரத்தில்தான் இருந்தான் என்பதை அறிந்தால் மூர்ச்சையாகி விடுவான்.

சேரனை இப்போது நாம் சந்திக்கலாம்.

கோட்டைப் பிள்ளையார் கோவில் தெரு சென்று சேரும் சாலையில் ஜாக்கியின் வெள்ளை அம்பாசிடர் கார் நின்றிருந்தது. சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை. அம்பாசிடர் காரின் பின்னேயுள்ள டிக்கி மெல்லத் திறந்தது. டிக்கிக்குள் சேரன் இருந்தான். அவன் நாயும் இருந்தது.

சேரன் பார்வையைச் சுழற்றினான். பார்வை படிந்த வரையில் யாரும் தென்படவில்லை. அவன் மெதுவாகக் காரிலிருந்து இறங்கினான். டாலரையும் இறக்கிவிட்டான். பிறகு டிக்கியின் கதவை மூடினான். நின்ற நிலையில் சேரன் கலங்கரை விளக்குப்போலத் தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். யாரும் கண்ணில் படவில்லை.

‘ஜாக்கி நம்மைப் பார்ப்பதற்குள் இங்கிருந்து போய்விட வேண்டும்’ என்று நினைத்தான். ஜாக்கி எந்த வீட்டில் நுழைந்தான் என்பது அவனுக்குத் தெரியாது. அதனால் அம்பாசிடர் வந்த வழியே நடந்தான். டாலரும் அமைதியாக அவனைப் பின் தொடர்ந்தது. சிறிது நேரத்தில் ஒரு சாலை குறுக்கிட்டது. அதைக் குறுக்கே கடந்து எதிரே தெரிந்த குறுகலான சந்திலே நடந்தான். அங்கே எந்த வீட்டுக்கும் திண்ணை இல்லை. சட்டென்று ஒரு வீட்டின் முன்நின்றான். அது ஒரு ஓட்டு வீடு. அதிலே இரண்டு முழம் அகலத்தில் ஒரு திண்ணை இருந்தது. சேரன் அந்தத் திண்ணையில் ஏறிப் படுத்துக்கொண்டான். டாலரும் அவன் அருகே படுத்துக்கொண்டது. சேரன், "டாலர்! இதுவரை சத்தம் போடாம இருந்தே. இப்பவும் சத்தம் போடாமத் தூங்கு" என்று கூறினான். டாலரை ஒரு கையால் தழுவிக் கொண்டே அவன் தூங்கினான்.

சேரன் எப்படிக் காருக்கு வந்தான்?

டாலரைத் தூக்கிக் கொண்டு, கரும்புத் தோட்டத்தில் நுழைந்து கொஞ்ச தூரம் ஓடினான், சேரன். அங்கே தோட்டத்தின் நடுவே, கரும்புகளுக்கு இடையே ஒரு பத்து வயசுப் பையன் உட்கார்ந்து கரும்பைக் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தான். கரும்பைத் திருடித் தின்ன, கரும்புத் தோட்டமே ஏற்ற இடம் என்பது அவன் கருத்து. திடீரென்று தோட்டத்துக்குள் சேரன் நுழையவே தோட்டத்தைச் சேர்ந்த யாரோ தனது திருட்டைத் தெரிந்து கொண்டு பிடிக்க வருவதாக நினைத்த பையன் அந்த இடத்தை விட்டு மின்னல் வேகத்தில் ஓடினான்.

அதைச் சேரன் பார்த்தபோதே தனக்குப் பின்னே யாரோ வருவதை உணர்ந்தான். உடனே, பக்கவாட்டில் மெல்ல விலகி, டாலரைப் பிடித்தபடியே உட்கார்ந்து விட்டான். சேரனைப் பிடிக்கக் கரும்புத் தோட்டத்தில் புகுந்த பாபு, முன்னே பையன் ஓடும் அசைவைக் கண்டு, அந்தத் திசையில் ஓடினான். பையன் கரும்புத் தோட்டத்தில் ஓடிப் பழக்கப்பட்டவன். அதனால் பாபுவின் கையில் சிக்காமல் ஓடிவிட்டான்.

சேரன் மெல்ல நகர்ந்து, கரும்புத் தோட்டத்தின் விளிம்புக்கு-சாலையைத் தொடும் விளிம்புக்கு வந்தான். ஜாக்கி அப்போதுதான் காரை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, கரும்புத் தோட்ட வரப்பில் நடந்து சென்றான். அதைப் பார்த்தபோது சேரனுக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த இடத்தில் அவர்களிடமிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள, அவர்களது காரே சரியான இடம் என்று நினைத்தான். உடனே சாலைக்கு வந்தான். காரின் டிக்கியை இழுத்துப் பார்த்தான். அது பூட்டப்படவில்லை. அதனால் அவன் டாலருடன் அதில் ஏறிக் கொண்டு, டிக்கியை மூடிக்கொண்டான்.

ஜாக்கி, இப்படி நடக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சேரன் ஏதோ ஒரு லாரியில் ஏறிப்போய் விட்டதாக நினைத்து ஏமாந்து விட்டான்.

******

‘லொள் லொள்’ என்னும் டாலரின் குரைப்புச் சத்தம் தூக்கத்தைக் கலைக்க கண்ணைத் திறந்தான், சேரன்.

டாலர் அவனுக்குப் பக்கத்திலே இருந்தது. அது யாரையோ பார்த்துக் குரைத்துக் கொண்டிருந்தது. சேரன் பார்த்தான். திண்ணை அருகே சுமார் பத்து வயதுள்ள ஒரு சிறுமி நின்றிருந்தாள். பொழுது நன்றாக விடிந்திருந்தது. சேரன் எழுந்து உட்கார்ந்தான்.
"நாய் உன்னதா? ரொம்ப அழகா இருக்கு!" என்றாள் அந்தப் பெண்.

"ஆமாம் பாப்பா! இது உன் வீடா?" – சேரன் கேட்டான்.

"அட, என் பேரு உனக்கு எப்படித் தெரியும்? பர்வதகுமாரின்னு எனக்குப் பேரு வச்சாங்களாம். ஆனா பாப்பான்னு எங்கம்மா கூப்பிட்டதாலே, அதுவே பேராயிடுச்சு. பள்ளிக்கூடத்திலே கூடப் பாப்பான்னுதான் பேர் கொடுத்தாங்க. உம் பேரு என்னண்ணா?"
அரை நிமிடத்தில் தன்னை அண்ணனாக்கிக் கொண்ட அந்தத் திடீர்த் தங்கையை அன்போடு பார்த்து அதிசயித்த அவன், "சேரன்" என்றான்.

"தெரியுமே!"

பாப்பா சொன்னதைக் கேட்டுத் திகைத்த சேரன் "தெரியுமா? என் பெயர் சேரன்னு உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.
"இல்லேண்ணா. சேரன் என்கிற பேரைத் தெரியும். நான் பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டிருக்கிறப்போ, பாடத்தில் படிச்சேன். சேரன் கணைக்கால் இரும்பொறை! இவன் மானம் மிக்க சேரன்! காவலாளிங்க இழிவு செஞ்சதாலே, தண்ணீர் குடிக்காமே மானத்தோடு செத்துட்டான்."

பாப்பா சொன்ன சேரன் கதை அவன் கவனத்தைக் கவரவில்லை. ஆனால், "நான் பள்ளிக்கூடத்திலே படிச்சுக்கிட்டிருக்கிறப்போ…" என்று சொன்னது, அவன் மனத்தைத் தொட்டது.

"தங்கச்சி, நீ இப்போ பள்ளிக்கூடத்திலே படிக்கலையா?"

பாப்பாவின் மலர்ந்த முகம் திடீரென்று குவிந்தது. இல்லை என்பதைத் தலை அசைவின் மூலம் தெரிவித்தாள்.

"ஏன்? படிப்பிலே விருப்பம் இல்லையா?"

"பள்ளிக்கூடம் பிடிக்கும்! பாடம் படிக்கிறதும் பிடிக்கும். ஐஞ்சாவது வரை படிச்சேன். போன வருஷம் எங்கப்பா செத்துட்டார். அப்புறம் எங்கம்மா சாலை ஓரத்திலே காய்கறி விக்கிறாங்க. அவங்களுக்கு உதவியா கடையைப் பாத்துக்க, என் படிப்பை நிறுத்திட்டாங்க."

பாப்பா சொன்னதைக் கேட்டதும் சேரன் மனம் கலங்கியது; கண்களும் கலங்கின. ‘மலைவாழை அல்லவோ கல்வி, அதை வாயார உண்பாய், போ என் புதல்வி’ என்னும் பாரதிதாசன் பாடல் நினைவுக்கு வந்தது. ‘இதோ ஒரு சிறுமி படிக்க விரும்புகிறாள்! ஏழ்மை அவள் படிப்பைத் தடுக்கிறதே?’ அவன் சிந்தனையை டாலரின் குரல் தடுத்தது.

டாலர் குரைத்ததும், "இது ஏன் இப்படிக் கத்துது? ஒரு வேளை பசிக்குதோ?" என்று கேட்டாள் பாப்பா.

சேரன் திடுக்கிட்டான்.

நேற்றுப் பகலிலிருந்து டாலருக்கு உணவில்லை. சொகுசாக வளர்ந்த டாலருக்குப் பசித் துன்பம் புதுசாக இருக்கும். டாலருக்கும் பசிக்கும் என்பதைச் சேரன் உணரவில்லை. ஆனால் சிறுமி உணர்கிறாளே! பெண் மனந்தான், வயது வித்தியாசம் இல்லாமல் பிறர் பசியை நினைக்குமோ?

"ஆமாம் பாப்பா. பசிதான்!"

"வீட்டிலே பழையது இருக்கு. கொண்டு வரட்டுமா?"

சேரன் சிரித்தான்.

"இது பழையது சாப்பிடற ஏழை வர்க்கம் அல்ல; பணக்கார வர்க்கம்!"

"பின்னே, இது என்ன சாப்பிடும்?"

"காலைலே நல்ல பாலிலே ஓட்ஸ் போட்டுக் காய்ச்சி, அதிலே ரெண்டு முட்டையை உடைச்சி ஊத்திக் கொடுக்கணும். இதுதான் டிபன்."

"உம்… அப்புறம் சாப்பாடு?"

"கால் கிலோ கறியைக் கொத்தி அதை அரிசியோடு ஒண்ணா வேகவச்சிப் பகல் சாப்பாடாய்க் கொடுக்கணும்."

"அம்மாடி! இதைப் பார்த்ததும் இது மாதிரி நாயை வளர்க்கணும்னு ஆசை வந்துது. இதோட சாப்பாட்டைக் கேட்டதும், அது போயிடுச்சு."

சேரன் சிரித்தான்.

"இப்போ இதுக்கு எப்படி ஆகாரம் தரப் போறே?"

சேரனுக்கும் கவலைதான். சட்டைப் பையில் கைவைத்துப் பார்த்தான். விஜய் கொடுத்த பணத்தில், பஸ்ஸுக்கும், நேற்றுப் பகல் லாரி கம்பெனி அருகே சாப்பிட்ட பகலுணவுக்கும் போக மீதி ஆறு ரூபாய் ஐம்பது காசு சட்டைப் பையில் போட்டிருந்தான். ஒன்றாக மடித்த ஐந்து ரூபாயும் ஒரு ரூபாயும் கிடைத்தன. ஐம்பது காசைக் காணோம். ஐந்து ரூபாயைப் பாப்பாவிடம் கொடுத்து, "தங்கச்சி, உனக்குச் சிரமம் இல்லேன்னா, ஆழாக்குப் பாலும் ரெண்டு முட்டையும் வாங்கி வா. அதோடே எனக்கு சாப்பிட ஐஞ்சாறு இட்லி வாங்கி வா."

"சரி" என்று பணத்தை வாங்கிக் கொண்ட பாப்பா, வெறுமனே மூடியிருந்த வீட்டின் கதவைத் திறந்து, உள்ளே போய், ஒரு கையில் ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலும், ஒரு மூடியில்லாத கிண்ணமுமாக வெளியே வந்தாள்.

"வீட்டைப் பார்த்துக்கோ" என்றபடி இறங்கிய பாப்பாவிடம், "தங்கச்சி, இது என்ன ஊர்?" என்று கேட்டான்.

"வேலூர். சேலம் வேலூரில்லே; ராயவேலூர்! ஆர்க்காட்டு வேலூர். இது எந்த ஊருன்னு தெரியாம, இங்கே எப்படிண்ணா வந்தே?"
பாப்பா கேட்டாள்.

"தங்கச்சி! ஒரே பசி! முதல்லே டிபன்! அப்புறம் நான் வேலூர் வந்த கதை. சரியா?"

"சரி."

பாப்பா இறங்கி, சந்திலே ஒரு பந்தைப் போலத் துள்ளிச் சென்றாள்.

அரைமணி நேரத்தில் பாப்பா திரும்பி வந்தாள். அவளே பாலைக் காய்ச்சிக் கொடுத்தாள். அதில் முட்டையை உடைத்து ஊற்றிக் கலக்கி டாலருக்குக் கொடுத்தான். அவனும் பல்விளக்கி, முகம் கழுவிக் கொண்டு, இட்லி சாப்பிட்டான். சாப்பிட்டபடியே தான் வேலூர் வந்த விதத்தைச் சொல்லி, ஒரு முக்கியமான-நாட்டுக்குப் பயன்படும் ஒரு நல்ல செயலுக்காகச் சென்னைக்குப் போக வேண்டும்-அதுவும் அன்றைக்கே போக வேண்டும் என்பதையும் சொன்னான். ஆனால் தன்னிடம் பணம் இல்லை என்பதையும் எப்படியாவது சென்னைக்குப் போயே தீர வேண்டும் என்பதையும், அழுத்தமாகக் கூறினான்.

"பாப்பா! நீ ரொம்ப நல்லவ. கடவுள் உன்னைப் போல இருக்கிறவங்களிடம் பணம் கொடுத்திருந்தா நீயே எனக்கு உதவி செஞ்சிருப்பே! இம்… இப்ப என்ன செய்யறது?"

சேரன் பெருமூச்சு விட்டான்.

"அண்ணா! நீங்க இங்கேயே இருங்க. நான் இப்பவே வரேன்" என்று கூறி விட்டுப் பாப்பா மீண்டும் அந்தச் சந்திலே ஓடினாள்.

–புலி வளரும்.
..

About The Author