கடல் – இசை விமர்சனம்

"ராவண"னில் முல்லை நிலத்தின் வலி சொன்ன மணிரத்னம், நெய்தல் நிலத்தின் காதல் சொல்லக் களமிறங்கியிருக்கும் படம். இதை நான் சொல்லவில்லை, படத்தின் சுவரொட்டிகள் சொல்லாமல் சொல்கின்றன. மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்தான் இந்தக் கடலிலும் இசை அலை எழுப்பியிருக்கிறார். கடலலையில் துடுப்பாகப் பேனா பிடித்திருக்கிறார்கள் கவிப்பேரரசு வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும்.

நெஞ்சுக்குள்ள

மேற்கத்திய இசையும், கிராமத்துக் காதல் வரிகளுமாக அலையில் தவழ்கிறது பாடல். இதை வைரமுத்து எழுதியுள்ளார். சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருக்கிறார். இது முன்னமே வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டது. காதல் ஏக்கம்தான் பாடுபொருள். ரசித்துப் பாடியிருக்கிறார் என்பது பாடலில் தெரிகிறது.

"ஒரு வாய் எறங்கலையே
உள் நாக்கு நனையலையே
ஏழெட்டு நாளா எச்சில் முழுங்கலையே" – என இயல்பான பேச்சு வழக்கிலேயே ரசிக்க வைத்திருக்கிறார் கவிப்பேரரசு.

ஏலே கீச்சான்!

ஏ.ஆர்.ரகுமானின் குரலில், ஓர் இளமை ததும்பும் பாடல். பாடல் நெடுகிலும் வரும் கிதாரின் இசை காற்றில் பரவி நம்மைப் பக்கம் அழைக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.

"நீ பாத்த நொடியே ஹே… பித்துப் பிடிக்க
என் தூத்துக்குடியே உன்னத் தூக்கியெடுக்க தூக்கியெடுக்க" – என வட்டார வழக்கில் விளையாடியிருக்கிறார் மதன் கார்க்கி.

சித்திரை நிலா

குழந்தையின் அழுகுரலுடன் ஆரம்பிக்கும் பாடல், விஜய் யேசுதாஸின் குரலில் வாஞ்சையுடன் கூடிய தாலாட்டாக நீள்கிறது. இசை சிறிதும் உறுத்தாமல் பாடலை அலங்கரிக்கிறது.

"துயரத்தில் இருந்தே காவியம் தோன்றும்,
தோல்வில் இருந்தே ஞானங்கள் தோன்றும்" – எனப் போகிற போக்கில் வாழ்க்கைத் தத்துவங்களை அலையெறிகிறார் வைரமுத்து.

மூங்கில் தோட்டம்

ரசனையான மெல்லிசைப் பாடல்! காதலர்கள் இருவர் மற்றவரது இருப்பை அவரவர் காதல் பார்வையில் பாடும் இந்தப் பாடலை அபய்-ஹரிணி இணைந்து பாடியுள்ளனர். 2012-இன் சிறந்த மெல்லிசைப் பாடல் என இதைச் சொல்லலாம். பேச்சு வழக்கிலேயே பாடல் புன்னகைக்கிறது.

"பெளர்ணமி இரவு, பனி விழும் காடு
ஒத்தையடிப் பாத ஓங்கூடப் பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே!" – ரசிக்க வைக்கும் வரிகள்.

அடியே அடியே

ஜாஸ் சாயலில் செந்தமிழ்ப் பாடல்! கேட்கும்போதே புல்லரிக்க வைக்கிறது! வார்த்தைகளை இழுத்து, குழைத்து சித் ஸ்ரீராம் பிரமாதமாகப் பாடியிருக்கிறார். இதில் பியானோ மற்றும் டிரம்ஸ் இசை நம்மைக் கட்டிப் போடுகின்றன.

"அடியே! அடியே! என்ன எங்க நீ கூட்டிப் போற?" எனக் கோரஸ் குரல்கள் நம்மையும் எங்கோ கூட்டிச் செல்கின்றன. மதன் கார்க்கியின் திறமை பாடல் வரிகளில் தெரிகிறது.

"பல்லாங்குழி பாத புரியல, உன்ன நம்பி வாரனே!
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல உன் பின்ன சுத்துறனே" – பாதை சொல்லும் வரிகள்.

மகுடி மகுடி

நீ……ண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழில் ஆர்யன் தினேஷ்! ஆய்த எழுத்து படத்தின் "டோல் டோல்" (Dol Dol) பாடல் உங்களுக்குப் பிடிக்குமா? (அது பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை) இதோ, அதை விட ஆர்ப்பாட்டமான மற்றொன்று! அதே ரகுமான் – ஆர்யன் தினேஷ் கூட்டணியில். சின்மயியின் குரலில் இடையில் வரும் வசனங்கள் கிறங்கடிக்கின்றன. பாடல் இறுதியில் "சீக்கிரம் வா!" எனும் குரலுடன் முடிகிறது. நாமும் இதற்கான ஒளிக்காட்சியைச் சீக்கிரம் எதிர்பார்ப்போம். அதிரும் இசை, மயக்கும் குரல் என ஆல்பத்தின் மற்ற பாடல்களிலிருந்து மாறுபட்டு ரகுமான் புது விருந்து கொடுத்திருக்கிறார்.

"உனக்குத் தெரியுமா?
நான் உன்ன நினைப்பேன் – நீ என்ன மறப்ப
நான் அடிப்பேன் – நீ சிரிப்ப
நீ ஊர்சுத்தி – நான் உன்ன சுத்தி
நான் எதிர் – நீ புதிர்
நான் மகுடிடா – நீ பாம்பு" – வசனக் கவிதை.

அன்பின் வாசலை

நெய்தல் நிலம்தான் கதைக்களம் என்றால் தேவாலயப் பாடல் இல்லாமலா? ஹரிசரணின் குரலில் ஒலிக்கிறது இந்தக் கடவுள் துதி பாடும் பாடல். செல்லோ வயலின் மற்றும் தேவாலய மணியின் இசையுடன் தொடங்கி, பின்பு கோரஸ் குரலில் நீள்கிறது.

"வான், மண், நீர், தீ எல்லாம் நீதானே!
சீற்றம் ஆற்றும் காற்றும் நீதானே" – கடவுளை வழிபடும் வரிகள்!

தந்தையும் மகனும் போட்டி போட்டுக் கொண்டு பாடல் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகை. கேட்கக் கேட்கத் திகட்டாத ஆல்பம். வருட இறுதியில் வெளி வந்திருக்கும் இது அனைவர் மனதையும் வருடும்.

கடல் – தன் இசையலையால் சிலிர்ப்பூட்டும்!

About The Author