கண்கள் இரண்டால்…

காதலித்து திருமணம் செய்பவர் சிலர். கல்யாணத்திற்கு பின் மனைவியைக் காதலிப்பவர் பலர். மனைவியின் ஆசைகளை, அவளின் சேவையைக் காதலிப்பவர் வெகு சிலர். மனைவியை இழந்தபின் அவளின் நினைவாக மனைவியின் சேவையைத் தொடர நினைப்பவர் கோடிகளில் ஒருவர்.

கோடிகளில் ஒருவராய், மனைவியின் ஆசையை ஒரு அமைப்பு மூலமாய் ஆலமரமாய் மாற்றியிருக்கும் திரு. இராதாகிருஷ்ணன் அவர்களைப் பற்றி உங்களுக்கெல்லாம் கூறுவதில் மிக்க மகிழ்ச்சி.

நிலா தன்னோட ‘மடை திறந்து..’ பகுதியில் சில வாரங்களுக்கு முன்னால் சொன்ன தாமரை பார்வையற்றோர் இல்லத்தின் அடிக்கல்தான் இந்த இராதாகிருஷ்ணன்.

தற்போது 59 வயதாகும் இராதாகிருஷ்ணன், இந்தியன் வங்கி மேலாளராகப் பணிபுரிந்தவர். அவரது மனைவியும் சென்ட்ரல் வங்கி மேலாளராகப் பணிபுரிந்தவர். திருமதி. இராதாகிருஷ்ணன் குழந்தைகளுக்கு இலவசமாகக் கணித முறைகள் சொல்லித் தருவதற்கும், கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டார்.

எதிர்பாராதவிதமாக திருமதி. இராதாகிருஷ்ணன் இறந்து விட, அவரின் இரு கண்களும் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும், தென் அமெரிக்கர் ஒருவருக்கும் பொருத்தப்பட்டன. தற்போதும் மனைவியின் நினைவு வரும்போதெல்லாம் தன் மனைவியின் கண்களை தானமாகப் பெற்றவரைப் பார்க்க செல்வதாய்க் கூறும்இராதாகிருஷ்ணன், தாமரை இல்லம் ஆரம்பிக்க நேர்ந்ததைநினைவு கூறுகிறார்:

மனைவி இறந்தபின் பத்து வயது குழந்தையைக் கவனிக்கவும், வயதான பெற்றோரைக் கவனிக்கவும் 2001ம் ஆண்டு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். மனைவியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5ம் தேதி அன்று முடிந்த அளவு அன்னதானம் செய்வேன். சாய்சமிதி மூலம் பார்வையற்றோருக்குப் படிக்க உதவுவது, தேர்வு எழுதுவது போன்ற உதவிகள் செய்து வந்தேன்.

5-11-1993 அன்று பல்லாவரத்தில் உள்ள பார்வையற்றோர் ஆஸ்ரமத்திற்கு மனைவி நினைவு நாளன்று உணவளிக்கச் சென்றிருந்தேன். கனமழை காரணமாக அங்கிருந்த ஒரேயொரு அறைக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. பார்வையற்ற பெண்கள் அனைவரும் கட்டில்களின் மேல் இரவு முழுவதும் நிற்க வேண்டிய கட்டாயம். செல்போன் போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் என்னுடன் வந்த நண்பர் பத்மராஜை அவரது வீட்டில் விட்டுவிட்டு என் வீட்டிற்கு வரும்போது நள்ளிரவு மணி 12.30 ஆகிவிட்டிருந்தது.

இரவு முழுவதும் பார்வையற்றோர் இல்லத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். முடிந்தவரை அவர்களுக்கு உதவுவது என முடிவெடுத்தேன்.

2002ம் ஆண்டு பத்மரி ஜெயின் என்னும் பார்வையற்றவரை சந்திக்க நேர்ந்தது. M.A., B.Ed. M.Phill, Phd என பல பட்டங்கள் பெற்று சென்னை, நந்தனம் கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணிபுரியும் பத்மரி ஜெயின் கல்விக்குப் பார்வை ஒரு தடையல்ல என எனக்கு உணர்த்தினார்.

பார்வையற்ற நிலையிலும் வாழ்வில் தன்னால் உயர முடிந்ததைப்போல் பார்வையற்ற பெண்களுக்கு நான் உதவ வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். ஆண்களை விட பார்வையற்ற பெண்களுக்கு கல்வியும், பாதுகாப்பான உறைவிடமும் அவசியமெனக் கூறினார்.

எங்களின் பொருளாதாரம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலையில் இருந்தபோதும் ஜெயின் மதத்தவர்களுடன் இணைந்து தாமரை பார்வையற்றோர் இல்லத்தைத் தொடங்கினோம்.

2005ம் ஆண்டு இருபது பார்வையற்ற பெண்களுடன் நுங்கம்பாக்கத்தில் உள்ள சற்றே பெரிய வீட்டிற்கு ஆஸ்ரமம் குடிபெயர்ந்தது. தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு வாடகை தர முடியாமல் போனது.

ஒருநாள் இரவு வீட்டுக்கு சொந்தக்காரர் பார்வையற்ற பெண்களை வீட்டைக் காலி செய்யச் சொல்ல, நடுரோட்டில் தங்க வேண்டியதாயிற்று. மறுநாள் பலரிடம் கெஞ்சி கேட்டு வாங்கி வீட்டு வாடகை தந்தோம்.

கடவுள் அருளால் ஜெயின் மதத்தைச் சேர்ந்த நல்லவர் ஒருவர் தனது கார் நிறுத்துமிடத்தை பார்வையற்ற பெண்கள் தங்கிக் கொள்ள இலவசமாகக் கொடுத்தார்.

தற்போது 62 பார்வையற்ற பெண்கள் தங்கியிருக்கும் இல்லம் (14, திருவேதி அம்மன் தெரு, மைலாப்பூர், சென்னை) அந்த நல்லவரால் கொடுக்கப்பட்டதுதான். ஜம்பது பேர் மட்டுமே தங்க முடிந்த இந்த இல்லத்தில் தற்போது 62 பேர் தங்கியுள்ளனர்.

         

இல்லத்தின் நிதி நிலைமை :

வாடகையின்றி இல்லத்தைப் பராமரிக்க மாதத்திற்கு ரூ.1.75 இலட்சம் செலவாகும். பல்வேறு தொழில்கள் செய்து வரும் ஜெயின் மதத்தவர்கள் தங்களால் முடிந்ததை பிறந்த நாள், திருமணநாளின்போது செய்கிறார்கள். ஒரு வாரத்திற்கு நண்பர்கள் மூலம் இல்லத்திற்கு அன்பளிப்பு தரப்படுகிறது. சிங்கப்பூரைச் சேர்ந்த சாய் பக்தர்கள் மாதந்தோறும் ரூ.10,000 அளிக்கிறார்கள்.

பி.எட் தவிர மற்ற பட்டங்களுக்கு அரசு கல்வி உதவி அளிக்கிறது. தனியார் கல்லூரிகளில் மட்டுமே உள்ள பி.எட் ஒரு சீட்டிற்கு ரூ.45,000 கட்ட வேண்டியுள்ளது. 2010 &11ம் ஆண்டில் டிரஸ்ட் மூலம் ரூ.4.32 இலட்சம் திரட்டப்பட்டு 12 பெண்களுக்கு கல்லூரி சீட் பெறப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் எனது மகள் வளர்ந்து பி.இ. முடித்து விட்டு தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எனது பெற்றோரும் இறந்து விட, என்னால் அதிக நேரம் ஆஸ்ரமத்தில் செலவிட முடிந்தது. எனது பழைய வங்கி தொடர்புகள் மூலம் ஆஸ்ரமத்திற்கு தேவையான பொருட்கள், பெண்கள் படிக்க உதவும் சிடி பிளேயர் போன்றவற்றை ஏற்பாடு செய்து தந்தேன்.

வெளிநாடுகளில் மற்றும் இந்தியாவில் செட்டிலாகிவிட்ட எனது நண்பர்கள், என்னை ஒரு டிரஸ்ட் ஆரம்பிக்கச் சொல்லி, அதன் மூலம் தாமரை இல்லத்திற்கு உதவச் சொன்னார்கள்.

மற்றவர்களுக்கு உதவுவதை வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டிருந்த எனது மனைவியின் பெயரால் டிரஸ்ட் அமைப்பது என முடிவு செய்து 25-03-2010 இராமநவமி தினத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இலாபநோக்கமின்றி ஆரம்பிக்கப்பட்ட இந்த டிரஸ்டிற்கு மத்திய அரசின் வருமான வரி விலக்கு (Reg No:204/2010) பெறப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதியுதவி பெற அதிக காலம் எடுப்பதால், தற்போது இந்தியாவில் உள்ள உறவினர்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு, டிரஸ்ட் கணக்குக்கு மாற்றப்படுகிறது.

62 பேருக்கு மூன்று வேளையும் உணவளிப்பதை எங்களின் முக்கியக் குறிக்கோளாய் கொண்டுள்ளோம். ஒரு சில சமயங்களில் ரூ.500 கொடுத்துவிட்டு அனைவருக்கும் ஒரு வேளை உணவளிக்கச் சொல்பவர்களும் உள்ளனர். அத்தகைய நேரங்களில் எங்கள் பணத்தைப் போட்டு சமாளிக்கிறோம்.

பெண் குழந்தைகள் கிழிந்த சுடிதார்களை அணிந்து செல்வதால் கல்லூரியில் கேலிக்கு உள்ளாகின்றனர். அதை தவிர்க்க 2010ம் ஆண்டு அனைவருக்கும் ஒரு செட் ஆடை டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.

என் மகள் முப்பது புதிய சுடிதார் வைத்திருக்கையில் ஆஸ்ரம பெண்களுக்கு ஒரே ஒரு ஆடைதானா என என் மனம் என்னை யோசிக்க வைத்தது. என் நண்பர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். சாய் குழுமத்தைச் சேர்தவர்கள் ஒவ்வொரு நவராத்திரியின்போதும் ரூ.30,000 மதிப்புள்ள ஆடைகளை நவராத்திரி தானமாக கொடுக்க முன் வந்தனர். புத்தாடை உடுத்திய மகிழ்ச்சியை பார்வையற்ற பெண்களின் முகத்தில் பாருங்களேன்.

கல்வி உதவி:

பி.ஏ, எம்.ஏ முடித்துவிட்டு குறைந்தது 10 பெண்கள் பி.எட் படிப்பில் சேர்ந்துள்ளனர். வெறும் பி.ஏ, எம்.ஏ வுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வேலை அமைவதில்லை. பி.எட் முடித்தவர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பு இருப்பதால் அனைவரையும் பி.எட் படிக்க வைக்க முயல்கிறோம். அதற்காக ரூ.4.50 இலட்சம் தனியே ஒவ்வொரு வருடமும் தேவைப்படுகிறது. திறமை வாய்ந்த படிக்க வசதியில்லாத குழந்தைகளுக்கு உதவும் திட்டமும் உள்ளது.

செளந்தர்யா என்னும் நன்கு படிக்கும் சிறுமி சீருடை இல்லாததால் 12ம் வகுப்பிற்கு செல்ல முடியவில்லை. முதியோர் இல்லத்தில் வேலை செய்து கொண்டிருந்தவருக்கு சீருடை ஏற்பாடு செய்து தொடர்ந்து படிக்க வழி செய்யப்பட்டது.

சென்னைக்கு அருகில் உள்ள செளந்தர்யா படிக்கும் பள்ளிக்குச் சென்ற நான், 2011ஆம் ஆண்டில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளுக்கு என் டிரஸ்ட் மூலம் மொத்த செலவையும் ஏற்றுக்கொள்வதாய் கூறியுள்ளேன்.

பின் தங்கிய கிராமத்தில் 14 குழந்தைகளை படிக்க வைக்க நான் என்ன செய்யப் போகிறேன் என்று கலங்கிய தருணத்தில் நிலாச்சாரலின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து அனைவரும் படிக்க, கடவுள் நிலாச்சாரல் வாசகர்கள் மூலம் வழிகாட்டுவார் என நம்புகிறேன்.

         

மருத்துவம்:

எனது ஒரு சகோதரி மிக இளவயதில் கேன்சரால் இறந்து விட்டார். இன்னொரு சகோதரி மார்பகப் புற்று நோயால் அவதிப்படுகிறார். புற்றுநோய் பற்றி அறிந்த காரணத்தால் என்னால் முடிந்த அளவு அந்நோயாளிகளுக்கு உதவுகிறேன்.

மாதம் ரூ. 6000 மட்டுமே சம்பாதிக்கும், ஜந்து பேர் கொண்ட குடும்பத்தை கொண்ட கார் டிரைவருக்கு இதயத்தில் இரு அடைப்புகள். ஒன்று, தமிழ்நாடு அரசின் ‘வருமுன் காப்போம் திட்டம்’ மூலம் அகற்றப்பட்டது. அரசு திட்டம் மூலம் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு ரூ.1 இலட்சம் மட்டுமே கிடைக்கும் என்பதால் இன்னொரு அடைப்பை நீக்க முடியவில்லை.

எங்கள் டிரஸ்ட் மூலம் ரூ.80,000 ஏற்பாடு செய்யும்வரை மாதந்தோறும் ரூ.1500 டிரைவரின் மருத்துவச் செலவுக்கு கொடுக்கப்படுகிறது.

திருமாங்கல்ய தானம்

ரூ.10,000 க்குள் செலவாகும் தங்கத்திருமாங்கல்ம் ஏழைப் பெண்களுக்கு அவர்களைப் பற்றி விசாரித்தபின் தரப்படுகிறது. மணப்பெண் அவசியம் அணிய வேண்டியதாக உள்ளதால், தங்கத்தின் விலையேற்றத்தால் சிரமப்படுகின்றனர். என்னால் முடிந்தளவு இந்த வருடம் ஒரு பெண்ணிற்கு அந்த வாய்ப்பை அளித்து, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண விரும்புகிறேன்.

இதுவரை அளிக்கப்பட்ட உதவிகள் அனைத்தும் எனது விருப்ப ஓய்வால் வந்த பணத்திலிருந்தும், உறவினர்கள், நண்பர்களின் உதவியால் செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பூர்ண புஷ்கலாம்பிகா சமேத ஹரிஹரா புத்ரா கோயில் கும்பாபிஷேகத்தை எங்கள் டிரஸ்ட் மூலம் நடத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.

என் 58 வருட வாழ்க்கையில் நான் இதுவரை செல்லாத இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்யும் பாக்கியத்தை கடவுள் எனக்கு அருளியதை என்னவென்று சொல்ல! கும்பாபிஷேகத்திற்கு ரூ. 3 இலட்சம் செலவாகலாம் எனக் கணக்கிடப்பட்டு 22-05-2011 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கோயில் கும்பாபிஷேகத்திற்கு உதவிய திரு.இராமகிருஷ்ணன், திரு.பாஸ்கரன் கணேசன் அவர்களுக்கு என்
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மே மாத விடுமுறையில் தாமரை இல்லப் பெண்களுக்கு இலவசமாக கணினி பயிற்சி அளிக்க ஒருவர் முன்வந்துள்ளார். இந்தியன் வங்கி ஒரு கணினி தருவதாய் சொல்லியுள்ளது. இன்னும் அதற்கான உத்தரவு வரவில்லை. கடவுள் அருளால் இதுவும் நிச்சயம் நடக்கும் என நம்புகிறேன்.

விருதுகள்:

இந்த வருடம் குடியரசு தினத்தில் இந்தியன் வங்கி இராதாகிருஷ்ணன் டிரஸ்டிற்கு ஏழைகள் மற்றும் பார்வையற்றோருக்கு வழங்கிய சேவையைப் பாராட்டி விருது வழங்கியுள்ளது.

மனைவியின் நினைவாய் சேவைகள் மூலம் நிறைவாய் வாழ்ந்து வரும் இராதாகிருஷ்ணனின் ஒரே மகள் தனது மென்பொருள் வேலையை இராஜினாமா செய்துவிட்டார். மாதம் நாற்பதாயிரம் ரூபாய் வருமானம் தந்த வேலையை விட்டு விட்டு YOUTH FOR INDIA குழுமத்தில் இணைந்து ஏழை மக்களுக்கு உதவி வருகிறார். தற்போது இராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 86 வயதான நடக்க முடியாத மூதாட்டிக்கு உதவியாய் உள்ளார்.

தானத்திற்குத் தயங்காத பெற்றவர்களைக் கொண்டவர் இதுபோல் இல்லாவிட்டால்தான் ஆச்சரியம்! தானம் தரவே யோசிப்பவர்கள் பலர். சற்றே மனம் இளகியவரானால் தனக்குப் பின்தான் தானம் தருமம் என்று சொல்பவர்களும் உண்டு. தனக்கென சேர்த்துக்கொண்டே போகும்போது, பிறருக்குக் கொடுக்கும் வாய்ப்பு வராமலே போகலாம்.

வாய்ப்புகள் பற்றி வாசகர்களுக்கு வழி காட்டிவிட்டோம். மனமும், பணமும் வாய்க்கப் பெற்றவர்கள் உதவலாமே!

தொடர்புக்கு :

SMT RAJESWARI RADHAKRISHNAN CHARITABLE TRUST
Managing Trustee: M. Radhakrishnan
A4, Bhavithra Apts., 144A, College Road, Nanganallur, Chennai – 600 114.
Ph: +91-44- 22245087. Mobile: +91-9176855310.
E-mail: mail2srrct@gmail.com

நன்கொடை வழங்க – வங்கிக் கணக்கு விபரம்:

Smt. RAJESWARI RADHAKRISHNAN CHARITABLE TRUST
SAVINGS BANK ACCOUNT NO.8035 1021 0000003
IFSC/NEFT CODE; BKID 000 8035

BANK OF INDIA, NANGANALLUR BRANCH,
9/5, 3rd Main Road, NANGANALLUR,
CHENNAI 600 061, TAMILNADU, INDIA

About The Author

4 Comments

  1. கீதா

    திரு.இராதாகிருஷ்ணன் அவர்களின் சேவை போற்றுத்தற்குரியது. நல்ல மனம் கொண்ட மனிதர்களின் உதவியால் பார்வையற்ற சகோதரிகளின் முகத்தில் காணப்படும் மகிழ்ச்சியை என்னென்பது? கண்தானம் செய்யவேண்டும் என்ற என் முடிவை மேலும் உறுதிப்படுத்தியது இக்கட்டுரை. பகிர்வுக்கு நன்றி கவிதா.

  2. கலையரசி

    நல்லதொரு சேவை செய்யும் திரு ராதாகிருஷ்ணனைப் பற்றி எழுதியதற்கு நன்றி கவிதா. என் அன்னையின் நினைவு நாளுக்குக் கண்டிப்பாக நான் இந்த டிரஸ்டுக்கு என்னாலான பணவுதவியைச் செய்வேன்.

  3. கவிதா பிரகாஷ்

    கண்தானம் செய்வதற்கு வாழ்த்துகள் கீதா!

    கலை,

    உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நலமாக அமைய நிலாக்குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள்!

  4. Dr. K. Kalairajan

    தாமரை தொண்டு நிறுவனத்தினருக்குப் பாராட்டுகள். பார்வையில்லாத அந்தப் பெண்ணின் சிரிப்பில் இறைவன் மகிழ்வதைக் காண்கிறேன். ஒருமுறை சென்னைக்கு வரும்போது நேரில் வருகிறேன்.

Comments are closed.