கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

உடலென்னும் ஆச்சரியம்!

வாழ்க்கையைக் கொஞ்சம் அர்த்தத்தோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள் தீபக் சோப்ரா என்ற பெயரைக் கேள்விப் பட்டிருக்கக் கூடும் . உடலும் மனமும் ஒருங்கிணைந்த நல்வாழ்வு, மனித ஆற்றல் ஆகிய துறைகளில் உலகப் புகழ் வாய்ந்த தலைவர், எழுத்தாளர், பயிற்சியாளர். இவரது ‘“வெற்றிக்கான ஏழு ஆன்மிக வழிகள்”’ என்ற நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியது.
  
அவரது சமீப வெளியீடான “’ஆற்றல், சுதந்திரம், அருள்”’ (POWER, FREEDOM ,AND GRACE) என்ற நூலில் நமது வாழ்வின் மர்மங்களையும், பிரபஞ்சத்தோடு இணைந்து கலப்பற்ற பேரின்ப வாழ்வு வாழ்வதற்கான மார்க்கங்களையும் அலசுகிறார். அவற்றிலிருந்து, நமது சிற்றறிவுக்கு எட்டிய அளவில், சில தகவல்களை மிக மிக எளிமைப் படுத்தித் தருகிறோம். (ஆங்காங்கே நமது அதிகப்பிரசங்கி கமெண்ட்களுடன்.!)
  
“ காயமே இது பொய்யடா!” என்று நம்ம நாட்டில் பாடி வைத்தார்கள். இதைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தோம். க்வாண்டம் தியரி இதைத்தான் சொல்கிறதாம். தீபக் சோப்ராவும் சொல்கிறார். நமது உடம்பு எதனால் ஆகியது? அணுக்கள். அந்த அணுக்களென்பவை என்ன? வெற்றிடம்., சில புள்ளிகள்., மின்சார டிஸ்சார்ஜுகள்! அதிவேகமாகச் சுழலும் துகள்கள்! லெப்டான், குவார்க், மெஸான் போல.
  
இந்தத் துகள்கள் பருப் பொருள்கள் போலத் தோற்றம் அளித்தாலும் இவை பருப்பொருள்கள் அல்ல,. மிகப் பெரிய வெற்றிடத்தில் அலை அலையாய் எழுந்து தளரும் செய்திகளும் ஆற்றலுமே! இந்தத் துகள்கள், வெற்றிடத்திலிருந்து தோன்றுகின்றன, ஒன்றை ஒன்று எதிர்த்துத் தள்ளுகின்றன!, ஒன்றோடொன்று மோதுகின்றன!, வெற்றிடத்துக்குள்ளேயே மறைந்து விடுகின்றன1..

உங்கள் வீட்டு மேஜையிலும், தெருவில் ஓடும் நாய்க்குட்டியிலும், நீங்கள் இயக்கிக் கொண்டிருக்கிற கம்ப்யூட்டரிலும் – அலை என்றோ துகள் என்றோ சொல்ல முடியாத ஒரு வஸ்து(?) வின் இந்த வெற்றிட நர்த்தனம்தான் நிகழ்கிறது.

இந்தக் கருத்தோடு, பாரதியின் “’நான்”’ என்ற பாடலைப் படித்துப் பாருங்கள். பாடலின்

முதல் சில வரிகள்: இங்கே.

வானில் பறக்கும் புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்;
காற்றும் புனலும் கடலுமே நான்.
  
“ஒரே ஆற்றுக்குள் நீங்கள் இரண்டு முறை இறங்க முடியாது” என்பார்கள். ஏனெனில் ஒவ்வொரு கணமும், பழைய நீர் போய்ப் புதுப்புனல் வருகிறது! அதே போலத்தான், நமது உடலும். அது, ஒவ்வொரு கணமும் பிரபஞ்சத்துடன் ஆற்றலையும் செய்தியையும் பரிறி மாறிக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சம் என்பதும் நமது விரிவான உடலே! இங்கு ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்துக் கொண்டால் அது சைபீரியாவிலோ அல்லது வேறெங்கோ கூட ஓர் அதிர்வை ஏற்படுத்தும் என்ற அளவுக்கு பிரபஞ்சமே ஓர் ஒருங்கிணைந்த சக்திதான். திருப்பரங்குன்றத்தில் சிரித்தால் திருச்செந்தூரில் எதிரொலிப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை!
  
சுவாசிப்பது, உணவைச் செரிப்பது, ஏன், எண்ணங்கள் கூட நம் உடலில் ஏற்படும் மாறுபாடுகளே! இவை எல்லாம் நாம் எந்த முயற்சியும் செய்யாமலே நிகழ்கின்றன!. ஒவ்வொரு மூச்சிலும் நம் பல்லாயிரக்கணக்கான அணுக்களை உள் வாங்குகிறோம். அவை இருதயத்தில், சிறுநீரகத்தில், மூளையில் செல்களாக உருவாகின்றன. நாம் வெளிவிடும் ஒவ்வொரு மூச்சிலும் சின்னச் சின்ன திசுக்களை வெளியிட்டு இந்த பிரபஞ்சத்தின் சூழ்நிலையுடன் பரிமாறிக் கொள்கிறோம்.

உடல் தனது அணுக்களில் 98 சதவீதத்தை ஓர் ஆண்டு காலத்துக்குள் புதுப்பித்துக் கொள்கிறது. புதிய வயிற்றுச் சுவர்கள் 5 தினங்களுக்கு ஒரு முறையும், புதிய சருமம் மாதம் ஒரு முறையும், புதிய ஈரல் ஆறு வாரத்துக்கு ஒரு முறையும், புதிய எலும்புக்கூடு மூன்று மாதத்துக்கு ஒரு முறையும் உருவாகின்றன என்று ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.

 நமது மரபணு பல லட்சக்கணக்கான பரிணாமத்தின் நினைவுகளைப் பொதிந்து வைத்திருக்கிறது. அதுவே, ஆறு வாரத்துக்கு முன்பிருந்த மரபணு இல்லை. “நான்” என்று சொல்லும்போது எந்த “நானை”ச் சொல்கிறீர்கள்? மூன்று மாதத்துக்கு முன்பிருந்த “நானா?” நேற்றிருந்த நானா? இன்றுள்ள நானா? நாளை இருக்கப் போகும் நானா?

( நாம் இப்போ என்ன பேசிக் கொண்டிருக்கிறோம்? விஞ்ஞானமா? மெய்ஞானமா? அல்லது இரண்டும் ஒன்றேதானோ? குழப்பம்டா, சாமி!)
  
ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றிப் பேசுகிறோம். அதற்கு சிறந்த உதாரணம், நமது உடலிலேயே இருக்கிறது. நமது உடலில் லட்சோப லட்சம் செல்கள் உள்ளன. தெளிவாகச் சொல்வது என்றால், நமது “பால்வீதி” யில் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளனவோ, அதை விட அதிக எண்ணிக்கை! ஒவ்வொரு செல்லும் எண்ணற்கரிய பலச் செயல்களைச் ஒவ்வொரு வினாடிப் பொழுதும் செய்து கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, ஒவ்வொரு செல்லும் உடலின் செயல்பாட்டையும் உடனுக்குடன் புரிந்துகொண்டு அவற்றுடன் தமது செயல்களை ஒருங்கிணைத்துச் செயல் படுகிறது!. “ இதோ, கேள்! நான் இப்போது உணவை ஜீரணிக்கப் போகிறேன்,. நீ உன் மேசையைக் காலி செய்து கொண்டு, உன் வேலைக்குத் தயாராக இரு, வேறு எந்த வேலையையும் எடுத்துக் கொள்ளாதே!” என்று எந்த ஒரு உறுப்பும் மற்ற உறுப்புகளுக்குத் தாக்கீது அனுப்புவதில்லை. ஒரு குழப்பமும் இல்லாமல் காரியங்கள் நடக்கின்றன!
  
உங்கள் தாயார் உங்களைக் கருத் தரித்த போது நீங்கள் என்னவாக இருந்தீர்கள்? DNA வின் இரட்டை இழையாக! அறிவும் தகவலும் பொதிந்திருந்த இந்தச் சின்ன புள்ளிதான், லட்சோப லட்சம் செல்களாகப் பரிணமிக்கிறது. எப்போது உங்களுக்குப் பல் முளைக்கும், எப்போது பருவம் அடைவீர்கள், எப்போது இனப் பெருக்கத்துக்குத் தகுதி அடைவீர்கள், என எல்லாம் அந்த இரட்டை இழைக்குள்!
  
(“ ஒரு பழத்துக்குள் எத்தனை விதைகள் இருக்கின்றன என்று எண்ணிச் சொல்லி விட முடியும்;. ஆனால், ஒரு விதைக்குள் எத்தனை பழங்கள் இருக்கின்றன என்று யார் சொல்ல முடியும்?” – எங்கோ படித்தது.)

சுற்றுப் புறச் சூழ்நிலையுடன் நமது உடல் ஒத்தியங்குகிறது என்று சொல்கிறார் தீபக். ஒரு சுவையான பரிசோதனை நடந்திருக்கிறது. பல்வேறு நேரங்களில் இயக்கி விடப்பட்ட ஒரே அளவுள்ள பெண்டுலங்களுடன் உள்ள ஐந்து கடிகாரங்கள் ஒரே அறையில் வைக்கப்பட்டன. அவை அனைத்தும் 4 மணி நேரத்தில் ஒரே ரிதத்துடன் உடன் ஏக காலத்தில் “டிக் டிக்” கின. இதை விட ஒரு படி மேலே போய்ச் சொல்கிறார் அவர். மகளிர் விடுதியில், உள்ள பெண்களுக்கும், விடுதியில் சேருவதற்கு முன் எப்படியிருந்தாலும், சேர்ந்து சில காலத்திற்குப் பின் ஏக காலத்தில்தான் மாத விலக்கு ஏற்படும் என்கிறார்.
  
ஆர்வமுள்ளவர்கள் தீபக் சோப்ராவின் இந்த நூலையும், அவரது மற்ற நூல்களையும் படிக்கலாம்.

About The Author

5 Comments

  1. balaji

    அற்புதம் திரு ஐ ப ர அவர்களே.எளிமை படுத்த முடியாத விஷயம் இது மிகவும் எளிய முறையில் புரிய வைக்கும் த ங்களின் முயற்சி பாராட்டக்கூடியது. என்னுடைய நண்பர் இ ந்த க்வாண்டம் தியரி பற்றி கேட்ட போது புரிய வைக்க முடியவில்லை. இப்போது இதை அப்படியே அவருக்கு அனுப்பியுள்ளேன்.

    நன்றி
    இனியன் பாலாஜி

  2. sivagurunathan

    நானும் ஒரு (க)விதை தருகிறேன்…
    பிரபைஞ்ச புத்தகத்தில் பூமிகூட ஒரு புள்ளிதான். பூமியே புள்ளி என்றாகையில் பூமி என்ற புள்ளியில் வாழும் மனிதன் ?……

    இப்படிக்கு,
    புள்ளிக்குள் உண்டான புள்ளி சிவகுருனாதன்

  3. Kalai

    நன்றி. திரு ஐ ப ர… தேடிய தகவல் கிடைத்தது.

  4. K.S.Ilamathy

    சொப்ரவின் கட்டுரை மிக மிக அருமை. நன்ரி.

Comments are closed.