கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

விமரிசனங்களை எதிர்கொள்வது எப்படி?

ஒருவரைப் பற்றிய விமரிசனங்களைப் பொதுவாக மூன்று வகைப்படுத்தலாம்.

– நியாயமான விமரிசனங்கள்
– நியாயமான விமரிசனங்களேயானாலும் விரோத மனப்பான்மையுடன் சொல்லப்படுபவை.
– நியாயமற்ற, உண்மையில்லாத விமரிசனங்கள்

பொதுவாக இந்த மூன்று விதமான விமரிசனங்களையுமே உணர்ச்சிவயப்பட்டு எதிர்ப்பவர்கள் பலர் உண்டு. தம்முடைய மதிப்பின் மீதான ஒரு தாக்குதலாகவே அதை எடுத்துக் கொள்கிறார்கள்.

கலை இலக்கியப் பணிகளில் நல்ல முறையில் ஈடுபட்டிருக்கும் சிலர் ஆக்கபூர்வமான விமர்சனங்களை தங்களின் வளர்ச்சிக்கு உதவுமென்று ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பெரும்பாலோர் விமரிசனங்களைத் தவிர்க்கவே நினைக்கிறார்கள்.

விமரிசனங்களை எதிர்கொள்வதில் முதல் படி – நாம் உண்மையாகவே விமரிசனம் செய்யப்படுகிறோமா என்று நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனேக சமயங்களில் நிதானமாக யோசித்தால் நம்மைப் பற்றியதாகக் கூட இருக்காது. நாமாகவே போய் ”உங்களுக்கு இது பிடித்திருந்ததா? நான் எப்படிச் செய்தேன்?” என்று வலியச் சென்று கேட்பதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலான உண்மையான விமரிசனங்களை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் நமக்கு இல்லாதபோது இவ்வாறான கேள்விகளைத் தவிர்ப்பது நல்லது.

நியாயமான விமரிசனமென்றால் அதைச் சரியான முறையில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த விமரிசனம் நியாயமற்றதென்றால் அதை அமைதியுடன், பதட்டமின்றி உதாசீனப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் உங்களை நியாயமற்ற விமரிசனம் செய்தவர் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக மகிழ்ந்து கொள்வார்.

சில விமரிசனங்கள் மனதைப் புண்படுத்தக் கூடியவைதான். ஆனால் அவை தகுதியற்றவர்களிடமிருந்தோ, வேண்டுமென்றே செய்பவர்களிடமிருந்தோ வரும்போது அவை நம்மைப் பாதிக்க விடக் கூடாது.

ஒருவர் செய்த விமரிசனத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு மனம் குமையக்கூடாது.முதலில் அது நியாயமானதுதானா, இல்லையா என்று உறுதி செய்து கொண்டு அது சரியானதுதான் என்று தெரிந்தால் நம்மைத் திருத்திக் கொள்ள முடிவு செய்து விட்டு பின் அச்சம்பவத்தை மறந்து விட வேண்டும். விமரிசனங்கள் ஏற்படுத்தும் வலியை நினைத்துக் கொண்டு நம்முடைய நல்ல தினங்களை பாழ்படுத்த வேண்டாம்.

தவறான விமரிசனங்கள் ஒருவரை எப்படிப் பாதிக்கின்றன என்று புரிந்து கொண்டு நாமும் அந்தத் தவறை செய்யாமல் இருக்க முயலுவோம்.

(சேத்தன் சோப்ரா – மனநல ஆலோசகர், சியாட்டில் அமெரிக்கா).

தாழ்ப்பாள் இல்லாத தமிழ்நாடு
`
”முன் காலத்தில் தமிழ்நாட்டுக் கதவுகளுக்குத் தாழ்ப்பாளும் இல்லையாம், பூட்டும் இல்லையாம்! திறந்தே இருக்குமாம். ஏன்?

வயலில் எல்லாம் தண்ணீர் அலையெழும்பி நிற்குமாம்! பார்த்ததும் வலை வீசி மீன் பிடிக்கலாம் என்ற ஆசை தோன்றுமாம்! இதனால் விளைச்சல் பெருகும். எனவே விருந்தாளிகளை ஆவலோடு எதிர்பார்த்துப் பெண்கள் காத்திருப்பார்களாம்.

ஏகமாய் விளைச்சல் ஏற்பட்டதால் வீட்டில் உணவுப் பொருள்கள் குவிந்து இருந்ததாம். கதவை மூட வேண்டிய தேவையே இல்லை. அதனால் தாழ்ப்பாள் வைக்க மாட்டார்களாம். பூட்டும் கிடையாதாம். இதை மெகஸ்தனீஸ் தன் பயணக் குறிப்பில் எழுதியிருக்கிறார்.

”வலைவீச ஆசைதர அலைவீசும்
வயலும் மற்ற வளங்களாலோ
விலைவாசிக் கவலையின்றி விருந்தோம்ப
எதிர்பார்க்கும் விருப்பத்தாலோ
தலைவாசல் கதவினுக்கு தாழ்பூட்டே
இல்லாத தமிழ்நாடென்று
பலதேசம் சுற்றி வந்த மகிஸ்தனிசும்
புகழ்ந்துரைத்த பழைய நாடு

இது நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் அவர்களின் பாடல்.

(‘சிந்தைக் கினிய சிலம்பொலியார்’ என்ற நூலில் படித்தது)

இசை கேட்டால் புலி விழுங்கிவிடும்

ஒரு பிரபலமான வயலின் விற்பன்னர் தன்னுடைய இனிமையான சங்கீதத்தால் கொடிய வன விலங்குகளைக் கூட மயக்கிவிட முடியும் என்று கூறினார். அவருடைய நண்பர்கள் எவ்வளவோ எச்சரித்தும் கேளாமல், ஆயுதமில்லாமல் அடர்ந்த காட்டிற்குச் சென்று வயலின் வாசிக்கத் துவங்கினார்.

ஒரு பெருத்த யானை ஒன்று அவர் வயலின் இசையைக் கேட்டதும் அப்படியே அசையாமல் அமர்ந்து இசையை ரசிக்கத் துவங்கியது. அடுத்து ஒரு சிறுத்தை அவ்வாறே அவரின் இசைக்கு அடிமையாகி அமர்ந்தது. அதேபோல சிங்கமும் மற்ற சில விலங்குகளும் இசையில் தங்களை மறந்து, சாதுவாக அமர்ந்து இசையை ரசித்தன. ஆனால் கடைசியில் பாய்ந்து வந்த ஒரு புலி அந்த இசை மேதையின் மீது தாவி அவரை விழுங்கி விட்டது.

அப்போது மற்ற விலங்குகள் புலியைச் சூழ்ந்து கொண்டு ”அவ்வளவு அருமையான இசையைப் பொழிந்து கொண்டிருந்த அந்த மேதையை ஏன் இப்படிச் செய்தாய்?” எனக் கேட்டன.

அந்தப் புலி தன் காதை விரல்களால் மடித்துக் கொண்டு அருகில் வந்து ”என்ன சொன்னீர்கள்?" என்று கேட்டது.

எவ்வளவுதான் மனதை மயக்கும் இசையாக இருந்தாலும், அதைக் கேட்க முடியாமல் போனால் எந்த பயனும் இல்லை. அது போலத்தான் நமக்கு வழிகாட்ட, நெறிப்படுத்த எவ்வளவோ வழிகள், முறைகள் இருந்தாலும் நாம் அவற்றைப் பயன்படுத்தாவிட்டால் காது கேளாத அந்த புலிக்கு முன் இசைத்த சங்கீதத்திற்கு சமம்தானே!

ரசித்த ஒரு வர்ணனை

அந்த மலைகள் என்னை என்னவோ செய்தன. தினம் தினம் செய்து கொண்டிருக்கின்றன. அவைகளைத் தூரத்திலிருந்து பார்க்கும் போதெல்லாம், ராம லக்ஷமணர்கள் மாதிரி, இரட்டை யானைக்குட்டிகள் மாதிரி வானை முட்டிக்கொண்டு நிற்கும். காளைக் கொம்புகள் மாதிரி, இன்னும் என்னவெல்லாமோ தோன்றி மறையும். சிற்சில சமயங்களில் அவைகள் மனதிற்குள் விபரீதமான பாலுணர்ச்சிகளைக் கிளப்பி விடுவதையும் நான் உணர்கிறேன். அமானுஷ்யமான மகா உருவத்தில் ஒரு அழகுப் பெண்ணை எதிரே கண்டு அணைத்துக் கொள்ள சக்தியற்றுத் தவிக்கும் வேதனை அந்த மலைகளைப் பார்க்கும் போது எனக்கு ஏற்படுவதுண்டு. அவைகள் வெறும் மலைகள்தான் என்று தட்டிக் கழிக்க நான் ஒரு போதும் விரும்பியதில்லை.

(எஸ். வைத்தீஸ்வரன் ”மலைகள்” சிறுகதையில்)

கவலை

தொலைக்காட்சி பார்த்து அதில் வரும் காட்சிகளில் ஆழ்ந்து போவதால், பேச வாய்ப்பின்றி குழந்தைகளுக்குப் பேச்சுத் திறன் குறைவதாக பிரிட்டனில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது. இன்னொரு ஆய்வு தெரிவிப்பது, சராசரியாக நாலு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாம்.

உலகிலேயே அதிகமாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை இந்தியாவில்தான் நிகழ்கிறது. பத்து குழந்தைகளில் ஒரு குழந்தை ஏதாவது ஒரு வகையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறது.

(ஆதாரம் : ‘பாடம்’ மாத இதழ்)

எம்மதமும் சம்மதம்

ஜாகிர் ஹூசைன் என்ற நடனக் கலைஞர் எதிராஜ வைபவம் என்ற நாட்டிய நாடகத்தை ஆடி வருகிறார். இது பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு.

உத்தரப்பிரதேச மாநில தலைநகரான லக்னோவின் அருகில் உள்ள நவ்பட்பூர் என்ற கிராமத்தில் உள்ள பிரபலமான அனுமார் கோயில் பழமை வாய்ந்த ஒன்று.இந்த கிராமத்தில் வசிக்கும் 3000 பேரில் 800 பேர் முஸ்லீம்கள். ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் தங்களின் ரம்சான் நோன்பை ஒவ்வொரு நாளும் இந்து மக்கள் ஏற்பாடு செய்யும் விருந்தில்தான் முடிக்கிறார்கள். தங்களின் மாலைத் தொழுகையை இந்தக் கோயிலின் வளாகத்திலேயே செய்து கொள்கிறார்கள்.

”எங்களது கிராமம் மத நல்லிணக்கத்தை உயிரோட்டமாக வைத்துள்ளது என்பதை பெருமையுடன் உணர்கிறோம்” என்கிறார்கள் இந்த கிராம வாசிகள்.

About The Author

3 Comments

  1. P.Balakrishnan

    தலைவன் வந்துவிட்டானா என்று ஆவலுடன் அடிக்கடி கதவைத் திறந்தும் மூடும் தலைவி பற்றிய சங்கச் செய்யுள் ஒன்று உண்டு. ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் தமது பயணக்கட்டுரையில் மேல் நாட்டில் வீடுகளில் ஆள் இருந்தாலும் கதவு பூட்டியே இருக்கும். நம் ஊர்களில் வீட்டில் ஆள் இருந்தால் வாசல் கதவு திறந்தே இருக்கும் என்று குறிப்பிடுவார். இப்போதெல்லாம் திண்டுக்கல் பூட்டு போட்டுப் பூட்டிய வீட்டையே உடைத்துக் கொள்ளை அடித்து விடுகிறார்களே. அரசியல்வாதிகள்தாம் எங்களது கதவு திறந்தே இருக்கிறது என்று கட்சியை விட்டுப் பிரிந்தவர்களை நோக்கி அழைப்பு விடுகிறார்கள்.
    கடந்த ஆண்டு சனிசிங்னாபூர் என்ற ஊருக்குச் சென்றிருந்தோம் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்திலிருந்து. அங்கு எந்த வீட்டுக்கும் கடைகளுக்கும் கதவே இல்லை!

  2. அசுக்கு

    இது என்ன.
    பூட்டில்லை என்கிறார் ஒருவர். மற்றவர் கதவுகூட இல்லை என்கிறார்.
    வீடே/னாடே இல்லாத தமிழர்கள்
    குடிசைவாசிகள்
    வைத்துப் பூட்ட என்ன இருக்கிறது?

    அந்தகாலத்தில் தமிழனுக்கு நாடு இருந்தது

  3. அசுக்கு

    .தமிழனுக்கு அன்று நாடிருந்தது.

    வீடில்லாதவனுக்கு
    குடிசைவாசிக்கு
    இழக்க எதுமில்லாதவனுக்கு இன்றும் பூட்டு தேவைப்படுவதில்லை

Comments are closed.