கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

நாம் பேச நினைப்பதெல்லாம்…

பொய்யான பேச்சை தவிர்த்திடுங்கள்.

ஏதாவது ஒரு விஷயம் உண்மையல்ல, சொன்னால் மனதைப் புண்படுத்தும் என்று தெரிந்தால் அதைச் சொல்லாதீர்கள்.

ஏதாவது ஒரு விஷயம் உதவிகரமாக இருக்கும், ஆனால் அது உண்மையானதல்ல என்று தெரிந்தால் அதைச் சொல்லாதீர்கள்.

ஏதாவது ஒரு விஷயம் உண்மையானது, அனால் மனத்தைப் புண்படுத்தும் என்று தெரிந்தால் அதைச் சொல்லாதீர்கள்.

உண்மையானது, உதவிகரமாகவும் இருக்கும் என்ற விஷயம் ஏதாவது உங்களுக்கு தெரிந்தால், அதை சரியான நேரம் பார்த்து சொல்லத் தவறாதீர்கள்.

சரியான பேச்சு என்பது…

சுடுமொழிகளைத் தவிர்ப்பது.
வம்பு பேசாமல் இருப்பது.
வெட்டிப் பேச்சு, உதவாக்கரைப் பேச்சு பேசாமல் இருப்பது. (நகைச்சுவைப் பேச்சை தவிர்க்க வேண்டும் என்பதல்ல பொருள்)
பொய் சொல்லாமை

பேசுவதற்கு முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை

நாம் பேசுவதன் நோக்கம், எதிராளியைச் சாமர்த்தியமாக நாம் இழுத்த இழுப்புக்கு வரும்படி கையாளுவதா?
நாம் சொல்லுகிற செய்தியின் நோக்கம் என்ன?
இந்தப் பேச்சு பிளவை உண்டாக்குமா, புண்படுத்துமா?
இந்தப் பேச்சு காயத்தை ஆற்றவும், சமரசம் ஏற்படுத்தவும் உதவுமா?
நாம் பேசுகிற வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கிற உணர்ச்சிகள் என்ன?
நிச்சயமாக இதைப் பேசித்தான் ஆக வேண்டுமா?
மவுனமாக இருப்பது இன்னும் புத்திசாலித்தனமாக இருக்குமா?

(காந்திஜி தமது சுய சரிதையில், தாம் பேச்சில் சிக்கனமாக இருப்பதால், சொல்லி விட்ட எந்த ஒரு விஷயத்துக்காகவும் வருத்தப்பட நேர்ந்ததில்லை என்கிறார்)

சரியான பேச்சு நமது மனப்புண்ணை ஆற்றுகிறது. யாரிடம் அவற்றைப் பகிர்ந்து கொள்கிறோமோ, அவருக்கும் ரணம் ஆற்றுகிறது.

கேட்பதில் கவனம் வைக்க வேண்டியவை

என்ன சொல்கிறார்கள் என்பதை முழு மனதுடன் கேட்டுக் கொள்கிறோமா?
பேசுபவரிடம் என்ன உடல் மொழியை வெளியிடுகிறோம்?
கவனம் எங்கு இருக்கிறது?
கேட்கும் விஷயத்தில் நாம் பொறுப்புணர்ச்சியுடன் இருக்கிறோமா?

(Gavin Harrison எழுதிய ‘In the lap of Buddha’ என்ற புத்தகத்திலிருந்து)

ஆண்டியும் நானே அரசனும் நானே!

ஒரு இளவரசன் ஊதாரித்தனமாக இருந்ததினால் அரசர் அவரை நாடு கடத்தி விடுகிறார். இளவரசன் வேறு நாட்டுக்குச் சென்று பிச்சை எடுத்து சாப்பிடுகிறார். தான் ஒரு காலத்தில் இளவரசனாக வாழ்ந்தவன் என்ற நினைப்பையே விட்டு விட்டு, அதை முற்றிலும் மறந்து பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருந்தார்.

அந்த அரசருக்கு வயதாகி உடல் தளர்ந்து விட்டது. மந்திரிகள் எல்லோரும் சேர்ந்து, "அரசே! உங்களுக்கோ வயதாகி விட்டது. இறப்பு நேரிடும் தருணம் நெருங்கி விட்டது. இந்த நாட்டை உங்களுக்கு அடுத்து ஆட்சி நடத்த, நீங்கள் இருக்கும்போதே இளவரசனுக்குப் பட்டம் கட்டியாக வேண்டும்" என்றார்கள்.

அதற்கு அந்த அரசன், "இல்லையில்லை! அவனைக் கூப்பிடக்கூடாது. அவன் போனவன் போனவன்தான்" என்று சொல்கிறார். ஆனால் மக்கள் ஒத்துக் கொள்ளாமல் ங்களுக்கு ஒரு அரசன் வேண்டுமென்றும், இளவரசனை அழைத்துக் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்றும் அடம் பிடிக்கிறார்கள்.

இறுதியில் அரசர் சரி என்று ஒப்புக் கொள்கிறார். அமைச்சர்கள் தேர், யானை என்று படைகளைத் திரட்டிக் கொண்டு ஊர் ஊராகச் சென்று தேடுகிறார்கள். அப்போது ஓரிடத்தில், பிச்சைக்காரர் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். அவரைப் பார்த்த உடனேயே மந்திரி அடையாளம் கண்டுவிட்டார்.

அவரிடம் சென்று, "இளவரசே! என்னைத் தெரிகிறதா? உங்களை அரசர் மீண்டும் அழைத்து வந்து ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க விரும்புகிறார்" என்று சொல்லிக் காலில் விழுந்தார்.

அந்த மந்திரி பிச்சைக்காரரின் காலில் விழுந்து காலைத் தொட்டதுதான் தாமதம்! "அய்யா! தருமம் செய்யுங்கள்!" என்று கேட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரன், "என் ரதம் வந்து விட்டதா? எங்கே?" என்று கேட்டார்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அந்த வினாடி வரை பிச்சைக்காரனாக இருந்தவர், உடனே அரசனாக மாறி விட்டார். தன்னுடைய சுய நிலையைத் திரும்பப் பெற்று விட்டார். அந்த வினாடியே அவரது உடல், மொழி எல்லாம் மாறி விட்டது. அதன் பிறகு அவரை அரசராக மாற்றுவதற்கு ஏதாவது பயிற்சி கொடுக்க வேண்டுமா என்ன?

நீங்கள் எல்லாரும் கடவுள் சக்திதான். எந்த வினாடிப் பொழுதில் நீங்கள் ஒரு அவதாரம் என்பதை உணர்கிறீர்களோ, அதைத்தான் ஞானம் அடைதல் என்று சொல்கிறோம்.

(ஜீவன் முக்தி – பரமஹம்ஸ நித்யானந்தரின் ‘அமுத மொழிகள்’ நூலிலிருந்து)

About The Author

2 Comments

  1. P.பாலகிருஷ்ணன்

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

    தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு.

    என்ற வள்ளுவரின் வாக்கு நினைத்தற் பாலது.

    (பன்னாட்டு அரிமா சங்கத்தில் திருக்குறள் நெறி பரப்பும் மாவட்டத் தலைவர்[2009 – 2010] என்ற நிலையில் என்னால் இயன்றவரை திருக்குறளைப் பரப்பி வருகிறேன். திருக்குறள் நூல் படிகளை இலவயமாக வழங்கி வருகிறேன்.)

Comments are closed.