கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

மலரும் நினைவுகள்…

2007ம் ஆண்டு உலகாயுதா என்ற அமைப்பு ஆக்கபூர்வமான குறிக்கோளுடன் சமூக முன்னேற்றங்களை முதன்மைப்படுத்தி தொடங்கப்பட்டது. தமிழ் சினிமாவிற்கான முதல் செயல்பாடாக கடந்த 2007 ஃபிப்ரவரி மாதம் பைசெல் நிறுவனத்துடன் இணைந்து ‘இன்றைய சினிமா’ என்ற சினிமா தொழில் நுட்பக் கண்காட்சியை சென்னை வர்த்தக வளாகத்தில் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, பேசும் படம் வெளிவந்து 75 ஆண்டுகள் நிறைவானதை ஒட்டி 75 கலைஞர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தது.

தமிழில் பேசும் படம் துவங்கி 2005 ஆம் ஆண்டு வரை 4373 படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் 1954 வரை அரசின் அங்கீகாரம் இத்தொழிலில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை. விருதுகளோ பரிசுகளோ வழங்கி கவுரவிக்கப்படாத அந்த முதுபெரும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது என்று இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தலைமையில் அமைந்த இந்த அமைப்பு முடிவு செய்தது.

அதன் முதற்கட்டம்தான் மார்ச் 8ம் தேதி சென்னை வணிக வளாகத்தில் 1931லிருந்து 35 வரை வெளிவந்த 59 படங்களைத் தேடித் தொகுத்தது. ஆனால், அந்தக் கால கட்டத்தில் வெளிவந்த 59 படங்களில் இரண்டு படங்கள் மட்டுமே தேசிய ஆவணக் காப்பகத்தில் இருந்தன. மற்றவற்றை இன்றும் காணும் வாய்ப்பில்லை. அதனால் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்த மொத்தப் படக் கலைஞர்களுக்கும் பரிசளிப்பது என முடிவு செய்யப்பட்டது. அப்படங்களில் பணியாற்றிய கலைஞர்களில், வாழும் கலைஞர்களுக்கு தமிழ் டாக்கி விருதும், ரூபாய் 5000 ரொக்கப் பரிசும் வழங்க முடிவு செய்யப்பட்டது. காலஞ்சென்ற கலைஞர்களின் வாரிசுகளுக்கு தமிழ்டாக்கி விருதும் தர முடிவு செய்யப்பட்டது.

இதற்கான விழா நடராஜ முதலியார் அரங்கத்தில் சென்னை வணிக வளாகத்தில் மார்ச் 8ம் தேதி மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகை சுகன்யா, இயக்குனர் எஸ்பி முத்துராமன், வசனகர்த்தா ஆரூர்தாஸ், ஜெயம் ரவி, ஜீவா, குமாரி சச்சு, டைரக்டர் பாலசந்தர், ஏவிஎம் சரவணன் எனப் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பாட்டுக்கள் இடையே படம்

பேசும் படங்களில் முதன்முதல் கதாநாயகனாக சீதா கல்யாணம் படத்தில் நடித்த எஸ்.ராஜம் அவர்களும் அவைக்கு வந்திருந்தார். இவர் வீணை எஸ்.பாலசந்தர் அவர்களின் மூத்த சகோதரர். இவரது ஓவியங்கள் ஹவாய் தீவுகளில் இன்றும் இருக்கின்றன. ராஜம் அவர்கள் விருது பெற்று பேசும்பொழுது, அந்தக் காலத்திற்கும் இந்த காலத்திற்கும் திரைத்துறையின் மாற்றம் பற்றிக் குறிப்பிட்டார். அப்போதெல்லாம் வெயில் இருந்தால் மட்டுமே படம் எடுக்கமுடியும். கண்ணாடி மேற்கூரை மூலம் சூரியஓளி உடலில் விழும் பாடல்கள் ஒரு படத்தில் 40, 50 இருக்கும் – அதைப் பாடும்போது வெளிச்சம் போய்விட்டால் அடுத்தநாள் விட்ட இடத்தில் தொடர முடியாது, மறுபடியும் ஆரம்பத்திலிருந்து பாடவேண்டும்! (தனது 90 வயதிலும் சில பாடல்களைப் பாடிக் காண்பித்தார்) காட்டுவழிகளில் முட்களில் நடந்து போகவேண்டும் என்று குறிப்பிட்டார்.

சீதா கல்யாண வைபோகமே

சீதா கல்யாணம் படம் பார்க்க வருபவர்கள் கையில் வெற்றிலை, பாக்கு, பழம், சூடங்களோடு வருவார்கள் என்றும் குறிப்பிட்டார். இப்போது எனக்கு முடி குறைந்திருந்தாலும் அந்தக் காலத்தில் பார்ப்பதற்குக் கொஞ்சம் அழகாகவே இருப்பேன் என்றார். முதல் முதலாகப் பேசும் படத்தில் (காளிதாஸ் படத்தில்1931ம் ஆண்டு) நடித்த டி. பி.ராஜலட்சுமிக்கு வழங்கிய விருதினை அவரது மகள் கமலா மணி அவர்கள் பெற்றுக் கொண்டார். ராஜலட்சுமி நடிகை மட்டுமல்ல, எழுத்தாளர், படத்தயரிப்பாளரும் கூட. கமலாம்பாள் அல்லது சந்திரசேகர் என்ற பெண்கள் சுதந்திரம் பற்றி அவர் எழுதிய நாவல் அந்தக் காலத்திலேயே வெளியிடப்பட்டது. மற்றும் என்.எஸ் கிருஷ்ணன், ஹெச். எம். ரெட்டி (இயக்குனர் – காளிதாஸ்), பாபநாசம் சிவன், சீதாகல்யாணம் படத்தில் நடித்த நடிகை ஜெயலட்சுமி, டி.கே.ஷண்முகம் முதலியோரின் வாரிசுகள் கலைஞர்களின் சார்பில் பரிசுகளைப் பெற்றுக் கொண்டனர். கண்ணதாசனின் மகனான கலைமணி சுப்பு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மகனிடமிருந்து விருது பெற்றுக்கொண்டார்.

எனக்கும் தமிழ்த் திரைக்கும் ஒரே வயசு

விழாவில் பங்கு பெற்ற ஆரூர்தாஸ் தான் பிறந்ததும் தமிழ் பேசும் சினிமா முதலில் வெளிந்ததும் ஒரே ஆண்டில்தான் எனக் குறிப்பிட்டார். மலரும் நினைவுகளில் மூழ்கிய அவர். முதல் தமிழ்ப்பட இயக்குனரான ஹெச். எம். ரெட்டியின் உதவியாளராக இருந்த ஒய். வி. ராவ் பற்றியும் அவர் படத்தில் பணியாற்றியது பற்றியும் குறிப்பிட்டார். ஒய்.வி.ராவ் குணசித்திர நடிகை லட்சுமியின் தந்தை எனக் குறிப்பிட்ட அவர், லட்சுமியையும் அழைத்திருக்கலாம் என்றார். ஜெயம் ரவி பேசும்போது, இப்போது ஹீரோக்கள் என்றால் எப்படியிருக்கவேண்டும் என்று பேசப்படுகையில் ஹீரோ என்றால் யார் என்று முதலில் இலக்கணம் வகுத்ததே ராஜம் அவர்கள்தான் என்றார்.
இந்த மாதிரி பழம்பெரும் கலைஞர்களுக்கு விழா நடத்திப் பெருமை செய்யும் ஜனநாதனை வாழ்த்தினார். ஜீவா பேசும்போது இப்போதெல்லாம் சரித்திரப் படங்களை எடுப்பதில்லை. ஏதாவது டிவிடியைப் பார்க்கச் சொல்கிறார்கள். எனக்கு சரித்திரப் படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆவல் உண்டு என்றார். .

அனைவரும் மெச்சும் சச்சு

எஸ்.பி.முத்துராமன் கலைஞர்களை வாழ்த்திப் பேசி தனது திரை நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். குமாரி சச்சு பேசும்போது தான் குட்டி நடிகையாக பல நடிகைகளுக்கு நடித்ததைப் பற்றி பெருமையாகப் பேசினார். அவ்வையார் படத்தில் கே. பி. சுந்தராம்பாளுக்கு ஜூனியராக பால்ய அவ்வையாராக நடித்ததைப் பற்றி குறிப்பிட்டார்.

நானா செய்தேன்?

பின்னர் பாலசந்தர், ஏவி.எம் சரவணன் அவர்கள் பேசினர். தான் அறிமுகப்படுத்திய புதுமுகங்கள் இன்று உலகநாயகனாகவும் சூப்பர் ஸ்டாராகவும் இருப்பதை பெருமையோடு குறிப்பிடார். ஏவி. எம் சரவணன் அவர்கள் தந்தை முதன் முதலாகத் தயாரித்த அல்லி அர்ஜுனா பற்றியும் தங்கள் நிறுவனம் தொடர்ச்சியாக 75 ஆண்டுகள் திரைப்பட மற்றும் சின்னத்திரையில் ஈடுபட்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டார்.

விழா முடிவில் ஜனநாதன் நன்றி கூறினார்.

உலகாயுதா அமைப்பின் ஒரு அங்கமாக நடைபெற்ற கண்காட்சியில் திரைப்படம் சம்பந்தப்பட்ட ஒலி ஒளி, அனிமேஷன் நிறுவனங்கள் கலந்து கொண்டன. ஃபிலிம் நியூஸ் ஆனந்தனின் அரங்கு திரைப்பட வளர்ச்சியை 1931முதல் இன்றுவரை பட்டியலிட்டது. பல அரிய புகைப்படங்களைக் காண முடிந்தது.

காலையும் மாலையும் கருத்தரங்குகளோடு ஆறு முதல் எட்டாம் தேதி வரை நடந்த இந்தத் திரைத் திருவிழா அடுத்த வருடமும் தொடரும். பழைய கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்த்திப் பரிசுகள் அளிக்கும்.

About The Author

1 Comment

  1. raghunaathan

    உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது

Comments are closed.