கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

பொய் சொல்லப் போறோம்

பொய் என்பது மனிதனின் கூடப் பிறந்த ஒன்று! நான் பொய்யே சொல்வதில்லை என்று யாராவது சொன்னால், அதுதான் மிகப் பெரிய பொய்யாயிருக்கும்.

நமக்குப் பொய் பேச முதலில் கற்றுக்கொடுப்பது நமது அம்மாதான். சின்ன வயதில் அம்மாவை "நான் எப்படி வந்தேன்?" என்று கேட்டால், "அதுவா ஒரு நாள் உம்மாச்சி வானத்திலிருந்து ‘தொப்’புனு எங்கிட்டே போட்டார்" என்று சொல்லுவாள்.

அது தவிர அம்மாக்கள் சொல்லும் பொய்கள் பற்றி கவிஞர் ஞானக்கூத்தன் பட்டியலிடுகிறார்.

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒரு முறைத் தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
அத்தனை பொய்கள் முன்பு
சொன்னநீ எதனால் இன்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்!

இந்தப் பொய்கள்தாம் நம் பள்ளிப் பருவத்திலும், காரியாலயங்களிலும் (எத்தனை முறை கிரிக்கெட் மாட்ச் பார்ப்பதற்காக அத்தையோ பாட்டியோ இறந்து போயிருக்கிறார்கள்?) தொடர்கின்றன.

மனைவி கொடுத்த கடிதத்தை போஸ்ட் செய்ய மறந்து, அவள் கேட்கும்போது, "ஓ! செய்துவிட்டேனே.." என்று எத்தனை முறை பொய் சொல்லி மாட்டிக் கொண்டிருப்போம்?

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் என்பார்கள். கல்யாண புரோக்கர்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பழமொழியின் உண்மைப் பொருள் "ஆயிரம் பேரிடம் போய்ச் சொல்லியாவது கல்யாணம் செய்யலாம்" என்பவர்களும் உண்டு.

வள்ளுவர் கூடப் பொய் சொல்வதனால் யாருக்கும் கஷ்டமில்லாமல் நன்மை உண்டாகுமானால் அது தவறில்லை என்று சொல்கிறார். அவரே "தன் நெஞ்சறிவது பொய்யற்க" என்றும் சொல்கிறார், இந்தப் பொய்யினால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படும் என்று தெரிந்தே பொய் சொல்லக் கூடாது என்ற பொருளில். ஹரிச்சந்திரன் உண்மையே பேசவேண்டும் என்றதனால் பட்ட இன்னல்கள் நமக்குத் தெரியும்

ஒரு பெரிய பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அதுவே உண்மையாகிவிடும் – ஹிட்லர்.

உண்மையையே பேசினால் நீங்கள் எதையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை – மார்க் ட்வெய்ன்

யாருக்குமே ஒரு நல்ல பொய்யராவதற்கு வேண்டிய ஞாபக சக்தி இருப்பதில்லை -ஆப்ரகாம் லிங்கன்

உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி குழந்தை முதலில் பயத்தால் பொய் சொல்கிறது. முதலில் தற்காப்பிற்காகத்தான் பொய் சொல்லப் பிள்ளையார் சுழி போடுகிறோம்.

வீட்டில் கண்ணாடியை உடைத்துவிட்டு, அம்மா அப்பா என்ன சொல்வார்களோ என்ற பயத்தில் "நான் உடைக்கவில்லை" என்று சொல்வதில் ஆரம்பிக்கிறது இந்த வழக்கம். அம்மா அப்பா நம்பினால் அதற்கு தைரியம் வந்து மேலும் மேலும் பொய் சொல்லத் தூண்டுகிறது.

பொதுவாகவே பொய் சொன்னால் வாழ்க்கையில் வெற்றிகள் சுலபமாகக் கிடைக்கின்றன. உண்மை நின்று வெற்றி தரும் என்றாலும் அன்றே வெற்றியைத் தருவது பொய்கள்தான். அதனால் இந்த குறுக்கு வழியை பொதுவாக எல்லோருமே பின்பற்றுகிறோம்.

சில சமயங்களில் அம்மா சொல்லும் பொய்யே குழந்தைக்கு தைரியம் ஊட்டுகிறது. அடுத்த வீட்டு அம்புஜம் காபிப் பொடி கடன் கேட்க வரும்போது, உள்ளே நேற்று வாங்கி வந்த காபிப்பொடியை மறைத்துவிட்டு, ‘காபிப்பொடி இல்லையே’ என்று அம்மா பொய் சொல்லும்போது குழந்தைக்கும் பொய் சொலவதில் தப்பில்லை என்று தோன்றுகிறது.

மொத்தத்தில் தண்டனை, தண்டனையிலிருந்து தப்பிக்க முடிவது, தண்டிப்பவர்களே பொய் சொல்வது என்ற குழப்பமான நிலை குழந்தைகளுக்கு. பொய் சொன்னால் சாதிக்க முடியும் என்று உணரும்போது பொய் சொல்லக் கற்றுக்கொள்கிறது குழந்தை.

ஒரு குழந்தைகள் பள்ளியில் மூன்று, நான்கு வயதுக் குழந்தைகளை வைத்து பொய் சொல்லும் திறனை அறிய ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு குழந்தையாக அழைத்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்து, "உன் முதுகுப்புறம் ஒரு பொம்மை வைத்திருக்கிறேன்.. அதைத் திரும்பிப் பார்க்கக்கூடாது" என்று கூறி அந்தக் குழந்தையைத் தனியாக விட்டுச் சென்றார்கள்.

பின்னர் அந்தக் குழந்தைகளை விசாரித்ததில் 10 சதவிகிதம் பேர் திரும்பிப் பார்க்கவே இல்லை என்றார்கள். 30 சதவிகிதம் திரும்பிப் பார்த்தாலும் பார்க்கவில்லை என்று அடித்துச் சொன்னார்கள். இன்னொரு 30 சதவிகிதம் திரும்பிப் பார்த்ததாக ஒப்புக் கொண்டார்கள். இன்னும் 30 சதவிகிதம் பேர் பதில் சொல்லவே இல்லை – மவுனமாக இருந்தார்கள். பொய் சொன்னவர்களும் உண்மை சொன்னவர்களும் தைரியமாக இருக்க, பதில் சொல்லாதவர்கள் இன்னும் முழுமையாகப் பொய் சொல்லக் கற்றுக் கொள்ளவில்லை என்று உணர்த்தினார்கள்.

இப்படி ஒரு பிரச்னையிலிருந்து தப்பிப்பதற்காக, அல்லது ஆசைப்பட்ட பொருளை அடைவதற்காக என்று பொய் சொல்வதில் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொய்யில் பெரிய வேறுபாடு இல்லை – பொய்யின் விளைவில்தான் இருக்கிறது!

பொய் என்றதும் இரண்டாம் உலகப்போரில் ஒரு பக்கம் ஹிட்லரையும், இன்னொரு பக்கம் உலகத்தையும் ஏமா ற்றிய கொயபெல்ஸ் நினைவுக்கு வருகிறார்.

பொய் சொல்வதற்குப் பல காரணங்கள் உண்டு. அரசியல்வாதிகள், வியாபாரிகள் சுயநலத்திற்காகப் பொய் சொல்கிறார்கள். அன்பிற்காகவும் பிறர் கவனத்தை ஈர்க்கவும் பொய் சொல்பவர்கள் உண்டு. சிலருக்குத் தன்னைப் பிறர் பாராட்டவேண்டும் என்ற ஆசை உண்டு. அதற்காகவே செய்யாததை செய்ததுபோல, மணலைக் கயிறாகத் திரிப்பார்கள். ரீல் விடுவார்கள். சிலர் தாங்கள் செய்யும் தவறை மறைப்பதற்காகப் பொய் சொல்வார்கள்.

பொய் சொல்வதற்கு மனிதனின் பத்திரமற்ற உணர்வுகளே காரணம் எனச் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் பொய் என்பது மனித ரத்தத்தில் ஊறிப்போன ஒரு பழக்கம். முடிந்தவரை நாம் நம் குழந்தைகளை பொய் சொல்லாமலிருக்கப் பழக்க வேண்டும். நானே பொய் சொல்கிறேன், என் பையனை எப்படித் திருத்த முடியும் என்ற மனோபாவம் கூடாது.

ஒரு ஆசிரியர் நானே ஆரம்பகாலத்தில் சரியாகப் படிக்கவில்லை, இவர்களை எப்படிப் படிக்கச் சொல்வேன் என்பது போன்றது அது. முடிந்தவரையில் நம் மக்களை நேர்மையானவர்களாக சமூகத்தில் நம்பகத்தன்மை உள்ளவர்களாக வளர்க்கவேண்டியது நம் கடமை. இவையெல்லாம் நானே எழுதியது என்று பொய் சொல்ல விரும்பவில்லை – பல வலைப்பூக்களிலிருந்து பின்னப்பட்டது.

சற்றே பொய்க்கலாமே – ஸாரி – சிரிக்கலாமே!

ராணுவ அதிகாரியிடம் அந்த ராணுவ வீரன் ஊருக்கு விடுமுறையில் செல்ல வேண்டுமென்று விண்ணப்பிக்க வந்தான்.

"என் மனைவியிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது. அவசியமான காரணங்களால் உடனே வரச் சொல்லி இருக்கிறாள்" என்று கூறி விடுப்பு கேட்டான்.

அந்த அதிகாரி சொன்னார். "ஏன் பொய் சொல்கிறாய். உன் மனைவியிடமிருந்து எனக்கு கடிதம் வந்திருக்கிறது. “என் கணவனை விடுமுறையில் அனுப்ப வேண்டாம். இங்கு வந்தால் தினமும் குடித்துவிட்டு கலாட்டா செய்து மிகவும் என்னை அடித்து துன்புறுத்துவான்" என்று. "அதனால் உன்னை விடுமுறையில் அனுப்பப் போவதில்லை" என்று கண்டிப்பாகக் கூறினார்.

அந்த ராணுவ வீரன் தன் பக்கத்தில் இருந்த நண்பனிடம் சொன்னான், மெதுவான குரலில். "இவர் பொய் சொல்லுவதில் என்னை விட படு கில்லாடியாய் இருக்கிறார். எனக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை".”

About The Author