கண்ணன் பிறந்தான்!

தாழ்வென்றும் உயர்வென்றும் தரம்பிரிக் காமலே
தனக்கிணை யாய்ப்பழகு வான்
தனை நாடி வந்தாலு மவன்பெயர் சொன்னாலும்
தான்முந்தி நிற்கின்றவன்!

வாழ்வுக்கும் சாவுக்கும் வருமிடை நிகழ்வுக்கும்
வலம்புரி நல் லாழியவனே
வந்ததொரு தாய்மடியில் வளர்ந்ததோ ரிடமென்று
வடிவங்கள் பலகாட்டு வான்!

ஏழ்பிறப் புக்குமவன் எமக்கே கதியாவான்
இசைக்குமே புல்லாங்குழல்
எழிலார் தாமரையாள் என்றுமவன் பக்கத்தில்
எல்லோர்க்கும் அருள்செய்பவள்!

ஆழ்வார்கள் அருந்தமிழின் அழகுமலை நாயகன்
ஆண்டாளின் தமிழ்மாலை யாம்
அன்னவன் பிறப்பினை அகிலமே கொண்டாடும்
ஆயர்பா டிக்கண்ணனாம்!

(ஆகஸ்ட் 13, 2009-கிருஷ்ணஜெயந்தி அன்று மினியாபாலிசில் எழுதியது)

About The Author