கண்ணில் தெரியுதொரு தோற்றம் -10

"என்ன அதிசயமா தங்கை மேல பாசம் வழியுது… " அலைபேசியில் விக்ரம் எண்ணைப் பார்த்துவிட்டு எடுத்ததும் கேட்டாள் விஜி.

"அதிசயங்கள் அப்பப்போ நடக்கத்தான் செய்யும், சகோதரி"

"சரி… நேரா விஷயத்துக்கு வாப்பா, தம்பி"

"யமுனாவுக்கு ரொம்ப கோபம் வருமோ?"

எதிர்முனையில் சட்டென்று ஒரு மௌனம் விழுந்தது.

"ஹல்லோ… ஆர் யு தேர்?"

"இருக்கேன்… இருக்கேன். யமுனா எப்படி இருந்தா உனக்கென்ன?" விஜி கறாராய்க் கேட்டாள்.

"ரொம்ப அலட்டிக்காதே… சொல்றதைப் பொறுமையா கேளு. இன்னிக்கு அவளை புக்மால்ல பார்த்தேன். அவ பேரன்ட்ஸைச் சேத்து வைக்க ஹெல்ப் வேணும்னா. பேசிக்கிட்டிருக்கும்போதே திடீர்னு கோபம் வந்து எழுந்து போயிட்டா"

"ம்??"

"மகாபாரதக் கதையா சொல்றேன்? அவ்வளவுதான் நடந்தது"

"அவளுக்குக் கோபம் வர்ற மாதிரி என்ன சொன்னே?"

"ஒண்ணுமே சொல்லைடி. அவளா என்னைப் பாத்து ஏன் சிரிக்கறேன்னு கோவிச்சிட்டுப் போயிட்டா"

"இது… இதுக்குத்தான் உன்னையும் அவளையும் பார்க்கவே விடக்கூடாதுன்னு நினைச்சிருந்தேன். இதப்பாரு, அவ ரொம்ப சென்சிடிவான பொண்ணு. ஏற்கெனவே குழம்பிப் போயிருக்கா. நீயும் சேர்ந்து அவளைக் குழப்பாதே"

"நான் என்னடி பண்ணினேன்?" புரியாமல் கேட்டான் விக்ரம்

"நீ இதுவரைக்கும் ஒண்ணும் பண்ணலைன்னா, இனியும் எதுவும் பண்ணாதே. அவளைக் கண்டா தலை தெறிக்க ஓடிப் போயிரு, அது போதும். என்ன?"

இம்முறை விக்ரம் மௌனமானான். "என்ன… அவளைப் பாக்காம ஐயாவுக்கு இருக்க முடியாதோ?"

"உளறாதே…ஷி நீட்ஸ் ஹெல்ப்"

"அதை நான் பாத்துக்கறேன். நீ தேவையில்லை"

"லுக்… உனக்கு அவளை எப்படி ஹாண்டில் பண்ணணும்னு தெரியாது"

"நீ பெரிய எக்ஸ்பர்ட்டாக்கும்… உதவி கேட்ட பொண்ணை கோபப்படுத்தி அனுப்பி இருக்கே"

"இங்கே பாரு… சும்மா விதண்டாவாதம் பேசாதே. நான் சொன்னா அவ கேப்பா."

"ஹெல்ப் கேக்காம பண்ணக் கூடாதுன்னு நீதானே சொல்வே? அவதான் உன் ஹெல்ப் வேண்டாம்னுதானே போனா… அப்புறம் என்ன அக்கறை?"

வெறுப்பேற்றிக் கொண்டிருந்த தங்கை எதிரிலிருந்திருந்தால் அவள் உச்சி மயிரைப் பற்றி உலுக்கியிருப்பான்.

"யூஸ்லெஸ்… உன்கிட்டே பேசிப் பிரயோஜனமில்லை" என்றான் பல்லை இறுக்கி

"யூஸ்லெஸ்ஸாவே இருந்துட்டுப் போறோம். கீப் ஆஃப் யமுனா" வலியுறுத்திச் சொன்னாள் விஜி.

***

யமுனாவுக்குக் கோபமாகவும் அவமானமாகவும் இருந்தது. கோபம் விக்ரம் மீதா, தன் மீதா அல்லது சுழித்துக் கொண்டோடும் இந்த வாழ்க்கை நதி மீதாவெனச் சரியாகத் தெரியவில்லை. விஜியிடம் விக்ரம் என்ன சொல்லியிருப்பானென்று தெரியாமல் அவளை எதிர்நோக்க மிகுந்த தயக்கமாய் இருந்தது.

மறு நாள் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிடலாமெனத் தோன்றிய எண்ணத்தைப் புறம் தள்ளினாள். ‘என்றைக்கிருந்தாலும் எதிர்நோக்கித்தானே ஆக வேண்டும். அது இன்றாக இருந்து விட்டுப் போகட்டும்’

விரிவுரையாளருக்குப் பின்னால் வகுப்புக்குள் நுழைந்து பாடத்தில் கவனம் செலுத்துவதாய் பாவனை காட்டினாலும் கவனமெல்லாம் விஜியிடமே இருந்தது யமுனாவுக்கு. ‘அவள் அண்ணனை ஏக வசனத்தில் திட்டிவிட்டு வந்தது தெரிந்தால் ஆரத்தி எடுத்தா வரவேற்பாள்? அடித்தால் கூட வாங்கிக் கொண்டுதானாக வேண்டும்’ தன்னைத் தயார் படுத்திக் காத்திருந்தாள் யமுனா.

யமுனாவை வெறுப்பேற்றவென்றே வகுப்பு இடைவேளையில் பக்கத்து டெஸ்க் பாலாவிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்த விஜி தன் தோழியின் தவிப்பினைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள். ஆனாலும் வெகு நேரம் அவளைத் துன்புறுத்த விரும்பாமல், "பாலாகிட்ட பேயோட்டி யாரையாவது தெரியுமான்னு கேட்டுட்டிருந்தேன்" என்று யமுனாவிடம் திரும்பி சீரியஸாய்ச் சொன்னாள் விஜி

"எதுக்கு?"

"உனக்காகத்தாம்மா… உனக்காகத்தான்… இந்த அழகான மூஞ்சி பேயடிச்சதைப் பறை சாற்றுதே…"

தன் தோழி நிறம் மாறவில்லை என்று தெரிந்ததும் நிம்மதி முகத்தில் பரவ, "உன்னை விரட்டறதுக்கு யாருக்குடி சக்தியிருக்கு?" என்று பதிலுக்கு அவளைப் பரிகாசம் செய்தாள் யமுனா.

"ஜோக்ஸ் அபார்ட்… என்னாச்சு?"

கேட்ட விஜியின் முகத்தை யமுனாவால் ஏறிட்டுப் பார்க்கமுடியவில்லை.

"ப்ச்…"

"இதுக்கு உன் டிக்ஷ்னரியில என்ன அர்த்தம்?"

"இருடி… ஒரு ஃபோன் பண்ணணும்" என்று எழுந்து காரிடாருக்குப் போன யமுனாவை மேலும் கட்டாயப்படுத்த விரும்பாத விஜி அதோடு விட்டுவிட்டாள். ஆனால் யமுனாவின் மீதான கரிசனம் அதிகமாகவே செய்திருந்தது.

எண்களை டயல் செய்வதாய் பாவனை பண்ணிக் கொண்டிருந்த யமுனாவுக்குத் தோழியை ஏமாற்றுவது வருத்தமாயிருந்தது. சில நாட்களில் என்னவெல்லாம் மாற்றங்கள்! பெற்றோரைப் பற்றித் தெரிந்து கொண்டதனால்தான் விஜியிடம் நெருக்கம் அதிகரித்தது. இத்தனை நாளும் என்ன பிரச்சினையானாலும் விஜியிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது அதுவும் முடியாததால் ஏதோ தனித்துவிடப்பட்டாற் போல வெறிச்சென்றிருந்தது. விஜியிடம் நடந்ததைச் சொல்லிவிடலாமா என்று ஒரு கணம் தோன்றினாலும் அவள் நட்பினைப் பறிகொடுக்க நேர்ந்துவிடுமோ என்ற பயம் அவளைத் தடுத்தது.

அன்று மாலை மறுபடியும் வேறொரு புத்தகக் கடைக்குச் சென்று வாங்க விரும்பிய புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய போது தன் பெற்றோரைச் சேர்த்து வைக்கும் பெரும் பொறுப்பு அவளை அச்சுறுத்தவே செய்தது.

About The Author