கந்தர்வ வீணைகள் (13)

அந்த அவசர நிலையிலும் தன் தாய்க்குத் தன் முதல் சம்பளத்தில் வாங்கிய புடவையை எடுத்து வைத்துக் கொள்ள மறக்கவில்லை..

அருகருகே அமர்ந்திருந்தாலும்..

ஆயிரம், ஆயிரம் வார்த்தைகள் பேச நினைத்திருந்தாலும் அத்தனையும் மெளனமாகிப் போன உணர்வு..

மனதுள் வியாபித்திருந்த ஒரே உணர்வு..

அம்மா என் தாயே.. நான் தூங்க நீ விழித்திருந்து என் காவல் தெய்வமாய் என்னைக் காப்பாற்றிய என் தாயே.. இப்போது நான் வரும் வரையிலாவது விழித்துரு.. என் தெய்வமே.. எனக்கு ஆசி வழங்கு என் அன்னையே..?

மனதுள் அழுதான்..

அவர்கள் வீட்டை அடைந்தபோது மாலை ஆகியிருந்தது..

ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டார்களாம். இனி பயனில்லை என்று கூறியிருக்கிறார்கள். கோமா ஸ்டேஜ்..
சஞ்சய் அலறியபடியே உள்ளே வந்தான்..

”அம்மா.. மா.. மா..”

அம்மா கண் மூடிப் படுத்திருந்தாள். மரண தேவனின் சாயல்.. பழைய காட்சி ஒன்றும் நினைவுக்கு வந்தது.
இன்றும் அதே கூடத்தில்தான் இவன் சகோதரி படுத்திருந்தாள்.

சுருதி விலகிய சுருதி படுத்திருந்தாள். அப்பா அலறியபடி ஓடோடி வந்தது நினைவுக்கு வந்தது..

அன்றும் அவன் தன்னைக் குற்றவாளியாகத்தான் நினைத்திருந்தான்.

இன்றும்..?

அதே குற்றவுணர்வு..

சுற்றிலும் சிலர் கூடியிருந்தனர். மரண தேவன் பாசக்கயிற்றை வீசும் அந்த நேரத்துக்குக் காத்திருந்தனர்.

”அம்மா.. என்னைப் பாரும்மா.. கண் திறந்து என்னைப் பாரும்மா..

எனக்கு நீதானேயம்மா விடை கொடுத்து அனுப்பினே.. வாழ்க்கையிலே நீ பிரமாதமா முன்னுக்கு வருவேன்னு சொன்னே.. உன் சொந்தக் கால்ல நில்லுன்னு எனக்கு உபசரித்த என் தாயே நான் நின்றுவிட்டேன். ஆனால் அம்மா நீ படுத்துவிட்டாயே..! கண்டிப்பா உன்னைப் பார்க்க வருவேன்ினு சொன்னேன். வந்துட்டேன்.. பரிசுகளுடன் வருவேன்னு சொன்னேன்.. பாரும்மா.. என் முதல் சம்பளத்தில் உனக்குப் புடவை வாங்கிட்டு வந்திருக்கேன்.. அம்மா கண்ணைத் தொறம்மா.. என்னைப் பாரும்மா.. வழியனுப்பி வைத்த மகன் திரும்பி வந்திருக்கேன்.. வரவேற்க நீ வாசலில் வருவேன்னு நினைச்சேன்.. இப்படி ரேழியில் படுத்தியிருக்கியேம்மா..”

சஞ்சய் புலம்பினான்..

ராமசாமி பார்த்துக் கொண்டிருந்தார்.
சஞ்சய் கூறியதில் இருந்து அவருக்குச் சில உண்மைகள் தெரிந்தன.

சஞ்சய் தன் தாயிடம் சொல்லிக் கொண்டுதான் போயிருக்கிறான்.தாயின் ஆசியுடன்தான் வெளியே அடியெடுத்து வைத்திருக்கிறான்.
செலவுக்கு நகையும், பணமும் தந்துதான் வழியனுப்பி வைத்திருக்கிறாள்.

சஞ்சய் பற்றி என்ன கேள்வி கேட்டாலும் அவள் சாதித்த மெளனங்களுக்கு இப்போது செவிட்டில் அறைந்த மாதிரி அர்த்தம் தெரிகிறது.அம்மாவும், பிள்ளையும் ஒன்றாகத்தான் மனதுள் வாழ்ந்திருக்கிறார்கள்.

கடைசியில் இவர் மட்டும்தான் தனியா..?

இவரை ஒதுக்கிவிட்டு அனைவரும் இவரைச் சுற்றிக் கும்மியடித்து விளையாடியிருக்கிறார்கள். இவர் கண்கள் கட்டப்பட்டு தான் ஓரம் கட்டப்பட்டது தெரியாமல் தனக்கு ஏதோ அதிகாரம் இருப்பதாக நினைத்து இவர் புலம்பிய புலம்பல்கள் அத்தனையும் வீண்தானோ..?

அவன் உதவாக்கரை.. அவன் எங்கே உருப்படப் போறான்..

அப்பாவின் வாழ்த்து..

ஆனால் நீ முன்னுக்கு வர வேண்டும் என்பது அம்மாவின் வாழ்த்து..

”பெயிலாயிட்டு வந்து நிக்குற..? வெட்கமா இல்லை.. உனக்கு ஜீன்ஸ் பேண்ட்டுதான் பாக்கி..”

”நீ வாழ்க்கையில் உயர்ந்து தன் சொந்தக் கால்ல நின்று காண்பி.. அப்பத்தான் உன்னை மத்தவங்க மதிப்பாங்க..”

இரண்டு வாக்கியங்களுக்கும்தான் எத்தனை வித்தியாசம்..?

ஒன்று நம்பிக்கை இழக்க வைக்கும் வாக்கியம் என்கிற விஷயம்..

மற்றது தன்னம்பிக்கை தரும் அமுதம்..

இவர் அனைவருக்கும் விஷத்தையே கொடுத்துப் பழக்கப்பட்டு விட்டாரோ..?

ஆனால் தாய் தந்த தாரக மந்திரம்..? அமிர்தம்..!

”சஞ்சு..”

யாரோ கூப்பிட்டார்கள்..

திடுக்கிட்டுத் தன் சுய உணர்வு திரும்பிய ராமசாமி பார்த்தார்..

சஞ்சய் தன் தாயின் தலையை வருடித் தர.. மிக, மிக பலஹீனமான குரலில்..

”சஞ்சு.. சஞ்சு.. வந்துட்டியாப்பா..” என்று வரவேற்பது இவர் மனைவியா?

மரணத்தை நோக்கி அடியெடு்த்து வைத்த அந்த மனைவியா..?

இனி பயனில்லை என்று வீட்டுக்கு எடுத்துப் போங்கள் என்று மருத்துவர்கள் கை விட்ட அதே மனைவியா..?
கண் திறக்காமல் கோமாவில் கிடந்த அதே மனைவியா..?

ராமசாமி பார்த்துக் கொண்டிருந்தார்.

(தொடரும்)

About The Author