கந்தர்வ வீணைகள் (14)

சஞ்சய் ஸ்பூனில் ஹார்லிக்ஸை எடுத்துப் புகட்ட.. அருகில் நின்றிருந்த அந்தப் பெண் அவள் முகத்தைத் துடைத்துவிட..

”மம்மி.. இது யாரு…?” என்று மழலையில் அந்தக் குழந்தை கேட்க..

ஏதோ ஒரு புதிய ஜீவப் பயணமாகத் தோன்றியது..

இவர் மனைவி உயிர்த்தெழுந்துவிட்டாள்.மகனின் குரல் கேட்டுக் கண் திறந்துவிட்டாள்..

பீனிக்ஸ் பறவை போல் சாம்பலிலும் சரித்திரம் படைத்துவிட்டாள். மருத்துவ உலகின் அதிசயமாக மரணத்திலிருந்து மீண்டு விட்டாள். பாசமு்ம், நேசமும், அன்பும், அரவணைப்பும் ஒருவருக்குப் புதிய ரத்தத்தைப் பாய்ச்ச முடியும் என்பதை நிரூபித்துவிட்டாள்..!

ராமசாமி தனக்குள் அழுதார்.

*******

அம்மா கண் திறந்துவிட்டாள்.

ஆச்சரியத்துடன் சஞ்சய் பார்த்துக் கொண்டிருந்தான். இவன் பிரார்த்தனைகள் பலித்து விட்டனவா..?
இவன் வேண்டுகோள்கள் ஏற்கப்பட்டுவிட்டனவா..?

அம்மா..

தீனமாக அலறினான்.

அம்மா பார்த்தாள்.

சஞ்சயைப் பார்த்தாள். அவன் அருகில் நின்று கொண்டிருந்த ப்ரவீணாவைப் பார்த்தாள். குழந்தை ப்ரியாவைப் பார்த்தாள்.

மெலிதாக ஒரு சிரிப்பு.

”சஞ்சய் வந்துவிட்டாயா..?” என்று சைகையால் கேள்வி கேட்டாள்.

அருகில் நின்று கொண்டிருந்த ப்ரவீணாவைப் பார்த்து ”மனைவியா…?” என்று ஜாடை காட்டியபோது இவன் திகைத்தான்.

என்னவென்று இவன் பதில் சொல்லுவான்..?

குழந்தை ப்ரியாவுடன் இவன் குடித்தனம் நடத்திய அழகை அப்பா பார்த்திருக்கிறார். இந்த நிலையில் உண்மையைச் சொன்னால்கூட அப்பாவுக்கு மீண்டும் அவன் மீது கோபம் வரும்..

மரணப் படுக்கையில் இருக்கும் தாயின் முன் பொய் சொன்னான் என்று நினைத்து, நினைத்து இவனுக்கு அவரது ப்ராகரஸ் ரிப்போர்ட்டில் பூஜ்யம்தான் மதிப்பெண் தருவார்.

இருந்தாலும்..

இவன் யோசித்து முடிவெடுப்பதற்குள்..

ப்ரவீணா அம்மாவின் கைகளைப் பிடித்துக் கொண்டிருந்தாள். தன்னையும், தன் குழந்தையையும் ஆசீர்வதிக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தாள்.

ப்ரவீணா.. ப்ரவீணாவா இப்படி..? இப்ப சாவகாசமா வந்திருக்கேன். நீங்க தரப் போற விருந்துக்காக வயித்தை காலியா வைச்சிட்டு வந்திருக்கேன். என்ன தரப் போறீங்க? என்று கேட்டாள்.

இவன் என்ன தந்தான்..?

காலியான வாழ்க்கையைத்தான் ஒவ்வொரு முறை அவள் வரவின்போதும் தட்டில் வைத்துக் காத்திருந்தான்.

அம்மா, குழந்தை ப்ரியாவை முத்தமிட்டாள். ப்ரவீணாவின் கைப்பிடித்து தன் மகனைக் கவனித்துக் கொள் என்று ஜாடை காட்டினாள். தன் கணவனைப் பார்த்துக் கை கூப்பினாள்..

அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளுக்கு மானசீக மன்னிப்பு கேட்டாள்.

அதன் பிறகு..

சஞ்சயைப் பார்த்த கண்கள் பார்த்தபடியிருக்க..

திறந்த கண்களில் மகனின் பிரதிபிம்பத்தைப் பதித்துக் கொண்டவள்.. அவனை வெளியே விட்டுவிடக் கூடாது என்று கண்களை மூடினாள்.

”அம்மா..”

சஞ்சயின் அலறல் சப்தம் அங்கு எதிரொலித்தது..!

(தொடரும்)

About The Author

2 Comments

  1. madhu

    Please stop this mokka story… Y vimala ramani is writing such a meaningless story like this…cant bear this….

  2. Vimala Ramani

    அன்புள்ள மது
    தாங்கள் அனுப்பிய விமர்சனம் படித்தேன்.மிக்க நன்றி
    தொடர்ந்து தங்கள்அன்பான விமர்சனத்தை அனுப்பி வையுங்கள்
    அது வரை இந்த நாவல் தொடரட்டும்….
    அன்புடன்
    விமலா ரமணி

Comments are closed.