கற்களில் என்ன இருக்கிறது..? – ஒரு தேடல் (1)

கல்லா? கதையா..? கற்பனையா…? தேட வேண்டும் என்ற இயற்கை உந்துதலைத் தூண்டியவர் நாச்சியார் கோயில் கருடர். கல்லால் வடிவு பெற்றவர். இவரிடம் என்ன விசேடம்?

திருவிழா நாட்களில் உற்சவராக வெளியே அழைத்து வரும்போது, கோயிலுக்கு வெளியே தூரம் அதிகரிக்க அதிகரிக்க எடை கூடி விடுகிறார். அதாவது முதலில் நான்கு பேரால் தூக்க முடிந்தால் பின்பு 8, 16, 32 என்று அவரைத் தூக்கத் தேவையான ஆட்களின் பலம் அதிகரித்துக் கொண்டே போகிறது.

அறிவியல் அடிப்படையில் இது சாத்தியமா என்று தேட ஆரம்பித்த போது, பகுத்தறிவும் படித்துத் தேடுதலும் பல இருட்டு மூலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டின.

கருடருக்கு உயிருண்டா? அது நிரந்தரமா அல்லது பண்டிகை போன்ற விசேட நாட்களில் மட்டும் வந்து போய் விடுமா? கீழ் நோக்கியே தாக்கும் இயல்புடைய புவி ஈர்ப்பு விசை, கோயிலுக்குள் மட்டும் மேல் நோக்கித் தூக்குகிறதா? கல் விசேடத் தன்மையுடையதா அல்லது இதுவெல்லாம் ஆன்மீகர்கள் இட்டுக் கட்டிக் கொண்டிருக்கும் கதையா என்றெல்லாம் யோசித்துக் குழம்பிப் பின் ஒரு கட்டத்தில் அது மறந்தே போய்விட்டது.

ஒரு நாள் காலையில், செய்தித்தாளில் உச்ச நீதி மன்ற உத்திரவு ஒன்றைப் படிக்க நேர்ந்த போது கல் புராண நினைவுகள் மீண்டும் கிளர்ந்தெழுந்தன. மலைகளில் உள்ள பாறைகளில் வண்ணம் பூசி விளம்பரம் செய்வதைத் தடை செய்திருந்தார்கள் நீதியரசர்கள். காரணம், அவ்வாறு பூசப்படும் வண்ணக் கலவை, பாறைகளினூடே இருக்கும் நுண்துளைகளை அடைத்து விடுவதால்-பாறைத்துகள்களிடையே இருக்க வேண்டிய கட்டிப்பிடிச் சக்தியை வலுவிழக்கச் செய்து, காலப்போக்கில் பாறையைத் தானாகவே மூச்சுத்திணறி நொறுங்கி இறக்க வைத்து விடுமென்ற அறிவியல் வாதத்தை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்திருந்தார்கள்.

வண்ணக் கலவைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? வண்ணக் கலவை இரு துகள்களை இணைத்துப் பிடித்து, இயற்கையாகவே உள்ள கட்டிப் பிடிச் சக்தியோடு கூடி இறுக்கத்தை மேலும் வலுவாக்க வேண்டுமல்லவா? அல்லது, நுண்துளைகளில் நுழைந்து வரும் காற்று, நுண்துளைகளைப் பருக்கச் செய்து, கட்டிப்பிடிச் சக்தியை பலவீனப்படுத்த வேண்டுமல்லவா? இவை இரண்டுமல்லாமல் மாறி நடப்பது கல்லுக்கும் உயிருண்டு என்று காட்டுவது போல உள்ளதே?

மதன் தன்னுடைய "வந்தார்கள் வென்றார்கள்" என்ற கட்டுரைத் தொடரில் ஒரு சிந்திக்கத் தூண்டும் சரித்திர நிகழ்ச்சியை விவரிக்கிறார். அது அவருடைய வர்ணனையிலேயே………

"டிசம்பர் 1025. ஒவ்வொரு நாளும் இருமுறை கடலிலிருந்து ஒரு பெரும் அலை கிளம்பி, முன்னேறி சற்றே தொலைவிலிருக்கும் ஆலயப் படிக்கட்டுகளைத் தொட்டுத் திரும்பும். லட்சக்கணக்கானோர் தினம் வழிபடும் சோமநாதர் ஆலயம். கர்ப்பக்கிரகத்தில் மிதக்கும் சிவலிங்கம் அமைந்த அற்புதம்.

…………… கர்ப்பக்கிரகத்தில் ஒளி வீசிக்கொண்டு அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்த லிங்கத்தைப் பார்த்துப் பிரமித்துப் போனான் கஜனி. பின் ஆச்சரியத்துடன் பக்கத்திலிருந்த வீரனின் ஈட்டியை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஈட்டியை லிங்கத்தைச் சுற்றி நாலாபுரமும் சழற்றிப் பார்த்தான். கஜனியின் கண்களிலுள்ள வியப்பு மெல்ல அகன்று வெறி புகுந்தது.

"பலே..! சாமர்த்தியமாகத்தான் அமைத்திருக்கிறார்கள்..! மேலே கூரையிலும் பக்கவாட்டிலும் உள்ள அந்தக் கற்களை அகற்றித் தள்ளுங்கள்… இது ஏதோ காந்த சக்தியின் வேலை..!" என்று கஜனி ஆணையிட, வீரர்கள் உடனே செயல் பட்டனர். சுற்றிலும் கற்கள் உடைக்கப்பட்டு அகற்றப்பட்டன. லிங்கம் மெள்ள அசைந்தது. பிறகு கீழே இறங்கி இறங்கி.. ‘தொப்’பென்று வீழ்ந்தது.

இந்த நிகழ்ச்சி நடந்தது உண்மைதான் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சி கூற வருவது என்ன.. என்பதைப் பிறகு விவாதிப்போம். இப்போது இதன் தொடர்ச்சியாக இதுபோன்ற வேறொரு செவி வழிக் கதையைப் பார்ப்போம்..

இது இலண்டனுக்கு அருகிலுள்ள ரோல் ரைட் (ROLL RIGHT) கல் சின்னங்கள் பற்றியது. வரையறுக்க முடியாத காலத்தில் இனமறியப்படாதவர்களால் நிறுவப்பட்டதாகக் கருதப்படுபவை இவை.. முன்னொரு காலத்தில் பாலங்கட்ட உதவும் என்று இச்சின்னங்களின் கற்களைத் தனித்தனியாகப் பெயர்த்தெடுத்து, வெகுதூரம் எடுத்துச் சென்று நட்டு வைத்தார்கள். ஏகமாகக் கனத்த ஒவ்வொரு கல்லையும் யானைகள் மற்றும் குதிரைகளின்மூலம் கட்டி இழுத்துச் சென்றிருக்கிறார்கள்.

மாலைப் பொழுதில் நிமிர்த்தி நட்டு வைக்கப்படும் ஒவ்வொரு கல்லும் காலையில் தரையில் விழுந்து கிடக்கும். ஒவ்வொரு முறை நிமிர்த்தி வைக்கும் போதும் இதே நிகழ்ச்சி தொடர்ந்தது. வெறுத்துப் போனவர்கள் ’இது பேயோ பிசாசோ’ என்று மிரண்டு போய், கற்களை எடுத்த இடத்திலேயே வைத்துவிட முடிவு செய்து, அந்த திசை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார்கள். என்ன ஆச்சரியம்? பத்து நபர்களைக் கொண்டு நகர்த்தி வந்த அந்தக் கல்லை இப்போது ஒருவராலேயே திரும்ப வைக்க முடிந்தது.

கல் கருடரின் கதையை ஒத்திருக்கும் இக்கதையைப் பதிவு செய்திருப்பவர் ஒன்றும் சாதாரண ஆளல்ல. Signs of Gods? ,Chariots of the Gods? ,Return to the stars,The gold of the Gods, In search of the Gods, Miracle of the Gods, According to the Evidence போன்ற வரலாற்று ஆராய்ச்சிக் குவியல்களைப் படைத்த சுவிஸ் நாட்டு எழுத்தாளர் எரிக்வான் டானிக்கன் என்பவர்தான் இந்தப் படைப்பின் ரகசியத்தையும் வெளிக்கொணர்ந்து உள்ளார்.

(தொடரும்)

About The Author

5 Comments

  1. P.Balakrishnan

    கல், மண், கனிமங்கள் பற்றிய ஆராய்ச்சிக்குரிய ஜியாலஜி” என்ற பட்டப் படிப்பு இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.”

  2. Rishi

    பாலகிருஷ்ணன் சார்,
    ஜியாலஜி – சிவில் பொறியியல் துறையில் ஒரு பாடமாக வருகிறது. கல், மண் மற்றும் அது தொடர்பான அனைத்து பண்புகளையும் பற்றி அதில் அலசப்படுகிறது. தனி பட்டப்படிப்பு இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.

  3. Dr. S. Subramanian

    In the US you can major in geology–studying rock structure, soil erosion, reclamation, and mining. The emphasis, however, is on minerals, petroleum, and utilization of the minerals and drilling for oil.

  4. Jo

    ஆச்சரியமாவும், அற்புதமாவும் இருக்கு. வரும் வாரங்களை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்.

Comments are closed.