கற்களில் என்ன இருக்கிறது? -ஒரு தேடல்(2)

வெளிக்கிரக மனிதர்களே பிற்காலத்தில் நம்மவர்களால் கடவுளர்களாக வர்ணம் பூசப்பட்டார்கள் என்ற கருத்தை எரிக்வான் தன்னுடைய Path ways to the Gods என்ற புத்தகத்தில் முன்வைத்துள்ளார்.

சாதாரண கல்லுக்குள்ளும் மறைந்திருக்கும் ஒரு அனுமாஷ்ய சக்தியைப் பற்றிப் புராதன மற்றும் நடப்பு உதாரணங்களுடன் விவாதிக்கிறார் எரிக்வான். முதலாவதாக பைபிள். கல்லைத் தலையணையாகக் கொண்டு உறங்கிய ஜேகோபு, கல் மூலம் ஆண்டவர் தமக்குச் செய்தியளித்ததாகக் கூறுகிறார்.(Genesis 28.12. et seq). அந்தக் கல்லைத் தூண் போல நட்டு எண்ணையிட்டு வழிபட்டதாக விவிலியம் கூறுகிறது (Genesis 28.16 et seq)

“நம்புங்கள்.. இக்கல்லே நமக்கு எதிராகச் சாட்சி சொல்லும். நம் தவறுகளை ஆண்டவரிடம் எடுத்துக் காட்டும். Be hold, this stone shall be a witness against us – for it has heard all. The words of the Lord which he spoke to us, therefore it shall be a witness against you (Jesua 24,26 et seq)” என்று
உரத்துக் கூறுகிறார் ஜேகோபு.

இரண்டு, மூன்றாவதாகக் கிரேக்கப் புராணக் கதைகள்.

சைபெல்(CYBELLE) என்கிற பூமித்தாய், தன்னுடைய கிரேக்கக் குழந்தைகளுக்கு, பேசும் கற்களின் மூலம் எதிர்காலத்தைக் கணித்துச் சொன்னதாகவும், அதை சிரியன் கடற்கரையிலிருந்த சக தேவதை LAO DICAEA அதே போன்று அமைப்புள்ள வேறொரு கல் மூலம் கேட்டு சிரியர்களுக்குச் சொன்னதாக ஒரு கதை உண்டு.

டெல்பி நகரில் PYTHIA என்ற பெண், முட்டை வடிவக் கல்லை முகர்ந்து பார்த்து, நடந்தது மற்றும் நடக்கப் போகும் எதிர்கால நிகழ்ச்சிகளைச் சொல்லி வந்ததாக இன்னொரு கதை உண்டு.
இதுவல்லாமல், MOHAMMED-IBN-AL-CHATIB தன்னுடைய BOOK OF IDOLS என்ற பதிவுப் புத்தகத்தில் தெரிவித்திருந்த அதிசயக் கற்களைப் பற்றியும் எரிக்வான் எழுதுகிறார்.

ஆண்டவனால் மனிதனுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட காஃபா என்றும், HAJAR-AL-ASWARD என்றும் தொழப்படும் மெக்காவில் உள்ள கறுப்புக் கல்லின் தென் கிழக்குச் சுவற்றிலுள்ள மூலையில் 1-12 மீட்டர் உயரத்தில் இந்தக் கற்கள் புதைக்கப்பட்டுள்ளன.

தன்னுடைய வாழ்நாளில் ஒரு முறையேனும் காஃபாவைத் தொட்டுத் தொழவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லீமின் லட்சியமாகும். இந்த லட்சியம் காலம்காலமாக உள்ள ஒரு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

தொடப்படும் காஃபா, தொடுபவருடைய உணர்வுகளை ஆண்டவரிடம் எடுத்துச்சென்று பதிவு செய்துவிட்டு, ஆண்டவருடைய ஆசிகளைத் தொடுபவர்க்கு எடுத்து வந்து கொடுப்பதாக நம்பிக்கை.

மேற்கூறிய கதைகளும் நம்பிக்கைகளும் தெரிவிக்க முயல்வது என்ன?

கல் பேசுமா? கல் கேட்குமா..? அப்படியென்றால் கல்லுக்கு உயிருண்டா? என்பது போன்ற வினாக்களுடன் எரிக்வான் ஆராய்ச்சியைத் தொடர்ந்த இடம், தென் பசிபிக் தீவுகளில் உள்ள கிரிபால்டி தீவு.

50,000 மக்கள் தொகையுடன் வாழ்ந்த பழங்கதையை மறந்து புகை நிழலில் வாழ்ந்து கொண்டிருக்கும இத்தீவின் பல பழங்கால அதிசயங்களில் ஒன்று -“மரணவெளி” என்று உள்ளூர்வாசிகளால் அழைக்கப்படும், 14 மீட்டர் விட்டமுள்ள வெட்ட வெளியாகும்.

இந்த இடம் சுற்றிலும் பசுமையான தாவரங்களால் சூழப்பட்டிருந்தாலும், இந்த இடத்துக்குள் மட்டும் எந்தத் தாவரமும் உயிர் தழைக்க முடியவில்லை. இதை நோக்கி இடுப்பை வளைத்து வளரப் பார்த்த மரங்களும் ,பேயைக் கண்ட மனிதனைப் போல, முதுகை வளைத்துக் கொண்டு எதிர்த்திசை முகம் பார்க்க அத்திசை நோக்கியே கரம் நீட்டிக் கொண்டிருந்தன.

உள்ளூர்ப் பெரியவர்கள் “இது ஆவிகளின் வேலை” என்றார்கள். வட்டத்தினுள் 5.1 மீட்டர் பக்க நீளமுள்ள சதுரத்தின் மூலைகளில் மற்றும் பக்கங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், 2.6 மீட்டர் உயரமும் 1.44 மீட்டர் அகலமுமுள்ள கல் சின்னங்களின் அமைப்பு, ஆவிகளின் பேச்சு மேடை என்றார்கள்.

வட்டத்தினுள் நுழைந்து பேச்சுக்கு இடையூறு செய்து அடிபட்டு இறந்தவர்களின் கணக்குச் சொன்னார்கள். ஒட்டுக் கேட்பது போல மேலே பறந்து இறந்து விழுந்த பறவைகளின் எண்ணிக்கையைச் சொல்லி மாய்ந்தார்கள். எரிக்வான் தன்னுடைய தேடுதலைத் தொடர்கிறார்.

அவர் தன்னுடைய ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட அனுமானங்களை அடுத்த வாரம் காணலாம்.

(தொடரும்)

About The Author