கல்யாணமாம் கல்யாணம் (2)

ஆளுக்கொரு மோதிரமாய்
அச்சாரம் அரங்கேறும்
மூளும்பகை வந்தாலும்
மாறாது வாக்குத்தரம்

முதல்நாள் மருதாணி
முகங்கள் மத்தாப்பு
பதமாய் அரைத்தெடுத்த
பச்சைஇலைத் தேனமுதை

இதமாய்க் கைகளிலே
இடுவார் இருவருக்கும்
உதடுகள் ஊற்றெடுக்க
ஊட்டுவார் சர்க்கரையை

மணநாள் மலருகையில்
மாப்பிளை ஊர்வலந்தான்
குணமகள் வீடுநோக்கி
மணமகன் செல்லுகையில்

அனைவரும் வாழ்த்திடுவர்
அகங்களில் பூத்திடுவர்
புதுமணப் பெண்ணவளோ
புரையேறித் சிரித்திடுவாள்

வட்ட நிலவெடுத்து
வடுக்கள் அகற்றிவிட்டு
இட்ட மேடைதனில்
இளமுகில் பாய்போட்டு

மொட்டு மல்லிமலர்
மொத்தமாய் அள்ளிவந்து
கொட்டி அலங்கரித்தக்
குளுகுளுப் பந்தலிலே

சுற்றிலும் பெரியவர்கள்
சொந்தங்கள் நண்பர்கள்
சிற்றோடை சலசலப்பு
செவியோரம் கூத்தாட

‘அன்புடன் இதயம்’ மின்னூலிலிருந்து
To buy this EBook, Please click here

About The Author

1 Comment

  1. சோமா

    நம் ஊர் திருமணங்கள்….வர்ணனைகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை புஹாரியைப் போன்று. ஜாலம் செய்திருக்கிறார்..ஆஹா

Comments are closed.