கழனி (1)

மூலம் : சாம்ராம் சிங் (தாய்லாந்து)

பச்சைப் பசேல் வயல்களைப் பார்க்கிறபோதெல்லாம் எல்லாருக்கும் ஒரு சிலுசிலுப்பும் ஒத்திசைவும் புத்துணர்ச்சியும் கிளம்புகிறது. இன்னுஞ் சிலாட்களுக்கு கதிர்முற்றி நெல்பிடிக்கிறவரை, அல்லது பிற துட்டுப்பயிர்கள் விளைந்து திரண்டு அறுவடையாகிறவரை பொறுமையாய்க் காத்திருக்க ஏலாது. நல்ல மகசூல் அல்லது ஒண்ணுஞ் சுகமில்லை, எதைப்பத்தியும் அவர்கள் கவலைப்படார். அட விளைஞ்சா என்ன விளையாட்டியும் என்ன, சட்டை பண்ணார். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல… அந்தத் தரம்!

அறுத்துக் கிறுத்து நிலம் திரும்பவும் மொட்டையானதும், எதுக்கும் லாயக் படாது எனத் தோற்றங் காட்டும் அந்த நிலம், பொதுச்சொத்து ஆகிவிடுகிறது. யார் வேணா அப்ப உள்ள இறங்கி பிராணி தேடலாம், செடி பறிக்கலாம்… முதலாளிக்கு இப்ப அதால் இடைஞ்சல் ஏதுங் கிடையாது. வயல்வளைகளில் பல்லிகள், உடும்புகள், தவளைகள், தேரைகள், எலிகள், மீன்கள், வெட்டுக்கிளி மற்றும் வண்டினங்களை அவர்கள் பிடித்துச் சமைத்து சப்புக்கொட்டித் தின்றார்கள். தவிர பல கீரைகள், காய்கறிச் செடிகள் காலி வயல்களில் மானாவாரியாய் முளைத்தன. இதைப் பறிக்க, பிடிக்க என்று வயல் சொந்தக்காரன் என்றோ குத்தகைக்காரன் என்றோ தனியே யாரும் உரிமைகொண்டாடுவது இல்லை. யாரும் எடுத்துக்கிறலாம்.

சம்சாரிகள் வயலை உழ ஆரம்பிக்கிறதுக்குச் சிறிது முன்னால், மழைக்காலத்தில், இளையபட்டாளம் பட்டணத்தின் வேலைகளில் ஆசுவாசப்பட்டு ஊர் திரும்புமுன்னால், முன் எப்போதையும் விட நம்ம ஆள் ‘காம்’ வயல்களில் நிறைய மீன்கள் பிடித்து நிறைய விற்று நிறையத் துட்டு சேர்த்தான். தன் சம்சாரம் ‘பா பாங்’குடன் ‘லுங் காம்’ ஒரு சாமான் வாங்கிப் போட்டான். தன் ஆயுசில் ரொம்பக்காலம் ஆசைப்பட்டிருந்த சாமான். அத்தியாவசியப் பொருள்தான். நினைச்சி நினைச்சி அயர்ந்துபோய் சர்றா, நமக்குக் கொடுப்பினை இல்லைபோல என கைவிட்ட சாமான்.

ஒரு ‘மிதா’ பெட்ரோமாக்ஸ்!

எல்லா மழைக்காலத்திலும் அவன் ஏங்கினான் அதற்கு. ஒரு விளக்கு இருந்தால் மத்த எந்தக் கொம்பனையும் சும்பனையுங் காட்டிலும் சாஸ்தி மீன் பிடிப்பேன்! காடுகரைகளில் மீன்பிடிக்கிறபோது விளக்கு இருப்பது உத்தமம். தண்ணில அந்த வெளிச்சம் சிதற, கையில் ஒரு வலைப் பை. ராத்தூக்கம் தூங்கிட்டிருக்கிற மீனை அலாக்கா அள்ளிறலாம். அதுவரை தகரச்சிம்னி விளக்குதான் வெச்சிருந்தான். மங்கலாய் வெளிச்சம் அடிக்கும் அது. வயசாயிட்டது, அவன் கண்ணே கொஞ்சம் தடுமாத்தம்தான். வாலிபப்பையன்கள் மிதா விளக்கு வெச்சி, அபாரமாய் மீன் அள்ளிக்கொண்டு போனபோது, அவன் எப்படி அவர்களோடு போட்டிபோட முடியும்?

புத்தம் புது மிதா விளக்கு, வாங்கியாச்! ஆசையா அதைத் தொட்டு, தடவி, துடைத்து, மெருகேற்றிக் கொண்டிருந்தபோது பக்கத்து ஆட்களுக்கு ஒரே பொறாமை! சீனாக்காரன் மாங்-கிடமிருந்து சுமார் 300 பாத் (துட்டு) கொடுத்து வாங்கி வந்திருந்தான். ஒரிஜினல் மிதா அல்ல அது, அதைப்போல ஒரு தரம், என்றாலும் எல்லாரும், அந்தச் சீனாக்காரன் உட்பட அதை மிதா விளக்கு என்றே சொன்னார்கள்.

புது விளக்கையிட்டு அவனுக்கு ஒரே எதிர்பார்ப்புகள், கனவுகள். பெண்டாட்டி தாளமாட்டாமல் அவனை உலுக்கி, போரும்யா, போய் வலைகட்டிட்டு வந்தீங்களே மீன் எதும் சிக்கிருக்கான்னு பாரும் போம், என்று முதுகில் விசைகொடுத்து அனுப்பி வைத்தாள்.

ராச்சாப்பாடு முடிஞ்சி கொள்ளைச் சமயம் ஆயாச்சி. பெரிய பையன் தயெங், அந்த வருஷம் அவன் நாலாவது உயர்வகுப்பு போகிறான், அவனையும் அப்பங்காரனோட மீன்பிடிக்க அனுப்பி வைத்தாள் அவள். மின்னாடியே பலவாட்டி அவன் அப்பாவுடன் கூடப்போகக் கெஞ்சிக்கேட்டும் அவள் அனுப்பவில்லை. சின்ன சிம்னி, ரெண்டுபேர் ஒண்ணா மீன்பிடிக்க வெளிச்சம் பத்தாது. அப்பனும் ஆத்தாளும் ஒரேமாதிரிச் சொல்லிவிட்டார்கள்.

சட்டை கிட்டை போட்டு, பெட்ரோமாக்ஸைக் கொளுத்திக் கிளுத்தி கிளம்பினார்கள் கெளுத்தி பிடிக்க. வயல்களில் பாதி உழவு முடிஞ்சாப் போலிருந்தது. தாவரத் தாள் எதுவும் இல்லை, ஆக மீனைப் பார்க்க சுலபம். வயல்வெளிக்குப் போனால், அங்க தூரதூரத்துக்கும் கண்ணு எட்டுமட்டும் அங்கங்க மினுங்கல்கள், கீழ்த்தண்ணியில் அதன் பிம்பம் விழும் ரெட்டை மினுங்கல்!

பீச்சாங்கையில் விளக்கு, சோத்துக்கையில் வலைப் பை. லுங் காம் இடுப்பில் மீன்பிடிச்சிப் போட்டுக்கொள்ள என்று பெத்தம்பெரிய கூடை. கரண்டைக்கால் ஆழம், கெண்டைகள் சிக்குமா. உஷாரா எட்டு வெச்சு நடந்தான். தயெங், அவன் பீச்சாங்கையில் ஒரு மூங்கில்கூடை, வலதுகையில் முழங்கை நீளத்தில் பட்டாக்கத்தி. ஐயாவுக்கு இடப்புறமாய் அவன். அதே சுதாரிப்பு.

தண்ணியைப் பார்க்க நிலைத்த பார்வை. சுத்திவர தவளையும் தேரையுமான இரைச்சல், அவர்கள் காதில் எதுவுமே விழவில்லை. மீனைத் தின்னும் பாம்புகள் டஜன் கணக்கில் தலையை மேலேதூக்கி அசையாது தண்ணியில் நின்றன. வன்ட்டான்டா நமக்குப் போட்டியா, என அவை அவர்களையும், அவர்கள் அவைகளையும் வெறித்துப் பார்த்தார்கள்.

"தயெங், ஈலுக்கோ, முள்ளுமீனுக்கோ அந்தக் கூடை தோதுப்படாது. நழுவிரும். அதுங்களை உன் கத்தியால திணறடிக்கணும். அத்தோட உச்சி மண்டைல உன்னால முடிஞ்ச பலத்தோட ஒற்றப் போடு. அகலப்பக்கம் இல்ல, ஒடுங்கிய கூர்மைப்பக்கம். தண்ணியக் கிழிச்சி உள்ள இறக்கு. பாரு, செஞ்சி காட்டறேன்…"

கட்டைவிரல் பருமனின் ஒரு ஈல், செவத்த உடம்புடன் அப்படியே தண்ணியில் அசையாமல் கொள்ளாமல், ஏற்கனவே செத்துட்டாப்ல கிடந்தது. அதைக் கழுத்தைப் பார்க்க கத்தியால் ஒரே குத்து குத்தி சகதியில் ஒரே அமுக். அது துள்ளித் துடிக்கிறதில் தண்ணி கலங்குகிறது. மீண்டும் தெளியுமுன்னால் அந்த மீன் பிடிக்கப்பட்டு பிள்ளையின் கூடைக்குள் பொத்தென்று விழுகிறது.

(அடுத்த இதழில் முடியும்)

About The Author