கவின் குறு நூறு (1-3)

1

கலைத்தெறிகிறான் கவின்:
காணாமல் போகின்றன பல;
கலைத்தெறிகிறான் கவின்:
காணாமல்போன பல கிடைக்கின்றன;
கலைத்தெறிகிறான் என்னைக் கவின்:
காணாமற்போவேனோ? கிடைப்பேனோ?

2

பாடும் கவினுக்கு ஏற்பப்
பண்கள் தம்மைத்
திருத்திக் கொள்கின்றன;
தப்பாக அவன் பாடுவான்
என்பதை ஒப்புக்கொள்வதில்லை அவை.

3

அம்மிக் கல்லில்
தேங்காய் உடைத்தாள் அம்மா
‘அம்மா! அதுக்கு வலிக்காதா’
என்றான் கவின்;
‘வலிக்காது’ என்றாள் அம்மா.
தேங்காய் தண்ணீர் கொட்டியது.
‘பாரம்மா அது எப்படி அழுகிறது’
என்றான் பரிதாபமாக.

About The Author