காணும் பொங்கல்

அத்தை வீடு அக்காள் வீடு
மச்சான் வீடு மாமன் வீடு
பொண்ணு கொடுத்தவன்
பொண்ணு எடுத்தவன்
அத்தன சாதி சனமும்
ஒன்னு கூடும் பொங்கல்.

வரப்புச் சண்ட வாய்க்காச் சண்ட
கிரகப் பிரவேசம் மொட்டை
காதுகுத்து சடங்கு
கல்யாணம் சீமந்தம்
கருமாதி இன்னவீட்டு
விசேஷத்தில் பரிமாறிக்
கொண்ட வடைபாயாசச்
சண்டைகளைப் பேசித்
தீர்க்கும் பொங்கல்.

மதிலோடும் தூண்மரத்தோடும்
பேசிக் கழிக்கும் வீட்டுப்
பெருசுகளின் பொழுதை
நிறுத்தி அவர்களுக்கு
நாற்காலி மரியாதை
கிடைக்கச் செய்யும்
வருட ஒற்றைப் பொங்கல்.

சிறார் சிறாரோடும்
இளையர் இளையரோடும்
மூத்தோர் மூத்தோரோடும்
பேசிப் பேசிச் சலிக்காத
கிராமத்துக் கதைகள்
பொங்கி வழியும் பொங்கல்.

கிராமத்தான் ஒத்துமையை
ஒரக்கச் சொல்லி சொல்லி
கருப்பனுக்குச் செஞ்ச
சத்தியத்தில மழை தண்ணிய
எதிர்பார்த்துக் காத்திருக்கும்
மனசுப் பொங்கல் – இந்த
மனுசப் பொங்கல்.

About The Author