காமாட்சிபுரம்

மொத்த கிராமமும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

ஊர்ச் சாவடியில் எல்லாரும் கூடியிருந்தார்கள். ண்கள் பெண்கள் சிறுபிள்ளைகள் எல்லாரும் கூடியிருந்தார்கள்.

யார் யாருக்கு என்னென்ன புதுப்பெயர் என்கிற பட்டியல் மாரியப்பனிடம் இருந்தது. ஒவ்வொருத்தராய்க் கூப்பிட்டு, அவரவருக்குரிய புதுப்பெயரை மாரியப்பன் வாசிக்க வாசிக்க, அங்கே ஒரு கேலியும் கிண்டலும் சிரிப்பாணியுமா யிருந்தது.

அந்தக் குதூகலத்தைக் குலைக்கிற மாதிரி ரெண்டு அந்நியர்கள் அங்கே பிரசன்னமானார்கள். கூடியிருந்த காமாட்சிபுரத்துக்காரர்கள் எல்லாரும் நிசப்தமாகி அந்த அந்நியர்கள் மேல் பார்வைகளைப் பதித்தார்கள், ஆச்சர்யத்துடனும், லேசான கலவரத்துடனும்.

யாருக்கும் பேச்சு வரவில்லை.

அந்த ரெண்டுபேரில் ஒருவன் தான் நிசப்தத்தைக் கலைத்தான். "யார்ல இங்க தலைவன்?"

"தலைவர்னு யாரும் இல்லிங்க சாமி, எல்லாரும் இங்ஙன ஒண்ணுதா." தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாரியப்பன் பதில் சொன்னான்.

"எசக்கிமுத்து, சின்னராசுன்னு ரெண்டு பயபுள்ள இருக்காம்ல, எங்க அவனுவள?"

"டவுனுக்குப் போயிருக்காவ சாமி, இப்ப வந்துருவாவ."

"நீங்க எல்லாரும் மதம் மாறப் போறீகளாம்ல, எல்லாம் அந்த ரெண்டு பயலுவ வேலதானா?"

"இல்லீங்க சாமி, நாங்க எல்லாருமா சேந்து பேசித்தான் முடிவெடுத்தோம்."

"ஏன், ஒங்களுக்கெல்லாம் என்ன கேடு வந்துச்சு? என்னத்துக்கு அப்படி ஒரு முடிவெடுத்தீக?"

"ஒண்ணுமில்ல சாமி, செறட்டயில காப்பித்தண்ணி குடிச்சிட்டுக் கெடக்கோமே, மத்தவுகளப்போல நாமளும் கோப்பையில காப்பி குடிச்சா என்னன்னு ஒரு ஆச தான்."

"ஒம்பேர் என்னல தம்பி."

"ஐயோ, சாமி வாயால தம்பின்னு கூப்ட்டுட்டீயளே, மேலெல்லாம் புல்லரிக்கிது சாமி."

"பேரக் கேட்டாச் சொல்லுல."

"மாரியப்பன் சாமி."

"ஏல மாரியப்பா, ரொம்பத் தெனாவெட்டாப் பேசுதிய என்னல?"

"டவுனுக்கு ரெண்டு பயலுவ போயிருக்கானுவளே, அவனுவ வந்தானுவன்னா இன்னும் தெனாவட்டாப் பேசுவானுவ சாமியோவ்."

"நக்கலால பண்ணுத? செவுட்ல ஒண்ணு வுட்டேன்னா எல்லாப் பல்லும் களண்டு விழுந்துரும்."

"ஐயோ சாமி, அவனத் தொட்டு அடிச்சிறாதிய, தீட்டாயிரும். அடிக்கணும்னாச் சொல்லுங்க. பள்ளிக்கோடத் துலயிருந்து பெரம்பு எடுத்துட்டு வாறேன்." எலிமென்ட்டரி ஸ்கூல் வாத்தியார் சொன்னது திரும்பவும் எல்லாரிடமும் சிரிப்பை வரவழைத்தது. அந்த ரெண்டு அந்நியர்களைத் தவிர.

அந்த ரெண்டு பேரும் கடுகடுவென்று ஆனார்கள்.

"எல்லாப் பயலும் திமிர்ப் புடிச்சி அலையுதீக. கண்ட கண்ட பயல்களையெல்லாம் ஊருக்குள்ள விட்டிருக்கீக. அவனுங்க வந்து வயக்காட்டு சோலியப்பாத்துக்கிட்டு நல்லாயிருந்த பயபுள்ள மனசையெல்லாம் கெடுத்துப் போட்டுப் போயிருக்கானுவ."

சிரிப்பு மங்கி அங்கே திரும்பவும் மௌனம் படர்ந்தது. அதை விலக்கிக் கொண்டு மாடசாமிப் பெரியவர் பேசினார்.

"இங்ஙன யாரும் வெளியாட்க வரலீங்க சாமி. நாங்க தான் அவியளத் தேடிட்டுத் திருநவேலி சங்சனுக்குப் போனோம். நீங்க மவராசமார் எங்களக் கோவிலுக்குப் பக்கத்துலயே சேக்க மாட்டீய. ஆனா, அவிய கோயிலுக்குள்ள எங்களக் காலக்களுவிட்டு வரச் சொல்லிக் கூப்ட்டாவ. அவியளுக்குச் சமமா பாயில ஒக்காரவச்சுப் பேசுனாவ. அவியளும் நாங்களும் ஒரே மாறி கண்ணாடிக் கிளாஸ்ல சாயா குடிச்சோம். சடங்கெல்லாம் முடிஞ்சபெறவு அவிய கோவிலுக்குள்ள அவியளோட தோள்ப்பட்டயோட தோள்ப்பட்ட ஒரசிக்கிட்டு நின்னு நாங்களும் சாமி கும்புடாலாம்னாவ."

"தோள்ப்பட்டய ஒரசிக்கிட்டு சாமி கும்புடலாம்னு சொன்னாவளாக்கும்? சொல்லுவானுவல்ல, சொல்லுவானுவ. சொன்னவனும் கம்பியெண்ணப் போறான், நீங்களும் ஒருவழியாயிரப்போறீக. மதமாற்றத் தடைச் சட்டம்னு ஒண்ணு வந்திருக்கு, தெரியுமால?"

அந்நியன் ஆவேசமாய்ப் பேசியதற்கு, அவன் தோளுக்குப் பின்புறமிருந்து ஒரு மறுப்புக்குரல் வந்தது.

"ஐயா, ஒரு திருத்தம்."

குரல் வந்த திசையை எல்லாக் கண்களும் மொய்த்தன. எசக்கிமுத்துவும் சின்னராசும் நின்றிருந்தார்கள். எசக்கிமுத்து தொடர்ந்து பேசினான்.

"ஐயா, அது மதமாற்றத் தடைச்சட்டம் இல்லீங்க. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டமுங்க. இங்ஙன எங்கள யாரும் கட்டாயப்படுத்தி மதம் மாத்தலீங்க. நாங்களா இஷ்டப்பட்டுத்தான் போறோம். மேல் சாதிக் கொடுமையால மனசொடிஞ்சு போறோம். சுதந்திரத்தத் தேடிப் போறோம். மரியாதையத் தேடிப் போறோம். மனசார விரும்பிப் போறோம். மனுசனா வாழப் போறோம்."

"போவீக போவீக" என்று முஷ்டியை மடக்கினான் அந்நியன்.

"அது கட்டாயச் சட்டமோ வெறுஞ்சட்டமோ, சட்டம் எங்க கையில. அத எப்ப தட்டிவிடணும், எப்படித் தட்டிவிடணும்னு எங்களுக்குத் தெரியும். ஒரு பயலும் தப்பிக்க முடியாது. தொப்பி வச்சவன் ஒரு பய இனி இந்த ஊர்ப்பக்கம் தல காட்டப்படாது. ஒங்களயெல்லாம் எப்படி வழிக்கிக் கொண்டுட்டு வாறதுன்னு தெரியும்ல. இத பாருங்கல, இன்னிக்கி ஞாயித்துக் கெழம. நாளக்கழிச்சி செவ்வாய்க் கெழம காலைல பத்துமணிக்கி நாங்க திரும்பவும் வருவோம். எல்லாப் பயலும் பழைய படிக்கி ஒழுங்கா உண்டான சோலியப் பாத்துக்கிட்டுக் கெடக்கணும். மாறி, எவனாச்சும் மதம் மாறப் போறோம், மயித்தப் புடுங்கப் போறோம்னு வாயத் தொறந்தியளோ, தொலச்சிப்புடுவோம் தொலைச்சி."

எச்சரிக்கை விட்டுவிட்டு அகன்றார்கள் அந்நியர்கள்.

செவ்வாய்க்கிழமை வந்தது.

ஊர்ச்சாவடியில் கிராமம் திரண்டிருந்தது. சொன்ன மாதிரியே பத்து மணி சுமாருக்கு அந்நியர்கள் ரெண்டு பேரும் வந்தார்கள்.

ரெண்டு பேர் தனியாக வரவில்லை. பத்துப் பன்னிரெண்டு பேர் அடங்கிய ஒரு தொண்டர் படையோடு வந்தார்கள்.

ஊர்க்கூட்டத்தில், எசக்கிமுத்துவும் சின்னராசும் துண்டாய்த் தெரிந்தார்கள்.

அவர்களை நோக்கி அந்நியன் கேள்வியை விட்டான். "என்னல தலைவங்களா, என்ன முடிவு பண்ணீக? திருந்திட்டீகளா, இல்ல நாங்க திருத்தணுமா?"

"நாங்களே திருந்திட்டோம் தலைவா, ஒங்களுக்கு செரமமே வேண்டாம்" என்றான் அரும்பு மீசையுடனிருந்த சின்னராசு.

அரும்பு மீசை மட்டுமல்ல அது. குறும்பு மீசையுங்கூட.

பிறகு எசக்கிமுத்து வாயைத் திறந்தான். "ஐயா நீங்க சொன்னத யோசிச்சிப் பாத்தோம். ஒங்க மதமாற்றத் தடைச்சட்டத்தோட மோத வேண்டாம்னு முடிவெடுத்துட்டோம்."

"சபாஷ்" என்றான் அன்னியன்.

"சாமி அவசரப்பட்டு அவார்டு குடுத்துறாதீக. எசக்கி முத்து இன்னும் முடிக்கல" என்று புதிர் போட்டான் சின்னராசு.

பிறகு எசக்கிமுத்து தொடர்ந்தான். "அதனால ஐயா, நாங்க எல்லாரும் சாதி மாறிரலாம்னு ஏகமனதா முடிவு பண்ணிட்டோம்."

"ஜாதியா?"

"ஆமாங்க ஐயா, நாங்க சின்ன சாதியா இருக்கப் போய்த்தான நீங்க எங்களக் கேவலப்படுத்துதீக. அதனால நாங்களும் ஒங்களப்போல பெரிய சாதிக்கி மாறிக்கிரலாம்னு முடிவு பண்ணிட்டோம். மதம் மாறத்தான் தடைச்சட்டம் இருக்கு; சாதிக்கி அது கெடையாதுங்களே! இனி இந்த கிராமத்துல ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு சாதி. எல்லாம் டாப் சாதிதான். மாடசாமிப் பெரியவர் குடும்பம் முதலியார் சாதி. மாரியப்பன் குடும்பம் செட்டியார் சாதி. வாத்தியார் தேவர். இந்தப் பெரியவுக காளிமுத்து ஐயா தெலுங்கு நல்லாப் பேசுவாக. அதனால அவுக நாயக்கராகப் போறாக. இந்த சின்னப் பய செந்திலு பொனலூர்ல இருந்தவன். அதனால அவன் நாயர்."

"நாயர் இல்ல அண்ணாச்சி, நம்பூதிரி."

"ஒம் பிரியம்டா செந்திலு. பெறவு, நம்ம சொள்ளமாடன் வீர சைவப் புள்ளமார்…"

பட்டியலை நீட்டிக் கொண்டே போன எசக்கி முத்துவை இடைமறித்தான் அந்நியன்.

முழுக்கைச் சட்டையை மடக்கிவிட்டபடி கேட்டான். "அது சரிங்க. தலைவங்க நீங்க ரெண்டு பேரும் என்ன ஜாதின்னு சொல்லவேயில்லீங்களே!"

அந்நியர்களுக்குப் பின்னால் அணிவகுத்து நின்ற அடியாட்களில் ரெண்டு பேர் ஜிப்பாவை உயர்த்திப் பட்டை பெல்ட்டைக் கழட்டுவதைப் பொருட்படுத்தாமல் எசக்கிமுத்து சொன்னான்.

"ஓ, அதக்கேக்கியளா, இவன் ஐயருங்க; நா ஐயங்கார்."

(தீம்தரிகிட, செப்டம்பர், 2003)

About The Author

1 Comment

Comments are closed.